Main Menu

அரசியே அது தண்ணீரல்ல : பளிங்குக்கற்கள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

அப்னாஸ் அலி
அது தண்ணீரல்ல பளிங்குக்கற்கள் இப்படித்தான் ஸபா நாட்டு இளவரசியின் புரிதலுக்கு சுலைமான் நபி பதில் கூறினார்.

கஃபா ஆலயம் கட்டப்பட்டு சுமார் நாற்பது வருடங்களின் பின் பைத்துல் முகத்தஸ் கட்டப்பட்டதாக ஹதிஸ்களில் காண முடிகிறது. தாவூத் அலை அவர்கள் ஒரு நபியாகவும் அரசராகவும் ஆட்சி புரிந்த காலத்தில் அவருடைய மாளிகையாகவும் மஸ்ஜிதாகவும் தங்கம், வெள்ளி, முத்து போன்ற விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு அலங்கரித்து பலரையும் கவரப்பட்ட மாளிகையாக அக்காலத்தில் பெயர் பெற்றிருந்தது.

ஸபா நாட்டு இளவரசி அந்த மாளிக்கைக்குள் நுழைந்த போது, தண்ணீர்த்தாடகம் என நினைத்து தன் கீழ் ஆடையை உயர்த்தி கொண்ட போதே சுலைமான் நபி கூறினார் அரசியே அது தண்ணீரல்ல, பளிங்குக்கற்கள் என்றார். இதைப்பார்க்கும் போதெல்லாம் இன்றைய 3D எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை.

பல வருடங்கள் பைத்துல் முகத்தஸ் யூதர்களின் பிடியிலிருந்துள்ளது. கி.பி 620 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கும் அந்த மஸ்ஜித் உரித்தானதென்று சரித்திர வாயிலாக அறியக் கிடைத்துள்ளது. அதற்கு உரிமை கோருவதற்கு எழுத்தாளர் சமாதான நீதவான் அப்துல் சத்தார் நஜீமுதின் தனது மஸ்ஜிதுல் அக்ஸாவின் உண்மை நிலை அன்று இன்று என்ற நூலில் பின்வரும் நியாயங்களை வைக்கிறார்.

1- முஸ்லிம்களின் முதல் கிப்லா
2- மிஃராஜ் போது நபி ஸல் தரித்துச்சென்ற இடம்
3- இறைவனை வணங்க உலகில் கட்டப்பட்ட இரண்டாவது ஆலயம்
4- நூற்றுக்கணக்கான இறைதூதர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம்
4- அல்குர்ஆனில் எழுபது இடங்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கூறப்பட்ட இடம்
5- அல்லாஹ்வுடைய தூதை ஏந்திய பல மலக்குகள் இறங்கிய இடம்
6- எல்லா நபி மார்களும் ஸஜ்தா செய்த இடம்
.
ஹதிஸ்களில் மஸ்ஜிதுல் அக்ஸாவைப்பற்றி வந்துள்ள சிறப்புக்கள்
1- அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா (ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்த போது, மூஸா (அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்குமளவுக்கு அடித்து விட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், ‘இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பி விட்டாய்’ என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்தி விட்டு, ‘நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச்சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக்கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்’ என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா (அலை) அவர்களிடம் வந்து கூறிய போது) மூஸா (அலை) ‘இறைவா! அதற்குப்பிறகு?’ எனக்கேட்டதும் அல்லாஹ், ‘பிறகு மரணம் தான்’ என்றான்.

உடனே மூஸா (அலை) அவர்கள் ‘அப்படியானால் இப்பொழுதே (தயார்)’ எனக்கூறி விட்டு, அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத்தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக்கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, ‘நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணல் குன்றிற்கருகிலுள்ள பாதையிலிருக்கும் மூஸா(அலை) அவர்களின் கப்ரைக்காட்டியிருப்பேன்’ எனக் குறிப்பிட்டார்கள். (ஸஹீஹ் புகாரி : 1339, அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்)

2-அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
தபூக் போரின் போது நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்திலிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக்கொள்:
1. என்னுடைய மரணம்
2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல். (ஆதாரம் : புகாரி (ஹதிஸின் சுருக்கம்))
3- முஸ்லிம்களின் முதல் கிப்லா

பராஉ(ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி ‘பதினாறு’ அல்லது ‘பதினேழு’ மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக்கிப்லாவை நோக்கித் திருப்பி விட்டான். (ஸஹீஹ் புகாரி : 4492, அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை)

3- அதிக நன்மையை நாடிச்செல்லும் மஸ்ஜித்களில் இதுவுமொன்று
மூன்று மஸ்ஜித்கள் அல்லாமல் வேறெந்த மஸ்ஜித்களுக்கும் (அதிக நன்மையை நாடி ) பிரயாணம் செய்யக் கூடாது. அதிலொன்று ஜெருசலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா (புஹாரி முஸ்லிம் ) அல் அக்ஸாவில் தொழும் தொழுகை ஐநூறு நன்மைகளை கொண்டதாகும் (தபரானி )

4- பரகத் செய்யப்பட்ட பிரதேசம்
அல் ஷாம் அருள்பாலிக்கப்பட்ட பிரதேசமாகும். ஷாம் மேலாக மலக்குகள் தன் இறக்கைகளை விரித்திருப்பதாக நான் காண்கிறேன் என்றார் நபிகளார் (திர்மிதி) ஷாம் என்பது இன்றைய ஜோர்தான், பலஸ்தீன், லெபனானை உள்ளடக்கியதாகும்.
ஈஸா அலை அவர்கள் தஜ்ஜாலை லுத் எனும் ஒர் இடத்தில் வைத்தே கொல்லுவார் (திர்மிதி) லுத் என்பதும் பலஸ்தீனிலுள்ள ஓர் இடம்

(வரலாறுகளே எமக்கான அடையாளம். அவற்றை மறந்து பாழ்படுத்தி விடாதீர்கள்)

وَلَقَدْ صَرَّفْنَا فِىْ هٰذَا الْقُرْاٰنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ‌ وَكَانَ الْاِنْسَانُ اَكْثَرَ شَىْءٍ جَدَلًا‏
நாம் இந்தக்குர்ஆனில் மக்களுக்கு பற்பல உதாரணங்களைக்கூறி விதவிதமாக விளக்கியுள்ளோம். ஆயினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 18:54)

உசாத்துணை –
அல் குர்ஆன்
ஸஹிஹ் புஹாரி
ஸஹிஹ் முஸ்லிம்
திர்மிதி
நூல் – அல் அக்ஸாவின் உண்மை நிலை அன்றும் இன்றும்

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed