Main Menu

வீழ்ச்சியை நோக்கி நகரும் ஓட்டமாவடிக்கோட்ட சாதாரண தர பெறுபேறுகள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஏ.எம்.ஹனீபா (Career Counselor)
கொரோனா தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற சூழலில் இலங்கையும் இருக்கின்ற வளங்களைக்கொண்டு கட்டுப்படுத்தி, அதனைத்தடுக்கும் போராடி வருகின்றது. இச்சூழ்நிலையில், எமது பிரதேசமும் நாட்டின் சட்டங்களை மதித்து, எமது மக்களையும் பிரதேசங்களையும் பாதுகாத்துக்கொள்ள முனைப்போடு செயற்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

வறுமை, பசி, பட்டினியிலிருந்து மக்களைப் பாதுகாத்துக்கொள்ள பொறுப்புள்ள சமூக மட்ட அமைப்புகள் தங்களது பங்களிப்பைச்செய்து வரும் தருணத்தில், க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன.

சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின்படி, நாடளாவிய ரீதியில் பல கல்வி வலயங்கள் முன்னணி வகித்ததுடன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமும் ஓரளவு திருப்தி தரும் பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டது எனலாம்.

குறித்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் நான்கு முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய நிருவாகப்பரப்பு கூடிய நிலத்தொடர்பற்ற ஒரு கல்வி வலயமாகத் திகழ்கின்றது.

அந்த வகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 60% கல்வி வளர்ச்சியை அடைவு மட்டமாகக் கொண்டுள்ளதாகத் திருப்திப்பட்டுக்கொள்ளும் அதே வேளை, வலயத்திற்குட்பட்ட 5 பாடசாலைகள் பிற வலயத்திற்குள் உள்வாங்கக்கப்பட்டிருப்பதானது, தேசிய கணிப்பீட்டில் எமக்கு அதிர்ச்சியையும் பின்னடைவையும் தந்துள்ளதை நாம் மீட்டிக்கொள்ள முடியும்.

அந்த வகையில், க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்ட தேசிய மட்ட தரப்படுத்தளில் 97 வலயங்களில் மட்டக்களப்பு மத்தி 42 வது பெற்றுக்கொண்டமை ஓரளவுக்கு ஆறுதலளிக்கின்றது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ளடங்கும் கோறளைப்பற்று மேற்கு, ஏறாவூர், காத்தான்குடி கல்விக்கோட்டங்களிலுள்ள 31 பாடசாலைகளிலிருந்து மொத்தமாக 2185 மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சைக்குத்தோற்றி, 1453 பேர் மாத்திரமே சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக்கோட்டத்தின் 11 பாடசாலைகளிலிருந்து சுமார் 660 மாணவர்கள் பரீட்சைக்குத்தோற்றி 388 மாணவர்களே சித்தியடைத்துள்ளனர். குறித்த அடைவு மட்டம் 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, மிகவும் ஆபத்தான நிலையில் கல்வி வீழ்ச்சியை நோக்கி நகர்கிறதாகவே உள்ளது. சில கஷ்டப்பிரதேச பாடசாலைகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.

பெறுபேறுகளின் அடைப்படையில் நோக்குகின்ற போது, எமது பிரதேச பாடசாலைகளின் பரீட்சை பெறுபெறுகளின் வீழ்ச்சிக்கு பின்வரும் காரணங்கள் தாக்கம் செலுத்தி இருக்கலாமா? என நம்மை நோக்கி நாமே கேள்வி கேட்கத் தோன்றுகின்றது.

1. கல்வி கற்பதில் மாணவர்களுக்கு ஆர்வமின்மையா?

2. அதிகளவான பிரத்தியேக வகுப்புக்களா?

3. ஊட்டப்படசாலைகளின் அடைவு மட்டம் போதாதா?

4. மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் பாவனையா?

5. ஆசிரியத்தொழில் பகுதி நேரத்தொழிலாக மாறி வருவதா?

6. பெற்றோர்கள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் காட்டுகின்ற அக்கறையுடன் நின்று விடுகிறார்களா?

7. பாடசாலை அபிவிருத்தி, பழைய மாணவ சங்கங்களின் பங்களிப்பு போதியளவு இன்மையா?

இப்படி பல கேள்விகளையும், காரணங்களையும் நாம் எங்களுக்குள் கேட்டுக்கொள்ள முடியும்.

இது தவிர,

1. பாடசாலைகளின் அதிபர்கள் வலயக்கல்வி அதிகாரிகளை மதிக்கத்தவறுகின்றார்களா?

2. வலயக்கல்வி அதிகாரிகள் திட்டமிடுகின்ற கல்வி ரீதியான நடவடிக்கைகளை பாடசாலைகளில் அறிக்கையுடன் மாத்திரம் முன்னெடுக்கின்றமையா?

அவ்வாறும் இல்லையெனில்,

1. பாடசாலை அதிபர்கள் நடத்துகின்ற அதிகமான விழாக்கள் மாணவர்களின் கல்வி
நடவடிக்கைகளுக்கு தடையாகவுள்ளதா?

2. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் கடமையாற்றுகின்ற உயரதிகாரிகளின் கணிசமானோர் கோறளைப்பற்று மேற்கு கோட்டப்பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதனால் அவர்களின் மேற்பார்வை குறைத்து மதிப்படுகின்றதா? அல்லது பாடசாலைகளின் முகாமைத்துவம் கண்டு கொள்வதில்லையா? என ஆயிரம் கேள்விகள் எழாமலில்லை.

கடந்த வருடம் வலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரத்திற்குரிய விஷேட செயற்றிட்டங்கள் மூன்று கோட்டத்திற்கும் நடைமுறைப்படுத்தப்படட போதும், காத்தன்குடி மற்றும் ஏறாவூர் கோட்டம் அதனை முன்னெடுக்க கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிக்கோட்டம் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையா?

வலயக்கல்வி அலுவலகம் பெறுபேறுகளை அதிகரிக்க செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற போது, அதனைச் செயற்படுத்தாத பாடசாலைகளின் அதிபர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க முற்படும் வேளையில் ஏற்படுகின்ற அரசியல் தலையீடா?

எனப்பல கேள்விகளை எங்களுக்குள் எழுகின்ற போது, இதற்கான தீர்வினை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த வருட பெறுபேறுகள் இவ்வாறிருக்க 2020 ஆண்டு ஓட்டமாவடி கோட்டத்திலிருந்து சுமார் 750 மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சையை எதிர்கொள்ளவிருக்கும் இவ்வேளையில், கொரனா வைரஸின் தாக்கமும் ஏற்பட்டிருக்கின்றது.

கொரோனாவும் கடந்து போகும் என்ற மனோநிலையுடன் எமது பிரதேச கல்வி முன்னேற்றம் குறித்து சமூகத்தின் சகல மட்டத்தினரும், பொதுத்துறை உத்தியோகத்தர்களும் அக்கறையுடன் செயற்படுவோமாக இருந்தால், சமூகத்தினதும் பிரதேசத்தினதும் சாதாரண தரப்பரீட்சை அடைவு மட்டத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் காண முடியும்.

2018 ம் ஆண்டு 71.33% மாக இருந்த சாதாரண பெறுபேறுகளின் அடைவு மட்டம் 2019 இல் 58.78% மாகக் குறைந்த அதால பாதாளத்தை நோக்கியுள்ள நிலையில், தீர்க்கமான முடிவொன்றுக்கு வந்து திட்டம் வகுத்துச் செயற்படுத்தத் தவறுவோமாக இருந்தால், 2020 இல் இதை விடவும் பின்னடைவை நோக்கிச்செல்ல வாய்ப்புக்கள் அதிகம். அவ்வாறானதொரு நிலையேற்படுமாக இருந்தால், அபாயகரமான சூழலாக அமையும்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கல்விக்கோட்டத்திலுள்ள ஏழு பாடசாலைகளிலிருந்து 2018 ஆம் ஆண்டு 607 மாணவர்கள் சாதாரண பரீட்சைக்குத் தோற்றி 477 பேர் சித்தியடைந்துள்ளதுடன், 78.58 வீத சித்தியும், 2019 ஆம் ஆண்டு 591 மாணவர்கள் தோற்றி 433 பேர் சித்தியடைந்து 73.26 வீத சித்தியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

காத்தான்குடி கல்விக்கோட்டத்திலுள்ள பதிமூன்று பாடசாலைகளிலிருந்து 2018 ம் ஆண்டு 897 பேர் சாதாரண பரீட்சைக்குத்தோற்றி 537 பேர் சித்தியடைந்துள்ளதுடன், 59.86 வீத சித்தியும் 2019 ஆம் ஆண்டு 934 பேர் தோற்றி 632 பேர் சித்தி பெற்று 66.70 வீத சித்தியும் பதிவாகியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed