Main Menu

அரசியல்வாதிகளுக்கு “அலமடி” கட்டுகின்ற நாம், சமூகப்பிரச்சினையில் அக்கறை செலுத்தாதது ஏன்?

இந்த செய்தியைப் பகிர்க >>>

முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது
பாதுகாப்புச்செயலாளர், இராணுவத்தளபதி, கடற்படைத்தளபதி, பதில் பொலிஸ் மாஅதிபர் உட்பட பாதுகாப்பு சார்ந்த உயர்மட்ட தூதுக்குழுவொன்று கடந்த வியாழக்கிழமை (14.05.2020) அம்பாறை மாவட்டத்தின் சர்ச்சைக்குரிய விகாரைகளான தீகவாபி, மாணிக்கமடு, பொத்துவில் முகுது போன்றவற்றுக்கு விஜயம் செய்தனர்.

இது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களின் உத்தரவின் அடிப்படையிலான விஜயமாகும். ஆனாலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக படை அதிகாரிகளின் இவ்விஜயத்தின் உள்நோக்கம் குறித்து எந்தவொரு எழுத்தாளர்களும் திரும்பிப்பார்க்கவில்லை.

அரசியல்வாதிகளுக்கு “அலமடி” கட்டத்தெரிந்த எழுத்தாளர்களான நாங்கள் எவரும் சமூக ரீதியிலான பிரச்சினைகள் பற்றி ஆர்வங்காட்டுவதில்லை. சமூகத்தை விட, கறைபடிந்த அரசியல்வாதிகளின் எலும்புகள் எங்களுக்கு இனிப்பாகத் தெரிவது தான் இதற்குக்காரணமாகும்.

குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பௌத்தர்கள் என்ற வகையில், அவர்களது மதவழிபாட்டுத் தளங்களுக்குச் செல்வதில் எந்தவித தவறுமில்லை. ஆனால், முஸ்லிம்களுடன் உரசல் பட்டுக் கொண்டிருக்கின்ற விகாரைகளுக்குச் சென்றது தான் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

கொரோனா வைரசின் தாக்கத்தினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையிலும், முஸ்லிம்கள் மீது இனவாத வெறுப்புணர்வுகளை விதைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற நிலையில், சர்ச்சைக்குரிய விகாரைகளுக்கு பாதுகாப்பு உயரதிகாரிகள் விஜயம் செய்துள்ளார்கள்.

கவனிப்பாரற்று பாழடைந்து கிடந்த அம்பாறையை அண்டிய தீகவாபி விகாரையை முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அபிவிருத்தி செய்தார். இது அப்போது சர்ச்சைக்குரிய விடயமாகப் பேசப்பட்டது.

கடந்த 2016 இல் பௌத்தர்கள் வசிக்காத இடமான இறக்காமம் மாணிக்கமடு பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலையில் திடீரென புத்தர் சிலையை வைத்தார்கள். இது முஸ்லிம் மக்கள் மத்தியில் பீதியை உண்டு பண்ணியது.

மேலும், மிக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரச்சினை தான் பொத்துவில் முகுது மகா விகாரையாகும். இந்த விகாரைக்கு எல்லைக்காணி வரைபட ரீதியாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதன் எல்லை தேவைக்கேற்ப அடிக்கடி விஸ்தரிக்கப்படுகின்றது.

முகுது மகா விகாராதிபதியை மீறி அங்கு பொத்துவில் பிரதேச சபையினால் எந்தவித முன்னெடுப்புக்களும் மேற்கொள்ள முடியாது. கடந்த காலங்களில் முஸ்லிம் தீவிரவாதிகளினால் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகவும் வதந்தி பரப்பப்பட்டது.

“தொல்பொருள் பிரதேசங்கள் எந்த இன மதத்துக்குரியதாக இருந்தாலும் அது பாதுகாக்கப்படும்” என்று அங்கு விஜயம் செய்த பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரட்ன உறுதியளித்ததுடன், நாட்டிலுள்ள தொல்பொருள் வரலாற்றுத்தளங்கள் மீது பரவலாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருவதாக விகாராதிபதிகளால் அங்கு பேசப்பட்டது.

தொல்பொருள் என்பது பௌத்தர்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே, “எந்த மதத்துக்குரியதாக இருந்தாலும்” என்ற வசனத்தைப் பிரயோகித்தாலும் அது பௌத்தர்களைப் பாதுகாப்பதென்றே அர்த்தம் கொள்ள முடியும். அத்துடன், இவர்கள் முஸ்லிம்களை விரல் நீட்டி அங்குள்ள அனைவரும் கருத்துத் தெரிவித்ததாக அறியக்கிடைக்கின்றது.

எனவே, இந்நாட்டு முஸ்லிம்களின் இருப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நீண்ட திட்டமிடல்கள் எங்களைச்சுற்றி நடைபெற்று வருகின்றது. ஆனால், நாங்கள் இவைகளைப்பற்றிச் சிந்திக்காமலிருப்பது கவலையளிக்கின்றது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed