Main Menu

சட்டவிரோதச் செயல்கள் அதிகரிப்பு : அறுவர் கைது

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி நிலையப்பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார்.

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டப்படுகின்ற போதும், அமுலிலுள்ள நிலையிலும் வியாழக்கிழமை (16), வெள்ளிக்கிழமை (17) இரு நாட்களாக மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது, 6 சந்தேக நபர்கள் கைதாகியதுடன், எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்படி கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் கே.தர்மசீலன் மற்றும் அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.துசாதரன் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தலைமையில் சென்ற உத்தியோகத்தர்களான ரி.நளீதரன், எஸ்.குகணேசன், கே.செந்தில் வண்ணன், எம்.ரவீதாஸ், மதுவரி நிலைய சாரதி தலதாவத்த ஆகியோரே இச்சந்தேக நபர்களைக்கைது செய்தனர். இதில் திருக்கோவில் பகுதியில் சட்டவிரோதமாக பியர் போத்தலை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அதே பகுதியைச்சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரான பெண்ணொருவர் வடிசாரத்தை தம்வசம் வைத்திருந்த நிலையில் கைதானார்.

மேலும், கல்முனை மதுவரி நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகபுரம் காயத்திரி கிராமத்தில் சட்டவிரோதமாக வடிசாராயத்தை தம்வசம் வைத்திருந்த மற்றுமொரு பெண் சந்தேக நபர் கைதானார். மேற்குறித்த 3 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர, நேற்று (16) ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் கல்முனை சந்தைத்தொகுதியில் தீர்வையற்ற சட்டவிரோத சிக்கரட்டுக்களை பொது இடத்தில் புகைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கெதிராக எதிர்வரும் 20 ஆம் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

இத்தேடுதலின் தொடர்ச்சியாக இன்று (17) நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் வடிசாரத்தை தம்வசம் வைத்திருந்த 45 வயதுடைய சந்தேக நபரொருவரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இச்சந்தேக நபரையும் எதிர்வரும் 20 திகதி சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இத்தேடுதல் நடவடிக்கையானது மேலும் தொடரவுள்ளதாகவும் பொது மக்கள் ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed