Main Menu

ஈரான் மீதான ஆக்கிரமிப்புத்தோல்வியும் : அமெரிக்கப்படைகளை மத்திய கிழக்கில் நிலை நிறுத்தும் யூதர்களின் தந்திரமும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதினேழாவது தொடர்.
முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது

ஈரானுக்கெதிராக சதாம் ஹுசைன் மேற்கொண்ட படையெடுப்பானது, எட்டு வருடங்கள் நீடித்தது. கடந்த நூற்றாண்டின் மிக நீண்ட யுத்தமாக ஈரான் – ஈராக் யுத்தமாகக் கருதப்படுகின்றது.

இந்த யுத்தத்தில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டது. முஸ்லிம் நாடுகளில் பெரும்பாலானவை சதாம் ஹுசைனுக்கு ஆதரவளித்தன. அத்துடன், அமெரிக்காவின் பலத்த ஆதரவும், உதவியும் சதாமுக்கு இருந்தது.

சதாம் ஹுசைனின் படையெடுப்பின் ஆரம்பத்தில் ஈரான் பல பிரதேசங்களை இழந்திருந்தும், இமாம் கொமைனியின் தலைமைத்துவ வழிகாட்டலினால் தனித்து நின்று உறுதியுடன் போரிட்டது. ஆரம்பத்தில் இழந்த அனைத்துப் பிரதேசங்களையும் 1982 இல் ஈரான் மீளக்கைப்பற்றியது.

அர்த்தமில்லாத ஈரான் – ஈராக் யுத்தத்தில் இரு தரப்பிலும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இதில் சதாமினால் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பின்பு ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டினால் 1988 ஆகஸ்டில் யுத்தம் முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவும் யூதர்களும் எதிர்பார்த்தது போன்று இந்த யுத்தத்தில் ஈரானை ஆக்கிரமிக்க முடியவில்லை. மாறாக, ஈரான் இராணுவ ரீதியில் தன்னைப் பலப்படுத்திக் கொண்டதுடன், நீண்ட யுத்த அனுபவத்தையும் பெற்றுக்கொண்டது.

அது போல், சதாம் ஹுசைனும் தன்னைப் பலப்படுத்திக்கொண்டார். ஈரான் மக்களைக் கொன்று அந்நாட்டை ஆக்கிரமிப்பதற்காக சதாம் ஹுசைனுக்கு நவீன ஆயுதங்களும், ஏவுகணைகளையும், இரசாயன ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கியிருந்தது.

சதாம் ஹுசைன் மூலமாக ஈரானை அழிப்பதற்கு அமெரிக்காவும், யூதர்களும் போட்ட திட்டம் தோல்வியடைந்ததனால், 1988 இல் ஈரானுக்கெதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடையினை விதித்தது. அன்று விதிக்கப்பட்ட பொருளாதார தடையானது, கட்டங்கட்டமாக அதிகரிக்கப்பட்டு இன்று வரைக்கும் அது அமுலிலுள்ளது.

ஈரான் இஸ்லாமியப்புரட்சிக்குத் தலைமை தாங்கிய அந்நாட்டின் தலைவர் இமாம் ரூஹுல்லாஹ் கொமைனி 1989 இல் மரணமடைந்தார். அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாகவும், உலக முஸ்லிம்களின் கதாநாயகனாகவும் அப்போது திகழ்ந்த இமாம் கொமைனியின் மரணத்துக்குப்பின்பு முஸ்லிம் உலகின் கதாநாயகனாக சதாம் ஹுசைன் விளங்கினார். சதாம் ஹுசைனின் வளர்ச்சி சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளுக்குப் பிடிக்கவில்லை.

1989 ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் பெரும் அமைதி நிலவியது. பாலஸ்தீன் பிரதேசத்தைத்தவிர, வேறெந்தப் பிரதேசத்திலும் யுத்தம் நடைபெறவில்லை. இது யூதர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. ஈரான் மீதான சதாம் ஹுசைனின் படையெடுப்பு வெற்றியடைந்திருந்தால், ஆக்கிரமிக்கப்பட்ட ஈரானை மீட்பதென்ற போர்வையில் இரண்டு திட்டங்களை அமெரிக்காவும், யூதர்களும் நடைமுறைப்படுத்தி இருப்பார்கள்.

அதாவது, இஸ்ரேலின் மேலதிகப்பாதுகாப்புக்காக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்கப்படைகளை நிரந்தரமாக நிலை நிறுத்துதல் மற்றும் இயற்கை வளங்கள் அதிகமாகவுள்ள ஈரானை ஆக்கிரமித்து வளச்சுறண்டல்களை மேற்கொள்தல் என்பது தான் அந்தத்திட்டமாகும்.

அது தோல்வியடைந்ததனால், அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டார்கள். அதாவது, எவர் மூலமாக எமது திட்டம் தோல்வியடைந்ததோ, அவர் மூலமாக அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டார்கள். அது தான் குவைத் மீதான ஆக்கிரமிப்பாகும். ஈரானுடன் ஈராக்குக்கு எல்லைப்பிரச்சினை இருந்தது போன்று, குவைத்துடனும் எல்லைப்பிரச்சினை இருந்தது. அதனால் குவைத்தை ஆக்கிரமிப்பதற்கு சதாம் ஹுசைன் தூண்டப்பட்டார்.

யூதர்களின் திட்டத்தினையும், இதனால் வரப்போகும் ஆபத்துக்களையும் பற்றிச்சிந்திக்காமல் அமெரிக்காவை முழுமையாக நம்பியதனால் 1990 ஆகஸ்ட் 02 இல் குவைத்தை ஈராக்கியப்படைகள் ஆக்கிரமித்ததுடன், குவைத்தானது ஈராக்கின் ஒரு மாநிலமாகவும் சதாம் ஹுசைன் அறிவித்தார்.

குவைத் மீதான சதாமின் படையெடுப்பினால் முதலில் மகிழ்ச்சியடைந்தவர்கள் யூதர்கள். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைக் காலூன்றச்செய்தல் என்ற யூதர்களின் நீண்ட காலத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான காலம் கனிந்தது தான் அவர்களது மகிழ்ச்சிக்குக் காரணமாகும்.

குவைத்திலிருந்து ஈராக்கியப்படைகள் எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விலகிக்கொள்ள வேண்டுமென்று அமெரிக்க அதிபர் ஜோஜ் புஷ் அறிவித்தவுடனேயே சதாம் ஹுசைன் அதிர்ச்சியடைந்தார். ஏற்கனவே தயார் நிலையிலிருந்த அமெரிக்கப்படைகள் உடனடியாக மத்திய கிழக்கை நோக்கி விரைந்தன.

அமெரிக்கா தலைமையில் 28 நாடுகள் கூட்டணி அமைத்து சதாமுக்கெதிராக யுத்தம் செய்யத் தயாரானார்கள். இந்த யுத்தத்துக்கான மொத்த செலவு 60 பில்லியன் அமெரிக்க டொலராகும். இதில் 40 பில்லியன் டொலரை சவூதி அரேபியா வழங்கியது.

ஈரானுக்கெதிரான யுத்தத்தில் யாரெல்லாம் தனக்கு நண்பர்களாக இருந்தார்களோ, அவர்களெல்லாம் தனக்கு எதிராகப் போரிடத் தயாரானதைப் பார்த்து சதாம் அதிர்ச்சியடைந்தார். உண்மையான நண்பன் யார்? எதிரி யார்? என்பதை சதாம் புரிந்து கொண்டார்.

அத்துடன், தன்னை இவ்வளவு காலமும் யாரெல்லாம் இயக்கினார்கள் என்றும், இதன் பின்னணியிலிருந்த யூதர்களின் அரசியல் விளையாட்டுக்களையும் சதாம் விளங்கிக்கொண்டதுடன், ஈரானிடம் மன்னிப்புக் கோரினார்.

ஏனெனில், எட்டு வருட கால யுத்தத்தில் பதற்றமாக இருந்த ஈரானின் நீண்ட எல்லைப்பிரதேசமே தற்போது சதாமுக்குப் பாதுகாப்பான பிரதேசமாகத் தெரிந்தது. ஈராக்கைச் சுற்றியுள்ள ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் அமெரிக்காவினதும் அதன் நேச நாட்டுப் படைகளாலும் முற்றுகையிடப்பட்டிருந்தது.

தொடரும்..

 

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed