Main Menu

கொரோனா தேர்தலை நடாத்த முடியுமென்றால், இறந்த உடலங்களை எரிக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் – அலி ஸாஹிர் மௌலானா கோரிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
உரிய சுகாதார வழிமுறைகளினூடாக சமூக இடைவெளியினைப் பேணியும், ஜனநாயக அடிப்படையில் மக்களை ஒன்று திரட்டி வாக்குச்சேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது. நேரடியாக நோய் பரவக்கூடிய, நோயினைப் பரப்பக்கூடிய காவிகளான உயிருள்ளவர்களோடு தொடர்புபடுகின்ற தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தேர்தலை முன்னெச்சரிக்கையுடன் நடாத்த முடியுமாக இருந்தால், உலகளாவிய நுண்ணியல் ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பிரகாரம் “அடக்கம் செய்யப்படுகின்ற இறந்த உடலங்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதென்ற விஞ்ஞான ரீதியான உறுதிப்பாட்டினையும், உலக சுகாதார நிறுவனத்தின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டலையும் உதறித்தள்ளி விட்டு, கொவிட் 19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களது உடலங்கள் கட்டாயம் எரிக்கப்பட வேண்டுமென்ற வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற வேண்டும் என ஜனாதிபதி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தேர்தலை நடாத்துவதற்கெதிராக உச்ச நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கிற்கான தீர்ப்பினை வழங்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகளக் கொண்ட குழாமிற்கு ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட தேர்தலை நடாத்த முடியுமென்ற சுகாதாரத்துறையின் பரிந்துரை தொடர்பில் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தனது கோரிக்கையினை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸின் தாக்கம் நிலவுகின்ற நிலையிலே இலங்கையில் ஒரு தேர்தலை நடாத்துவதற்கான அச்சமற்ற சூழல் நிலவுவதாக சுகாதாரத்துறை அறிக்கை விட முடியுமாக இருந்தால், எவ்வித விஞ்ஞானபூர்வமான ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களுமின்றி, சர்வதேச நியமங்களையும் தாண்டி வைரஸ் தொற்றினால் இறந்தவர்களதும், வெறும் சந்தேகத்திலே நோயினை உறுதிப்படுத்தாதவர்களதும் சடலங்களையும் எரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இரத்துச்செய்யப்பட்டு, அந்தந்த சமயத்தினர், குறிப்பாக, இஸ்லாமியர்கள் தமது உறவுகளுக்கான இறுதிக்கிரியைகளை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முஸ்லிம்களது ஜனாசாக்கள் எரிக்கப்படுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தேசியத்திலும், சர்வதேசத்திலும் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டி வருவதுடன், கடந்த 15ஆம் திகதி சடலங்கள் எரிக்கப்படுவதற்கெதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத்தாக்கலையும் அவர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed