Main Menu

கொரனா வேண்டி நிற்பது : பொறுமை, தௌபா, உண்மை – ஜுனைட் நளீமி

இந்த செய்தியைப் பகிர்க >>>

நோன்பின் இறுதிப்பத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். நரக விடுதலை வேண்டிப்பிரார்த்திக்கப்படும் நாட்கள். இறுதிப்பத்தில் இஹ்திகாப் இருப்பதற்காக தொழில்களுக்கு விடுமுறையளித்து விட்டு, பள்ளிகளில் அடைக்கலம் பூண்டு கொள்ளும் நமக்கு இன்றைய நாட்கள் இலவச விடுமுறையாகவே அமைந்து விடுகின்றது.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெற சமூக இடைவெளியுடன் கூடிய பாதுகாப்பினைப்பேணுவது இஸ்லாத்திலுள்ள ஒன்றாகும். மாறாக, நாம் எதனையும் அலட்சியப்படுத்தி வாழ முற்படுகின்றோம். நாட்டின் சட்டங்கள், சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்கள், ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் சமய, கலாசாரத் திணைக்களம் உள்ளிட்ட இலங்கை இஸ்லாமியர்களை வழிப்படுத்தும் அமைப்புக்களின் தீர்மானங்களைப் புறந்தள்ள முற்படுகின்றோம்.

எமது பகுதியில் வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிப்படையவில்லையே. நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டுமென்ற மனப்பாங்கு நாளை ஒரு தவறு இடம்பெற்றால், எத்தகைய எதிர்வினைகளைச் சமூகத்தின் மீது பாதிக்குமென்பதை நாம் சிந்திப்பதில்லை. சாராயக்கடை திறந்தார்கள், சந்தைகளில் அல்லுண்டார்கள். அடுத்த சமய நடவடிக்ககைகள் இடம்பெறுகின்றன.

எனவே, நாம் ஏன் அடைபட்டிருக்க வேண்டுமென்று அடுத்தவர்களுடன் எம்மை ஒப்பிட்டுப்பார்க்கும் சமூகமாக மாறி விட்டுள்ளமை கவலையளிக்கின்றது. முஸ்லிம்கள் முன்மாதிரியானவர்கள், சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படுவார்கள் என்பதனை நாம் நிரூபிக்க முற்பட வேண்டும். இஸ்லாமிய வரலாறு குர்ஆன், ஹதீஸ் என்பன அவற்றையே போதிக்கின்றன.

சமூக இடைவெளி முஸ்லிம்களுக்கு அழகிய சோதனையே

நபி மூஸா (அலை) தனது கூட்டத்தாருடன் நாற்பது வருடங்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். யூசுப் அலை நிரபராதியாக இருந்த போதும், தீங்கிலிருந்து பாதுகாப்புப்பெற சிறையே மேலென விரும்பி, சிறை வாழ்க்கையை ஏற்றுக்கொண்டார்கள். அதனால் ஆட்சியதிகாரம் இறைவனால் வழங்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களும் அவரது கூட்டத்தாரும் சிஹ்பு அபீதாலிப் பள்ளத்தாக்கில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். மூன்று வருடங்களின் பின் வெற்றியாளர்களாகத் திரும்பினார்கள். இவ்வாறான பல சம்பவங்கள் எமக்குப் படிப்பினையாக அமைகின்றது.

தனி மனித, சமூக இடைவெளிக்கு மிகப்பொருத்தமான சம்பவமாக கஹ்ப் இப்னு மாலிக் வரலாறு போதுமானது. கஹ்ப் இப்னு மாலிக்கை விட நாம் ஒன்றும் பாரிய தனிமைப்படுத்தல் சோதனைக்கு ஆளாகவில்லை. இறைவனின் கட்டளைக்குப் பணிந்து உண்மையாளராக அத்தாட்சிப்படுத்தப்பட்டார்கள். நீண்டதொரு அறிவிப்பில் கஹ்ப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் நியாயமான காரணம் எதுவுமின்றி தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. யுத்தம் முடிந்ததும் நபி அவர்கள் மதீனாவை வந்தடைந்ததும் யுத்தத்தில் பங்கு கொள்ளாதவர்கள் ஒவ்வொரு காரணங்களைக்கூறி நபியவர்களிடம் மன்னிப்புப் பெற்றனர்.

கஹ்ப் இப்னு மாலிக் (ரலி) அவர்களோடு மேலும் இரு சஹாபாக்கள் உண்மையையே கூறினர். இவர்கள் தொடர்பான இறைவனின் தீர்ப்பு வரும் வரை தனித்திருக்குமாறு நபியவர்கள் பணித்தார்கள்.

சோதனையின் உச்ச கட்டம் எவரும் கஹ்ப் இப்னு மாளிக்கோடு பேசவோ, உறவாடவோ வேண்டாமென நபியவர்கள் பணித்தார்கள். நபியவர்களின் கட்டளைக்கு அடிபணிந்த போதும், உலகே வெறுக்கமளவுக்கு சமூக ஒதுக்கல் கஹ்ப் இப்னு மாலிக்கை மாற்றியது. போதிய செல்வமுள்ளவராகவும், நற்பெயர் கொண்டவராகவும், சமூக அந்தஸ்து ப்பெற்றவராகவும் காணப்பட்ட கஹ்ப் இப்னு மாலிக் (ரலி) அவர்களை இறைவன் சோதிக்க நாடினான்.

அண்டை நாட்டு அரசனிடமிருந்து தூது வருகின்றது. நீர் எம்முடன் சேர்ந்து விடும். உனக்கான கண்ணியத்தையும் அந்தஸ்தையும் நாம் தந்து விடுவோம். நீ சிறுமைப்பட்டு வாழ வேண்டிய தேவையில்லையென அதில் எழுதப்பட்டிருந்தது.

அதனை தனது கையினால் கிழித்தெறிந்தார்கள். உலகம் விசாலமானதாகக் காணப்பட்ட போதும், அவர்களுக்கு மிகக்குறுக்கமானதாகவே காணப்பட்டது. உள்ளம் ஒடுங்கி குருகிக்காணப்பட்டது. இறைவனிடமேயன்றி வேறெங்கும் புகலிடமில்லையென்பதில் திடமாக இருந்தார்கள்.

ஐம்பது நாட்களுக்குப்பின்னால் இறைவன் அவர்களை மன்னித்து விட்டான் என வஹி மூலம் அறிவிக்கின்றான். அனறைய நாள் அவர்களுக்கு பெருநாளைப்போன்று காணப்பட்டது. செய்தி கொண்டு வந்த ஸஹாபாத் தோழருக்கு தன்னிடம் காணப்பட்ட மூன்று பெறுமதியான ஆடைகளை அன்பளிப்புச் செய்தார்கள் கஹ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்.

அவர்களே உண்மையாளர்கள் என இறைவன் வஹி மூலம் அத்தாட்சிப்படுத்தினான். இதனை விட என்ன பரிசினை ஒரு முஸ்லீம் உலகில் பெற முடியும். மறுமைக்கான சான்றிதழ் இதனை விட என்ன தான் அமைய முடியும்.

இதனை சூறா தவ்பா 118வது வசனம்: ‘(பின் தள்ளி வைக்கப்பட்ட தீர்ப்பு குறித்து) விட்டு வைக்கப்பட்டிருந்த அம்மூவரையும் (இறைவன் ) மன்னித்து விட்டான். பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி விட்டது. அவர்களது உள்ளங்களும் குறுக்கமாகக் காணப்பட்டது. அல்லாஹ்வேயன்றி, தங்களுக்கு ஒதுங்குமிடம் இல்லையென்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து விளகிக்கொள்ளும் பொருட்டு அவர்களை அல்லாஹ் மன்னித்தான். நிச்சயமாக, அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்’ எனக்குறிப்பிடுகின்றது.

எனவே, ஒரு முஸ்லிமைப்பொறுத்தவரை தனிமைப்படுத்தல் ஒரு சோதனை. தன்னைத் தூய்மைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம். தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு தவ்பா செய்யக் கிடைத்த பாக்கியம். அவ்வாறு நாம் தனித்திருந்து சட்டதிட்டங்களை யார் பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் பேணிப்பாதுகாத்து நடக்கும் போது, அல் குர்ஆன் குறிப்பிடும் உண்மையாளர்கள் கூட்டத்தில் இடம்பிடிக்க முடியும்.

இதனை தவ்பாவின் 119 வசனம் கூறி முடிகின்றது. ‘ஈமான் கொண்டவர்களே, அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உண்மையாளர்களுடன் ஆகி விடுங்கள்’ எனக்குறிப்பிடுகின்றது.

எனவே, இன்றைய காலப்பகுதியில் இந்த கொரோனா சோதனையிலிருந்து விடுபடும் வரை அதனை அரசு முறையாக அறிவிக்கும் வரை சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, எமது பெருநாள் கொண்டாட்டங்கள், ஆடை ஆபரணக் கொள்வனவிலிருந்து தவிர்ந்து, உண்ண உணவில்லாமல், உடுக்க உடயில்லாமல், குடிக்க பால்மா இல்லாமல், மருந்து கொள்வனவிற்குப் பணமில்லாமல் கஷ்ட்டப்படும் சகோதரர்களுக்கு தேடிச்சென்று கொடுக்கும் போது, நிச்சயமாக இலங்கை சமூகங்கள் எம்மை உண்மையாளர்களாக, சத்தியவான்களாக பறைசாற்றும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed