Main Menu

அனாசார நிலையமாக மாறியுள்ள பாலைநகர் பல்நோக்குக்கட்டடம் : மக்கள் விசனம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட் பாலைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான பல்நோக்குக்கட்டடம் கவனிப்பற்ற நிலையில், போதை பாவிப்போரின் நிலையமாகவும் கலாசார சீரழிவுகள், அனாசாரங்கள் இடம்பெறும் இடமாகவும் மாறியுள்ளமை கவலையளிப்பதாகவும் இதனால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல இலட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் மக்களின் அத்தியாவசிய பாவனைக்காக அமைக்கப்பட்ட குறித்த கட்டடம் கவனிப்பாரற்று கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த செப்டெம்பர் 07, 2018ல் “கவனிப்பாரற்றுக்கிடக்கும் பாலைநகர் கட்டடம் : மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு, துஷ்பிரயோகம் -மக்கள் விசனம்”(https://www.thehotline.lk/archives/14162) எனும் தலைப்பிட்டு சம்பந்தப்படட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிக் செய்தியொன்றை வெளியிட்டிருந்தோம்.

சுமார் ஒன்றரை வருடங்களாகியும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை கவலையளிப்பதுடன், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டிடத்தக்கது.

ஏற்கனவே கட்டடத்தின் வெளிப்பகுதி சேதமாக்கப்பட்டு, சுற்றுப்புறச்சூழல் காடாகக் காட்சி தரும் நிலையில், தற்போது கதவுகள் உடைக்கப்பட்டு அதனுள் காணப்பட்ட பெறுமதியான தளபாடங்கள், புத்தகங்கள் களவாடப்பட்டுள்ளதுடன், அலுமாரி உடைக்கப்பட்டு புத்தகங்கள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவது கவலையளிப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, மேற்படி விடயம் தொடர்பில் அதீத அக்கறை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன், திருத்தியமைக்கப்பட்டு இப்பிரதேச மக்கள் பயன்பெறும் வகையில் பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது பயன்படுத்தும் வகையில் பொருத்தாமானவர்களிடம் அல்லது பொது மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். இது விடயம் தொடர்பில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர், கிராமய அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவகர், பிரதேச அரச, அரச சார்பற்ற, சமூக அமைப்புக்கள், பள்ளிவாயல்கள் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென்பது இப்பிரதேச மக்களது எதிர்பார்ப்பாகும்.

பின்னிணைப்பு :
சேதமாக்கப்பட்டுள்ள குறித்த கட்டடம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் 07, 2018ல் நாம் வெளியிட்ட செய்தி.

பாலைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான பல்நோக்குக்கட்டடம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாகவும், இதற்காகச் செலவு செய்யப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல இலட்சம் பெறுமதியில் இப்பிரதேச மக்களின் நன்மைகருதி கட்டி முடிக்கப்பட்ட குறித்த கட்டடம் கவனிப்பாற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ளதால், இரவு நேரங்களின் மதுப்பிரியர்களின் வாசஸ்தலமாகவும் காணப்படுகின்றது. இதன் காரணமாக, இப்பிரதேச மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவதுடன், இக்கட்டடத்தை இரவு நேரங்களில் பயன்படுத்தும் போதைப்பவனையாளர்களினால் ஆபத்துக்கள் ஏற்படும் அச்ச சூழ்நிலையும் காணப்படுகின்றது.

பாலியல் தேவைகளுக்கும் இது பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால் கலாசார சீரழிவுக்கும் குறித்த கட்டடம் துணை போகும் நிலையுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த கட்டடம் பாலைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குத் சொந்தமானதாகக் காணப்பட்டாலும், மக்களுக்கு உபயோகப்படும் வகையில் எந்தவித தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாமல் சேதமடைந்து வருகின்றது.

இது தொடர்பில் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் போன்ற பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் பாராமுகமாக இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் கட்டடத்தினுள் காணப்பட்ட தளபாடங்கள், கதவுகளும் களவாடப்பட்டும் கட்டடத்தின் மேற்கூரையும் சேதமடைந்து காணப்படுவதுடன், சரியான பராமரிப்பின்மை காரணமாக கட்டடத்தைச்சுற்றி பற்றைகள் வளர்ந்து சுற்றியுள்ள மதில் நிறம் மாறியும் காணப்படுகின்றது.

எனவே, குறித்த கட்டடம் தொடர்பில் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் போன்ற பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடிக் கவனமெடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed