Main Menu

தங்கத்தால் எழுதி தொங்கவிடப்பட்ட முஸக்கபாத்தும் வரலாறு பேசப்படாத முஅல்லகாத்தும் (தொடர் -1)

இந்த செய்தியைப் பகிர்க >>>

அப்னாஸ் அலி
அந்தக்கால அரேபியாவில் ஒரு வழக்கமிருந்தது. ஏழு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை தங்கத்தில் எழுதி கஅபதுல்லாஹ்வின் சுவர்களில் தொங்க விடுவார்கள். அதற்குத்தான் முஅல்லகாத் என்று பெயரும் தொங்க விடப்பட்ட தங்கக்கவிதைகளுக்கு முஸக்கபாத் என்ற பெயரும் வழங்கப்பட்டது.

(المعلقات السبع) எனும் நூல் இம்ரஉல் கைஸ், இப்னு கல்தூன் போன்றாேரைப் பற்றியும் மொத்தம் ஏழு கவிஞர்களைப் பற்றியும் பேசி வருகிரது. பத்து கவிஞர்கள் என்றும் வேறு சில நூல்கள் உலா வருகின்றன.

அறிஞர்கள் கால கட்டத்தை வைத்து ஆறு வகையான கவிஞர்களாகப் பிரிக்கின்றனர். வரலாற்றறிஞர்கள் அரேபியக்கவிஞர்களை ஆறு பிரிவுகளில் வகைப்படுத்துகின்றனர்.

1. அல் ஜாஹிலிய்யூன்.
இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக்காலத்து கவிஞர்கள்.
ஜுபைர், தரா·பா, இம்ரவுல் கய்ஸ், அம்ரிப்னு குல்சும், அல் ஹாரிது, அந்தாரா போன்ற மூத்த கவிஞர்கள்.
அறியாமை காலத்திலும் கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கினார்கள். அதில் ஒருவன் கூறும் போது, நான் மிகப்பெரிய குடிகாரன். நான் இறந்த பிறகு என் மண்ணறை மீது கஞ்சாச்செடியை நாட்டுங்கள். அதிலிருந்து நான் இறந்த பிறகும் மது அருந்த வேண்டுமென்று ஆசைப்படுகிரேன் என்று தனது இன்பத்தை அறியாமையில் கவிதை மூலமாக எல்லாம் வர்ணிக்கத் தொடங்கினான்.

அதே போல, ஒரு சூதாட்டக்காரன் நான் இறந்த பிறகு என்னை விடப் பெரிய ஒரு சூதாட்டக்காரனை என் மனவைி திருமணம் செய்தால் நான் இறந்த பிறகும் சந்தாேசமடைவேன் என்று அறியாமைக்கால கவிதைகள் வெளிபடத் தொடங்கின.

2. அல்முஹ்ஜரமூன்.
அறியாமைக்காலத்தில் பிறந்து பின்பு இஸ்லாத்தைத்தழுவிய கவிஞர்கள்.
ஹஸ்ஸான் உமய்யா லபீத் போன்றவர்கள். இவர்களைப்பற்றி பல ஹதீதுகளிலும் கூறப்பட்டுள்ளது.

3. அல்முதகத்திமூன்.
இஸ்லாத்துக்கு வந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள்.
ஜரீர், ப்ரஸ்தக் போன்றவர்கள்.

4. அல்முவல்லதூன்.
முஸ்லிம்களாகப் பிறந்தவர்களுக்குப் பிறந்தவர்கள்.
பஷார் போன்றவர்கள்.

5. அல் முஹ்திசூன்.
மூன்றாவது தலைமுறையின் முஸ்லிம் கவிஞர்கள்.
அபூ தம்மாம், புஹ்தரி போன்றவர்கள்.

6. அல் முதஆஹிரூன்.
மற்ற கவிஞர்கள் இதற்குள் அடங்குவர்

நபி ஸல் அவர்கள் எதிரிகளுக்கு கவிதை வடிவில் பதில் கொடுக்குமாறு ஹஸ்ஸானைத் தூண்டிய சுவாரஸ்யமான சம்பவங்களும் ஹதிஸ்களும் பதிவாகியுள்ளன.

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “அபூ ஹுரைரா அவர்களே! அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: நபி (ஸல்) அவர்கள், “ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் சார்பாக எதிரிகளுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக! இறைவா! “ரூஹுல் குதுஸ்” (எனும் தூய ஆத்மா ஜிப்ரீல்) மூலம் இவருக்கு வலிமையூட்டுவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டு சாட்சியம் சொல்ல அழைத்தார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் “ஆம் (செவியுற்றேன்)” என்று (சாட்சியம்) கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4898.
அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள்

ஹஸ்ஸான் கவிதை பாடுவதற்கென பெருமானரின் பள்ளிவாசலில் தனி மேடையே அமைக்கப்பட்டிருந்தது .

அல்குர்ஆனில் 26 அத்தியாயமாக கவிஞர்கள் என்றே ஒர் அத்தியாயமுள்ளது. குறைவான தேடலிலும் தன் பேச்சை மூலதனமாக்கிக் கொண்டு சிலர் குர்ஆனிய வசனங்களையும் ஹதிஸ்களையும் தவறான தஃவீல் கொடுத்து கவிதைகள் பற்றிய தவறான நடைமுறையை பிரயோகித்து வருவது அவர்களது அறியாமையேயன்றி வேறில்லை. நான் அடிக்கடி சொல்லியும் எழுதியும் வருவது ஒன்றே தான்.

இவை ஞானமிக்க இறைவனின் வசனங்கள் அறிவுடையவரைத்தவிர வேறு யாரும் இதைப்புரிந்து கொள்ளமாட்டார்கள்
(وما يعقلها إلا العالمون)

நபி அவர்களின் காலத்தில் மிகப்பெரும் கவிஞர்களாக இருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கஅப் இப்னு ஜுஹைர், ஹஸ்ஸான் இப்னு தாபித் போன்றோர் கவிதை சொல்வதற்காகவும் எழுதுவதற்காகவும் ஊக்குவிக்கப்பட்டவர்கள்.

உண்மையைச்சொன்ன கவிஞர்களிலேயே லபீத் மிகச்சிறந்தவர்” என்ற புகழுரையையும் நபி (ஸல்) அவர்களினால் அந்த ஸஹாபி பெற்றுக்காெண்டார். இன்னும் சிலர் தனது கவிதைகளாலே இஸ்லாத்தைத் தழுவும் நிலையும் ஏற்பட்டது .

கைபர் போரில் பாடப்பெற்ற கவிதை

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப்போருக்காக)ப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்த போது, மக்களில் ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், “உங்கள் கவிதைகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடமாட்டீர்களா?” என்று கேட்டார்.

ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக்கவிதையை)ப் பாடி அவர்களுடைய ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள்:

இறைவா!
நீ இல்லையென்றால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்.

தர்மமும் செய்திருக்கமாட்டோம்.
தொழுதிருக்கவுமாட்டோம்.
நாங்கள் புரிந்துவிட்ட
பாவங்களுக்காக
எங்களை மன்னிப்பாயாக.

உனக்கே நாங்கள் அர்ப்பணம்.
(போர்முனையில் எதிரியை)
நாங்கள் சந்திக்கும் போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக.

எங்கள் மீது அமைதியைப்
பொழிவாயாக. (அறவழியில் செல்ல)
நாங்கள் அழைக்கப்பட்டால்
நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம்.

எங்களிடம்
மக்கள் (அபயக்) குரல்
எழுப்பினால்
(உதவிக்கு வருவோம்).

என்று பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இந்த ஒட்டகவோட்டி?” என்று கேட்டார்கள். “ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது, “அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3686.
அத்தியாயம் : 32. அறப்போரும் வழிகாட்டு
நெறிகளும்

அஹ்ஸாப் யுத்ததின் போதும் பசியுடன் அகழி தோண்டிய போது பாடிய கவிதை

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அகழி தோண்டிக்கொண்டு) இருந்த போது பின்வரும் யாப்பு வகைக்கவிதையைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:

 

ஸஹீஹ் முஸ்லிம் : 3692.
அத்தியாயம் : 32. அறப்போரும் வழிகாட்டு நெறிகளும்

மேலும், ஸலமா பின் அக்வஉ ரழி கூறும் போது, நான் ‘ரஜ்ஸ்’ எனும் இலக்கிய யாப்புப்பெற்ற கவிதைகளை பாடிக்கொண்டே ஒட்டகங்களை விடுவித்துக் கொண்டிருந்தேன். (நீண்ட ஹதிஸின் சுருக்கம்) ஸஹீஹ் முஸ்லிம் 3694

அன்றைய மக்கள் கவிதைத்துறையிலும் புகழ் பெற்று விளங்கியதை அறிய முடிகிறது. இத்துறை மென்மேலும் வளர்க்கப்பட வேண்டிய துறையே.

(மிகுதியை அடுத்த தொடரில் எழுத எதிர்பார்க்கிரேன் )

உசாத்துணை –
குர்ஆன்
ஸஹிஹ் முஸ்லிம்
நூல் -பண்டைய கவிஞர்கள்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed