Main Menu

கொரோனா வைரசும் பொது மக்களும்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
இன்று உலக நாட்டையே அச்சத்திற்குள்ளாக்கியுள்ள இந்த கண்ணுக்குத் தெரியாத வைரசானது மனிதனால் உருவாக்கப்பட்டதென்றும், பறவைகள், மிருகங்களிலிருந்து மனிதனுக்குப் பரவிய வைரஸ் என்றும் பலரும் பலவாறான கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறி வருகின்றனர். எது எவ்வாறானதாக இருந்தாலும், வைரசின் தாக்கமானது, மக்களின் உயிர்களைக் காவு கொள்வது உண்மையானதாகும்.

இன்றைய மருத்துவ உலகமானது, போட்டி போட்டுக்கொன்டு பல விதமான ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் செய்து வருகின்றது. இதில் பரீட்சார்த்தமாக வெற்றியும் கண்டுள்ளனர். கண்டு பிடிக்கப்பட்ட மருந்து பரீட்சிக்கப்பட்டு, அதன் சாதக பாதக நிலைகளை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குரங்குகளுக்கு பரீட்சார்த்தமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவுகளை ஆராய்ந்ததன் பின்னர் தான் மனிதர்களுக்கு அறிமுகமாகும். இருந்தும், இது மனித பாவனைக்கு பல ஆண்டுகளின் பின்னர் தான் அறிமுகமாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரசானது, கூர்பபடைந்து அதன் வடிவங்களை மாற்றிக்கொண்டிருப்பதனாலும், அதனுடைய இயல்பிலிருந்து மாறி மாறிச்செயற்பட்டு வருவதும், அதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் கால தாமதத்தினையும் தடங்களையும் ஏற்படுத்தி வருகின்றமை விஞ்ஞானிகளுக்கு சவாலானதொரு விடயமாகவே மருந்து கண்டுபிடிப்பில் பின்னடைவு ஏற்பட்டு வருகின்றது.

கொரோனா வைரசானது, மக்களுக்கு சிறந்த படிப்பினையினைக் கொடுத்துள்ளது. மக்களை மக்கள் சந்திப்பதற்குப் பயப்படுகின்ற கால கட்டமாகவும் வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்துக்கள் குறைவடைந்து மக்கள் நடமாட்டம் குறைந்ததினால் மக்களினால் உருவாக்கப்படுகின்ற கழிவுகளையும் வீதிகளில் காண முடியவில்லை. வளி மாசடைவது குறைந்துள்ளது. நீர் நிலைகள் சற்று நிம்மதியாகவுள்ளது என்று சொல்லலாம். மனிதனால் திட்டமிட்ட காடுகள் அழிப்பது கனிய வளங்களைத் தோண்டுவது சற்று குறைவடைந்துள்ளது. எரிபொருளுக்கான கேள்வியும் நாட்டில் குறைந்துள்மையினை உலக நாடுகளில் அவதானிக்க முடிகின்றது.

இறைவன் தந்த இயற்கை வளங்களுக்கெல்லாம் சற்று ஓய்வெடுப்பதற்கான விடுமுறையினை மக்கள் இந்த கொரோனா மூலமாக வழங்கியுள்ளனர் என்று தான் நினைக்கத்தோன்றுகின்றது. அனைத்து இயற்கை வளங்களும் ஆறுதலடைந்துள்ள காலமென்றால், இந்த கொரோனா கால கட்டம் என்றே கூறலாம்.

காலத்திற்குக்காலம் ஒவ்வொரு விதமான நோய்களும் வருவது வழமையானதாக இருந்தாலும், இவ்வாறான ஆட்கொள்ளி நோயை எவரும் பார்த்திருக்க முடியாது. மலேரியா, கொலரா மற்றும் சாள்ஸ், றிபோலா வைரஸ் பிலேக் நோய், சிக்கின் கூனியா, பன்றி, எலிக்காய்ச்சல் எனப்பல விதமான தொற்றுநோய்களை உலகம் சந்தித்திருக்கும். ஆனால், இவ்வாறான கொரோனாவைச் சந்தித்தது இதுவே முதல் தடவையாகும்.

இயற்கையின் சீற்றத்தினையும் நாமும் நம் நாடு அடிக்கடி சந்தித்து வந்துள்ளோம். 1954ம் ஆண்டு பெரிய வெள்ளம், 1978ம் ஆண்டு சூறாவெளி. அதனைத்தொடர்ந்து வந்த சுனாமி 2004ம் ஆண்டும் அதற்குப்பின்னர் 2010ம் ஆண்டும் ஒரு பெரிய வெள்ளம் மக்களைத் தாக்கியிருந்தது. அதன் பின்னரும் அடிக்கடி வெள்ளம், பலத்த காற்று என மக்களை வாட்டிக்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ளனர். அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்க்கை நடத்துகின்ற மக்களின் நிலைமை மோசமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய சிறுகைத்தொழிலாளர்கள் எனப்பலரும் பாதிக்கப்பட்டு ஒட்டு மொத்த பொருளாதாரத்தினையும் நிலைகுலைய வைத்துள்ளது இந்த கொரோனா.

கொரோனாவின் தாக்கத்தினால் பணமும் மனமும் படைத்தவர்கள் ஏழை மக்களுக்கு உணவுப்பொதிகளை தாராளமாக வழங்கி வருகின்றமையும், அதைத்தவிரவும் தனியார் தொண்டார்வ நிறுவணங்கள் பல இலட்சம் பெறுமதியான பொருட்களை வழங்கி வருவதும் அவதானிக்க முடிகின்றது. இலங்கை அரசாங்கமானது, இம்முறை புதியதொரு யுக்தியினைக் கையாண்டு பணமாகவே மக்களுக்கு கொடுப்பனவுகளைச் செய்து வந்தமை மக்களுக்கு எவ்விதமான தாமதமுமின்றி கிடைத்துள்ளதாக பொது மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed