Main Menu

வெளிச்சத்துக்கு வரும் ரவூப் ஹக்கீமின் இரகசியங்கள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட்-19 தொற்று காரணமாக தொடரான ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் சகல இன மக்களும், சகல தரப்பினரும் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கினார்கள். இந்தச்சிக்கலான நேரத்தில் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் குறிப்பாக, பாலித தேவரப்பெரும, ரஞ்சன் ராமநாயக்க போன்றோர் களத்திலிறங்கி தம்மாலான உதவிகளை மக்களுக்கு வழங்கினார்கள். அவர்கள் உதவியமைக்கு ஆதாரமாக குறித்த நேரத்தில் போட்டோக்களும் எடுத்துக்கொண்டார்கள்.

ஆனால், முஸ்லிம் தலைமைகளை வெளியே காணவில்லை. அவ்வப்போது ரவூப் ஹக்கீம் முகநூலில் தோன்றி நோன்பு தொடர்பில் உரையாற்றினாரே தவிர, வேறெந்த செயற்பாட்டினையும் அவர் மேற்கொண்டதாகக் காணக்கிடைக்கவில்லை. ரவூப் ஹக்கீம் வெளியே தலை காட்டாமை தொடர்பில் சமூக மட்டத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணமிருந்தன. இருந்தும், ரவூப் ஹக்கீமைக் காணக்கிடைக்கவில்லை.

இதற்கிடையே திருகோணமலையில் எம்.எஸ்.தௌபீக், மட்டக்களப்பில் எச்.எம்.எம்.றியாழ், ஹபீப் றிபான், அலி ஸாஹிர் மௌலானா, ஹாபிஸ் நஸீர் அஹமட், அம்பாறையில் பைசல் காசிம், எச்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்ஸூர், ஏ .எல்.நஸீர், ஏ.எல். தவம், ரஹ்மத் மன்ஸூர் உட்பட பலர் உலருணவுப்பொருட்களையும் இன்னோரன்ன உதவிகளையும் அந்தந்த பிரதேசத்து மக்களுக்கு வழங்கியமை தொடர்பில் உதவி பெற்றவர்களின் நன்றி தெரிவித்தலின் மூலமும், அவர்களின் முகநூல் பதிவுகளின் மூலமும் அறியப்பட்டன.

இப்போதும் ரவூப் ஹக்கீம் எங்கும் ஏதாவது செய்துள்ளாரா? என்று பரவலாகத் தேடப்பட்டது. அடுக்கடுக்கான விமர்சனங்கள் ரவூப் ஹக்கீம் மீது வைக்கப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பில் ரவூப் ஹக்கீமின் பிரத்தியேகச் செயலாளராக இருந்த நயீமுல்லாஹ்விடம் கேட்டுப்பார்த்தேன். அவருக்கு எதுவும் தெரியாதென்றே பதில் தந்தார். பின்னர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் ரவூப் ஹஸீரிடம் இது பற்றி வினவினேன். அவர் அது பற்றி எதுவும் தனக்கும் தெரியாதென்றும், ரவூப் ஹக்கீமிடம் விசாரித்துச் சொல்வதாகச் சொன்னார். மறுநாள் ரவூப் ஹக்கீமிற்கு ரவூப் ஹஸீர் அனுப்பிய ஈ மெயிலுக்கு ரவூப் ஹக்கீீம் அனுப்பிய பதில் என கீழேயுள்ள குறிப்பை ரவூப் ஹஸீர் அனுப்பி வைத்தார்.

“Donations and provision distribution is a matter of personal joy which I have been doing throughout during every Ramadan season. However, I never would wish that should be given publicity. Besides with an election ahead of us will show me in poor light. Instead we could do short videos on Ramadan and what is expected of us during this pandemic situ”

“தர்மம் எனது தனிப்பட்ட விடயம். அதனை எவருடனும் பகிர்ந்து கொள்ளவோ, அதன் மூலம் தான் இலாபமடையவோ, விளம்பரம் தேடவோ விரும்பவில்லை” என ரவூப் ஹக்கீம் கோபத்தோடு, கண்டித்ததாகவும் சொன்னார்.

இவ்வாறான சூழலில் ரவூப் ஹக்கீமின் சில இரகசியங்கள் கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தொடக்கம் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிலரது முகநூல்களில் அம்பலமாகின.

ரவூப் ஹக்கீம் நேரடியாக எந்தப்பொருட்களையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களையோ அல்லது ரவூப் ஹக்கீம் தனது ஆதரவாளர்களையோ நேரில் சந்தித்து வழங்காமல், குறிப்பிட்ட பிரதேச பள்ளிவாயல் நிர்வாகங்களுக்கு சுமார் இரண்டு கோடிகளுக்கும் அதிகமான பொருட்களை, கட்சி பேதம் பாராது வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

“வலது கையால் வழங்குவதை இடது கைக்கு தெரியாமல் தர்மம் செய்வதெப்படி” என்பதை ரவூப் ஹக்கீம் செயலில் காட்டியுள்ளார். அரசியலுக்கப்பால் ரவூப் ஹக்கீம் ஒரு உண்மையான மனித நேயமுள்ள இஸ்லாமியன் என்பதனை இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

இது பற்றி மேலும் துருவிப்பார்த்த போது, ரவூப் ஹக்கீம் இந்த நாட்டில் ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து மிகவும் இரகசியமாக இந்த உதவி வழங்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பது தெரிய வந்தது. ஆனால், அவை எவற்றுக்கும் அவர் அல்லாஹ்வையும், பெற்றுக்கொண்ட குறித்த ஊரின் பள்ளி நிர்வாகங்களையும் தாண்டி வேறு யாரையும் சாட்சியாக ஆக்கிக்கொள்ளவில்லை. உதவியை வழங்கும் போது, புகைப்படமெடுத்து தனது முகப்புத்தகத்தில் போட்டு தன்னை வெளிப்படுத்தவுமில்லை.

அப்படியானால், ரவூப் ஹக்கீமின் இந்த இரகசியங்கள் எப்படி வெளிச்சத்திற்கு வந்தன? இதனை அம்பலப்படுத்தியது யார்? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆம், அக்குரனை பள்ளிவாயலுக்கு பல தனவந்தர்கள் வழங்கிய நிவாரண நிதி பற்றிய அறிக்கையை அந்த நிர்வாகம் NOTICE BOARD இல் பகிரங்கப்படுத்தி இருந்தது.

அக்குறனையைச் சேர்ந்த பெரும் பெரும் தனவந்தர்கள் பலரது பெயர்களுக்கிடையில் ரவூப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட நிவாரண நிதியான 36 இலட்சம் ரூபாய்களும் அங்கே போடப்பட்டிருந்தது. அப்பட்டியலில் போடப்பட்டிருந்த தொகைகளுள் மிக அதிகமான தொகையாக ரவூப் ஹக்கீம் – 36 இலட்சம் என போடப்பட்டதை அவதானித்த அக்குரனை நண்பர்கள் பலர் அதனை முகநூலில் பகிர்ந்து தமது நன்றியினைத் தெரிவித்திருந்தார்கள்.

குறித்த பட்டியல் வெளியானவுடன் தான் இன்னும் பல இரகசியங்கள் ரவூப் ஹக்கீம் தொடர்பில் வெளியாகின.
உடுநுவரையைச் சேர்ந்த ஒருவர் அந்தப்பகுதிக்கு 32 இலட்சம் பெறுமதியான ரவூப் ஹக்கீமின் நிவாரண உதவி கிடைத்ததென்றும், திகனை, குண்டசாலைப் பகுதிகளுக்கு மொத்தமாக 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப்பொருட்கள் பகிர்தளிக்கப்படுவதை ஆதாரத்திற்கு சில போட்டோக்களோடு இன்னொருவர் பகிர்ந்திருந்தார்.

இவ்வாறாக திடீர் திடீரென தெல்தோட்டை கம்பளை, மடவளை, கண்டி நகர், உடதலவின்ன, கலகெதர, தெஹிதெனி மடிகே, அபகஹலந்த, கடுகன்னாவ, யட்டிநுவர, பன்விலை, கல்ஹின்னை, பூஜாப்பிட்டிய என அவ்வப்பிரதேசங்களிலுள்ள இளைஞர்கள் மில்லியன் கணக்கில் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ரவூப் ஹக்கீம் மூலமாக கிடைத்த பொருட்களை கட்சி பேதமின்றி உண்மையாக தேவையுடையவர்களென அடையாளம் காணப்பட்டவர்களுக்கு வழங்குவதில் ஈடுபடும் படங்களைப் பகிர்ந்திருந்தனர்.

ஆனால், உலருணவுகள் வழங்கப்படும் ஒரு படத்தில் கூட ரவூப் ஹக்கீமைக் காண முடியவில்லை. பதிலுக்கு பழைய படங்கள் சிலவற்றை இணைத்திருந்தார்கள்.

இன்று இந்தப்பதிவை இடும் வேளையில் ஆதாரத்திற்காக அவற்றைத் தேடிய போது பல பதிவுகள் அகற்றப்பட்டிருந்தன. ஏனென்று சிலரிடம் கேட்ட போது ரவூப் ஹக்கீமின் வேண்டுகோள் என அறிய முடிந்தது.

கொரோனாவினால் இந்த நாடு முடக்கப்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்து ரவூப் ஹக்கீம் இயங்கிக்கொண்டு தான் இருந்திருக்கிறார். ஆனால், அவை எதுவும் வெளிச்சத்திற்கு வரவில்லை. காரணம், ரவூப் ஹக்கீமிடம் அரசியல் நோக்கம் இருக்கவில்லை. இதுவரை அரசல்புரசலாக கிடைத்த தகவல்களின்படி அட்டுலுகம தனிமைப்படுத்தலுக்குள்ளான போது, பெருந்தொகை மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், அதனையடுத்து, அக்குறணை தொடர்சியாகத் தனிமைப்படுத்தப்பட்ட போது, லொறி லோடுகளாக மாவும், அரிசியும் என கடந்த மாதமே ரவூப் ஹக்கீம் தனது நிவாரண உதவிகளை வழங்கியிருந்தார். ஆமை ஆயிரம் முட்டை இடுவது போல ஆரவாரங்கள் எதுவுமின்றி செய்து கொண்டிருந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

எவ்விதமான விளம்பரமுமில்லாமல் மனித நேயத்துடன் வெவ்வேறான உதவிகளை ரவூப் ஹக்கீம் செய்துள்ளார். அத்தோடு, எல்லா உதவிகளையும் தகுதியான எல்லோருக்கும் கிடைக்கின்ற வகையில் பள்ளிவாயல் நிர்வாகங்களிடமே ஒப்படைத்துள்ளார். அரசியலுக்கப்பால் ரவூப் ஹக்கீமின் இந்தப்பணி போற்றுதலுக்குரியதே.

இன, மத வேறுபாடுகளுக்கப்பால், ரவூப் ஹக்கீமின் இந்த மனிதாபிமானப்பணி பல தோட்டப்புற தமிழ் மக்களுக்கும், பெரும்பான்மை இன சிங்கள மக்களுக்கும் அந்தந்த சமூகம் சார்ந்த பிரதிநிதிகளூடாக வழங்கப்பட்டுள்ளதாக பன்விலை, கம்பளை போன்ற பிரதேசங்களிலிருந்து தெரிய வருகிறது.

ரவூப் ஹக்கீம் கிழக்கிற்கு உதவவில்லை. வடக்கிற்கு உதவவில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கமையவே கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன என வழங்குபவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலைக் குறி வைத்து வாக்கு வியாபாரம் செய்கிறார்கள் எனப்பல விதமான விமர்சனங்கள் இருந்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே பரந்தளவில், சிறந்த முறையில் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றதென்பதை எவரும் மறுக்க முடியாது.

ரவூப் ஹக்கீம் வழங்கி வரும் நிவாரணப் பொருட்களின் பெறுமதி கண்டியில் மாத்திரம் இதுவரை இரண்டு கோடி ரூபாய்களைத் தாண்டி இருப்பதை ஆதாரங்களோடு ஒருவர் அட்டவணைப்படுத்திய பதிவொன்றையும் முகநூலில் கண்ணுற்றேன்.

அத்தோடு, ரவூப் ஹக்கீம் இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்த பணிகள் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இன்னும் எங்கெல்லாம் அவரது இரகசியமான நிவாரண உதவிகள் சென்றுள்ளன என யாருக்குத் தெரியும்?

தற்போது கிடைத்த மற்றொரு தகவல் :
கண்டி சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ஹக்கீம், அங்குள்ள முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பு பிடிக்கவும், திறக்கவும் ஏற்பாடுகளைச்செய்து விட்டு வந்துள்ளார்) அலைவரிசைகள் தண்டோரா போட்டு பறையடித்துக் கொண்டிருக்கின்றன.

மேலும், இவ்வாறு மறைமுகமாக தான் செய்த தர்மங்களைப் பகிரங்கப்படுத்துவதை ரவூப் ஹக்கீம் விரும்பாத போதும், சிலரின் தவறான விமர்சனங்களினால் உண்மையை அறியாத மக்கள் தவறிழைத்து, அதற்கான பாவத்தை இந்த புனிதமான மாதத்தில் சுமக்க வேண்டி வருமென்பதால் தான் இவ்விடயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறேன்.

இனியும் யார் என்ன சொன்னாலும், கவலையில்லை. இறைவன் ரவூப் ஹக்கீமின் இரகசியமான உயர்ந்த பணிக்கு நற்கூலியை வழங்கப்போதுமானவன். இறைவன் அன்னாரின் தூய எண்ணத்தை அங்கீகரித்து, நிறைவான கூலியை வழங்குவனாக. ஆமீன்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed