Main Menu

மரக்கூட்டுத்தாபன அனுமதிப்பத்திரத்தினூடாக சட்டவிரோத மரக்கடத்தல் : ஐவர் கைது

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை வட்டார வனத்திணைக்களத்திற்குச் சொந்தமான குடும்பிமலைக் காட்டுப்பகுதியில் மரக்கூட்டுத்தாபன அனுமதிப்பத்திரத்தினை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி மரக்கடத்தில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்களும், இரண்டு வாகனமும், முதுரை, தேக்கை மரங்களும் பயன்படுத்திய உபகரணங்களும் கடந்த வியாழக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வன அதிகாரி எஸ்.ஏ.பி.எம்.பெரோ, மாவட்ட உதவி வன அதிகாரி எம்.ஏ.ஏ.குரே ஆகியோரின் மேற்பார்வையில் கீழ் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தலைமையிலான வன உத்தியோகத்தர்கள் குடும்பிமலை மியான்கல் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மரக்கூட்டுத்தாபன அனுமதிப்பத்திரத்தினை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி முதுரை மற்றும் தேக்கை மரக்கடத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், ஆறு அடி நீளம் மதிக்கத்தக்க நாற்பத்திதொரு (41) தேக்கை மரங்களும், ஏழு (07) முதுரை மரங்களும், வகுப்பு ஒன்றைச்சேர்ந்த நாற்பது (40) தேக்கை மரக்கட்டைகளும், வகுப்பு இரண்டைச்சேர்ந்த நூறு (100) தேக்கை மரக்கட்டைகளும், ஐந்து சந்தேக நபர்கள் மற்றும் லொறி, மோட்டார் சைக்கிள், மரம் வெட்டும் இயந்திர வாள், கையடக்கத் தொலைபேசி நான்கு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

இதன் போது, கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் வியாழக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், மரம் ஏற்றுவதற்கு பயன்படுத்திய வாகனம் இதற்கு முன்னரும் இரண்டு தடவை சட்டவிரோத மரங்கள் ஏற்றப்பட்டு நீதிமன்றத்தினுடாக விடுவிக்கப்பட்ட வாகனமென்பது குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண்ணகழ்வு, மரக்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனைத்தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed