Main Menu

இஸ்ரேல் மீதான முஸ்லிகளின் கவனத்தை திசை திருப்பலும் : ஈரான் மீதான சதாம் ஹுசைனின் படையெடுப்பும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதினாறாவது தொடர்
முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது

இஸ்ரேல் தனது இருப்பைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. இதில் தோல்வியடைந்தால் எமது யூத தேசம் கைவிட்டுப்போய் விடுமென்ற அச்சம் யூதர்களுக்கு ஏற்பட்டது.

இதனைத்தடுப்பதற்காக மத முரண்பாடுகளை மேலோங்கச்செய்வதுடன், தேசியவாதத்தைத் தூண்டி விட்டால், முஸ்லிம்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் அதிகரித்து அவர்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொள்வார்கள். அதனால் கவனம் தங்களை விட்டும் திசை திருப்பப்பட்டு விடுமென்று யூதர்கள் சிந்தித்தார்கள்.

அத்துடன், இஸ்ரேல் உருவானதிலிருந்து மன்னர் ஷா தலைமையிலான ஈரான் தங்களுக்கு நீண்ட கால நட்பு நாடாக இருந்தது. அங்கு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியினால் அது திடீரென எதிரி நாடாக மாறி விட்டது.

தற்போது நட்பாக இருக்கின்ற ஏனைய இஸ்லாமிய நாடுகளும் எதிர்காலங்களில் எதிரி நாடாக மாறி விடமாட்டாதென்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை. அது ஆட்சியாளர்களின் மனோநிலையைப் பொறுத்ததென்று யூதர்கள் சிந்தித்தார்கள்.

அத்துடன், இஸ்ரேலின் மேலதிகப் பாதுகாப்புக்காக மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கப்படைகளை நிரந்தரமாகக் காலூன்றச் செய்வது அவசியமென இஸ்ரேல் திட்டமிட்டது. ஆனாலும், அதற்குரிய சாத்தியம் அப்போது இருக்கவில்லை. அந்தச்சூழ்நிலை உருவாகும் வரைக்கும் அல்லது உருவாக்கப்படும் வரைக்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் காத்துக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் ஈரான் இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பு அந்நாட்டில் அதிரடி மாற்றங்கள் நடைபெறத் தொடங்கியது. மதச்சார்பற்ற நாடாக மேற்கத்தேய ஆடை கலாசாரம் மேலோங்கியிருந்த நாட்டில் கடுமையான இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்துவது பாரிய சவாலாக இருந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் அனைத்து இயற்கை வளங்களையும் கொண்ட பெரிய நாடு. பல தசாப்த காலமாக அந்நாட்டினை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு சுரண்டிக்கொண்டிருந்தது அமெரிக்கா. இஸ்லாமியப் புரட்சியினால் அது கைவிட்டுப்போனமை அமெரிக்காவுக்கு பாரிய இழப்பாகும். இதனை அமெரிக்காவும் விரும்பவில்லை.

மறுபுறத்தில் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அது முக்கியத்துவம் வழங்கியதுடன், மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்பதற்காக களத்தில் போரிடுகின்ற பாலஸ்தீனப் போராளிகளுக்கு ஈரான் இஸ்லாமியப் புரட்சியானது புதிய உட்சாகத்தைக் கொடுத்தது. இது இஸ்ரேலுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.

அதனால் இஸ்லாமியப் புரட்சியாளர்கள் தங்களது ஆட்சியைப் பலப்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்காமல், உடனடியாக செயலில் இறங்க அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டது. அதற்காக இவர்கள் கையிலெடுத்த துரும்பு தான் ஈரான் – ஈராக் எல்லைப் பிரச்சினையாகும்.

ஈரான், ஈராக் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் எல்லைப்பிரச்சினை இருந்தது. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியது அமெரிக்கா. அப்போது ஈராக்கிய அதிபராக சதாம் ஹுசைன் இருந்தார். அவர் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்.

எல்லைப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடாத்துவதற்கு அமெரிக்கா ஈராக்கைத் தூண்டியது. தனக்கெதிரான ஆட்சியாளர்களை அழிப்பதற்கு அமெரிக்கா தன்னைப் பயன்படுத்துகிறததென்றும், சகோதர முஸ்லிம் நாடுகளுக்கிடையில் சண்டையை மூட்டி விடுகிறதென்றும் சதாம் ஹுசைன் சிந்தித்திருப்பார். ஆனாலும், இதற்குப் பின்னணியில் யூதர்கள் உள்ளார்கள் என்பதனை அறிந்திருப்பாரோ தெரியவில்லை.

இதனை வெறும் எல்லைப்பிரச்சினையாக மட்டும் நோக்காமல் சீயா – சுன்னிப் பிரச்சினையாகவும் சித்தரிக்கப்பட்டது. மத்திய கிழக்கில் பெரும்பான்மையாகவுள்ள சுன்னிப்பிரினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அமெரிக்காவுடன் சேர்ந்து சதாம் ஹுசையினால் இந்தப்பிரசாரம் முடுக்கி விடப்பட்டது.

இஸ்ரேலின் மறைமுகத் திட்டமிடலுடன் அமெரிக்காவின் அழுத்தத்தின் பேரில் ஈரானுக்கெதிராக சதாம் ஹுசைன் போரைத் துவங்கினார். இந்தப்போரை ஈரான் எதிர்பார்க்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றி தன்னை இஸ்திரப்படுத்திக் கொள்ளாத நிலையில், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆரம்பத்தில் சில பிரதேசங்களை ஈரான் இழந்தது.

பின்பு அமெரிக்காவின் எதிரி நாடுகளிலிருந்து அவசர அவசரமாக ஆயுத உதவிகளைப் பெற்றுக்கொண்டு ஈரான் தொடர்ந்து போரிட்டது. ஈராக் எதிர்பார்த்தது போல யுத்தம் அமையவில்லை. ஆரம்பத்தில் இழந்த நிலங்களை ஈரான் மீண்டும் கைப்பற்றியதுடன், கள நிலவரம் ஈரானுக்குச் சாதகமாகவே இருந்தது.

ஈராக்கின் இந்தப்படையெடுப்பு விரைவில் முடிவடைந்து விடுமென்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது எட்டு வருடங்களையும் தாண்டிச்சென்று அர்த்தமில்லாத சண்டையாக இருந்தது. இரு நாடுகளிலும் பல இலட்சம் உயிர்கள் கொல்லப்பட்டு, கணக்கிட முடியாத பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டது.

சதாம் ஹுசைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்காவும், பண உதவிகளை சவூதி அரேபியாவும் வழங்கியது. இந்த யுத்தத்தினால் அமெரிக்கா எதிர்பார்த்த பலனை அடையவில்லை. மாறாக, ஈரானும் ஈராக்கும் தங்களை இராணுவ ரீதியில் பலப்படுத்திக்கொண்டது.

தொடரும்..

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed