Main Menu

மட்டு.மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவமும் மக்களின் எதிர்பார்ப்பும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

அபூ அப்துல்லாஹ்
அண்மையில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால தேர்தல் முடிவுகளின்படியும் தற்போதய கள நிலவரத்தின்படியும் மாவட்டத்திலுள்ள ஐந்து ஆசனங்களில் தமிழ் தேசியக்கூடடமைப்பு மூன்று ஆசனங்களையும், அரசின் முழு ஆசீர்வாதத்துடனும் கடந்த காலங்களில் படகுச்சின்னத்தில் தனித்து நின்று போட்டியிட்டு 40,000 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இம்முறை நல்லதொரு வேட்பாளர் பட்டியலைக் கொண்டிருப்பதன் காரணமாகவும் ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும்.

அதே நேரம் எஞ்சியுள்ள இறுதியான ஐந்தாவது ஆசனத்தை முஸ்லிம் தரப்பும் வெல்வதற்க வாய்ப்புக்களே அதிகமுள்ளது.

இதில் முஸ்லிம் காங்கிரஸ் அணியினர், சஜீத் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சஜித்-அமீர் அலி கூட்டணி, வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய சமாதானக்கூடடமைப்பு சார்பு ஹிஸ்புல்லா – பசீர் சேகுதாவூத் அணியினர் களத்தில் உள்ளனர்.

இம்முறை இறுதி ஆசனத்தை வெல்கின்ற முஸ்லிம் தரப்பு வெல்ல வேண்டுமாக இருந்தால், 30,000 இற்கும் அதிகமான வாக்குகளைப்பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. காரனம், களத்திலுள்ள தமிழ் அணிகளில் பிள்ளையான் அணி 30,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் அதே வேளை, ஏனைய பிரதான அணிகள் 27,000 தொடக்கம் 30,000 வரையிலான வாக்குகளைப் பெறும் வாய்ப்புக்கள் மிக அதிகமுள்ளது.

சராசரியாக அளிக்கப்படும் மொத்த தமிழ் வாக்குகள் 220,000 ஆக இருக்கும் பட்சத்தில், தமிழ் தேசியக்கூடடமைப்பு 110,000 வாக்குகள் வரையிலும், பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 40000 வாக்குகள் வரையிலும், மீதியாகும் 70000 தமிழ் வாக்குகளில் 27,000 தொடக்கம் 30,000 வரையில் எஞ்சியுள்ள எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி அணிகளுக்கும் செல்ல அதிக வாய்ப்புள்ளது. ஆக மொத்தத்தில், இம்முறை இறுதி ஆசனத்தை வெல்லப்போகும் முஸ்லிம் கட்சி 30,000 க்கும் அதிகமான வாக்குகளைத் தாண்டியாக வேண்டும்.

இதில், முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாத்தொகுதியில் 8000 வாக்குகளையும், ஏறாவூரில் 14,000 வாக்குகளையும் காத்தான்குடி மற்றும் அதனைச்சூழவுல்ல பிரதேசத்தில் 4000 வாக்குகளையும் கொண்டுள்ளது. மொத்தத்தில் மாவட்டத்தில் 25,500 தொடக்கம் 27000 வாக்குகளை தற்போதய சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ள வாயுப்புள்ளது.

அடுத்ததாக, சஜித் தலைமையிலான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, அப்துர் ரஹ்மான் அணியினர் இம்முறை பத்தாயிரம் தமிழ் வாக்குகளைப் பெறுவதே மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. காரணம், கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து 16,000 வரையிலான தமிழ் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி தற்போது சஜித் அணியிலிருந்து விலகிச்சென்றுள்ளார்.

இம்முறை சகல பிரதேசங்களில் சஜித் அணிக்கு அளிக்கப்படும் வாக்குகள் அமீர் அலியைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும். இதனால் பிரதான தமிழ் வேட்பாளரில்லாத சஜித், அமீர் அலி அணிக்கு சென்ற முறை கிடைத்த 16,000 வாக்குகளுக்குப்பதிலாக கடந்த காலங்களில் அமீர் அலி தமிழ் மக்களுக்கு ச் செய்த சேவைகளுக்காக10000 வரையிலான வாக்குகள் கிடைக்கலாம்.

அதே வேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் 38,000 அளவிலான முஸ்லிம் வாக்குகள் கல்குடாத்தொகுதியில் உள்ளது. கடந்த கால தேர்தல் முடிவுகளின்படி சுமார் 29,000 தொடக்கம் 30,000 வரையிலான செல்லுபடியான வாக்குகள் பதியப்பட்டுள்ளன. தற்போதைய ஊருக்கு MP என்கின்ற கோசம் கல்குடாவில் வலுப்பெற்றிருக்கும் நிலையில், கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் தேசியப்பட்டியல் தருவதாக வாக்குறுதி வழங்கி, கல்குடா மக்கள் ஏமாற்றப்பட்டமை, அமீர் அலியுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் காங்கிரஸ் பெயர் சொல்லக்கூடிய வகையில் கல்குடாவில் எவ்வித அபிவிருத்திகளையும் செய்யாமை, கடந்த காலங்களில் கட்சி சார்பில் கல்குடாவில் போட்டியிட்டவர்களை கட்சியும் தலைமையும் கெளவரவப்படுத்தாமல் கணக்கின்றி கைவிட்டமை, வெற்றி பெற்ற ஓட்டமாவடி பிரதேச சபையை ஆட்சியமைக்க முடியாமல் போனமை, உறுப்பினர்களிடையே ஒற்றுமையின்மை, கடந்த முறை போட்டியிட்ட றியாழ் இம்முறை தேர்தலிலிருந்து பின்வாங்கியமை போன்ற நியாயமான காரணங்களால் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 16,500 இற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்ற அமீர் அலி அணியினரால் இம்முறை கல்குடாவில் மாத்திரம் 15,000 தொடக்கம் 16,000 வரையிலான வாக்குகள் அளிக்கப்படலாம்.

ஏறாவூர், காத்தான்குடி, தமிழ் வாக்குகள் என 2,500 தொடக்கம் 3,000 வரையிலான வாக்குகளும் ஏனைய பிரதேச அமீர் அலிக்கான தனிப்பட்ட விருப்பு வாக்குகளினூடாக 17,000 தொடக்கம் 18,000 வரையிலான விருப்பு வாக்கினை அமீர் அலி பெறக்கூடும்.

இருப்பினும், கட்சியின் ஆசனத்தை வெல்வதற்கு சுமார் 11,000 தொடக்கம் 12,000 வரையிலான வாக்குகள் தேவை. அதை அப்துல் றகுமான் மற்றும் சஜித் ஆதரவு வாக்குகள் இலகுவாக அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பம் அதிகளவு காணப்படுகிறது.

ஆக மொத்தத்தில், அமீர் அலியினது வெற்றிக்கான ஊன்றுகோலாக அப்துர் ரஹுமான் இருந்தால், அதற்கு பிரதியபகாரமாக, சஜித் கட்சியினூடாக அப்துர் ரஹுமானின் தேசியப்பட்டியல் கனவு நனவாகும் சாத்தியக்கூறுகள் அதிகமாகவுள்ளது.

ஹிஸ்புல்லா காத்தான்குடியில் அளிக்கப்படும் செல்லுபடியான 28,000 வாக்குகளில் ஆகக்குறைந்தது 25,000 வாக்குகளை தனது வண்ணத்துப்பூச்சி கட்சிக்குப் பெற முடியமாக இருந்தால் மாத்திரமே வெற்றி வாய்ப்பின் பக்கம் ஒரு அடி முன்வைக்க முடியும். எந்த அறிமுகமுமில்லாத, இது ஆளும் கட்சியா? அல்லது எதிர்க்கட்சியா? வென்றாலும் தோற்றாலும் எந்தவொரு சிறிய அதிகாரத்தைக்கூடப் பெற இயலாத வண்ணாத்துப்பூச்சி சின்ன ஐக்கிய சமாதானக்கூடடமைப்பு ஹிஸ்புல்லா என்கின்ற தனிமனிதனுக்காக மாத்திரம் அளிக்கப்படும் வாக்கே இக்கட்சி பெறும் வாக்குக்களாக இருக்கும். பஷீர் சேகு தாவூத் அவர்களால் எந்த தாக்கத்தையும் செலுத்தி விட முடியாது.

காத்தான்குடியிலுள்ள 28,000 வாக்குகளில் 25,000 வாக்குக்குகளைப் பெற்றுக்கொள்வதென்பது குதிரைக்கொம்பாக அமையலாம். ஏனைய ஏறாவூர், கல்குடா பிரதேசங்களிலிருந்து அதிகபட்சமாக 4500 வாக்குகளை மாத்திரமே பெற முடியும். இது கடந்த கால தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. மொத்தத்தில் காத்தான்குடியிலிருந்து 20000 கிடைத்தாலும், மாவட்டத்தில் இவரால் பெறக்கூடிய வாக்கு வெறும் 25000 இற்கும் உட்பட்ட வாக்குகளாவே அமையும். இது வெற்றி பெறுவதற்கு போதுமானதாக அமையாது.

காத்தான்குடியில் தனக்கு 20,000 வாக்குகளைப்பெற இயலாத நிலையிலும், “தான் வெற்றி பெறாத விட்டாலும், இன்னொருவர் வெற்றி பெறக்கூடாது” என்பதே ஹிஸ்புல்லா களமிறங்கியுள்ளதன் நோக்கம் என்பதை மிக வெளிப்படையாக மக்களால் உணரப்பட்டு வருகின்றது.

மேலும், இவரால் சிதறடிக்கப்படும் வாக்குகளால் இன்னுமொரு முஸ்லிம் பிரதிநிதி மாவட்டத்தில் தெரிவு செய்யப்படாமல் போவதற்கும் வாய்ப்புக்கள் இல்லாமலில்லை. அது முஸ்லிம் காங்கிரஸின் ஆசனமாகவும் இருக்கலாம். ஆக மொத்தத்தில், மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸின் ஆசனத்தை இல்லாமல் செய்யும் பஷீர் சேகுதாவூதின் கனவுக்கு ஹிஸ்புல்லா இரையாகி இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

மொத்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவைத்து முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். இம்முறை கள நிலவரத்தின்படி சஜித் அணியினர் ஓர் ஆசனத்தைப் பெறக்கூடிய வாய்ப்பே அதிகமாகவுள்ளது.

“சாத்தியமானதை சாதிக்கின்ற கலையே அரசியல்”

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed