Main Menu

நிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்

இந்த செய்தியைப் பகிர்க >>>

நேற்று (10.05.2020) ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் நீர்மெத்தை வினியோகத்திற்காக மீராவோடையில் ஓரிடத்துக்கு செல்ல நேர்ந்தது. அங்கு நாம் நீர் மெத்தை வழங்கச்சென்ற அந்த நோயாளி 22 வயதே ஆன ஒரு இளைஞராவார்.

அவர் கால், கைகள் இயக்கமற்ற நிலையில், படுக்கைக்கையில் மிகவும் மெலிந்தவராகக் காணப்பட்டார். நாம் அந்த நபரின் தந்தையிடம் இவரின் இந்த நிலைக்கு காரணமென்ன என வினவிய போது, அந்த தந்தை பின்வருமாறு குறிப்பிட்டார்.

இவர் பிறப்பிலேயே வாய் பேச முடியாதவர். ஆனால், மிகவும் நல்ல சுகதேகியாக இருத்தவர். அரிசி ஆலையில் தொழில் செய்து வந்தாகவும் கூறிக்கொண்டிருந்த போது, பின்னால் ஒரு குரல் “மகன் இது தான் அவரின் பழைய போட்டோ” என்று ஒரு புகைப்படத்தைக் காட்டினார்கள்.

அதில் காணப்பட்ட நபர் மிகவும் அழகாகவும், நல்ல திடகாத்திரமான தோற்றத்திலும் மோட்டார் சைக்கிளின் மீது தொப்பி அணிந்தவராக காணப்பட்டார்.

புகைப்படத்தைப்பார்த்த பின் திரும்பிப்பார்த்த போது, அது அந்த நோயாளியின் தாய். அந்தத் தாயின் முகத்தைப்பார்த்த போது, அந்த தாயின் முகத்தில் காணப்பட்ட கவலை, அந்த இளைஞனின் பழைய நிலையையும் இன்றை நிலையையும் எனக்கு கண்ணாடியில் பார்த்து போன்ற உணர்வு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய அந்த தந்தை, அரிசி ஆலையில் வேலை செய்த போது அவருடன் வேலை செய்த நபர்களால் போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்தப்பட்டு, அதன் விளைவாக நோய் வாய்ப்பட்ட இவர். கடந்த மூன்று மாதங்களாக கோமா நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சென்ற வாரம் சுயநினைவைப்பெற்று வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறினார்.

தற்போது இரண்டு கால், கைகளும் இயக்கமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சாதாரண கூலித்தொழில் செய்யும் அந்தத்தந்தையின் வார்த்தைகளில் காணப்பட்ட கவலை கணக்கிட முடியாதவை என்றே கூற வேண்டும்.

இன்று எமது பகுதியில் போதைப்பொருள் பாவணை புற்றுநோய் போல் அதிகமான இளைஞர்கள், மாணவர்கள், பணக்காரர்கள் ஏன் உயர் பதவியிலுள்ளவர்கள் வரை சென்று எமது சமூகத்தைச் சீரழித்துக் கொண்டுள்ளது. இதிலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்காமல் அரசியலதிகாரம், அபிவிருத்தி, உரிமைகள் என காலத்துக்குக்காலம் உருவாக்கப்படும் அமைப்புகள். ஏன் போதையொழிப்புக்காகவும் தங்களது கவனத்தைச் செலுத்தக்கூடாது?

தற்போது பாதுகாப்புப்படையினர் போதையொழிப்பு நடவடிக்கையில் மிகத்தீவிரமாக இயங்கி வருகின்றனர். இதனைக்கருத்திற்கொண்டு FRDK, ஜம்இய்யத்துல் உலமா, ஸகாத் நிதியம், பிரதேச பள்ளிவாசல்கள், வர்த்தக சங்கம் போன்றன நிவாரண நடவடிக்கையில் ஒன்றிணைந்து இயங்கியது போல, தங்களிடமுள்ள தற்போதையப் கூட்டணியைப் பயன்படுத்தி, இந்த போதைத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புத் தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால், எமது சமுதாயத்தில் எதிர்காலத்தில் எமது பெண்பிள்ளைகளுக்கு சிறந்த மாப்பிள்ளைகளையாவது பெறக்கூடிய வாய்ப்பேற்படும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed