Main Menu

இறையச்சத்துடன் வாழத்துடித்த காத்தான்குடி இர்சாத் : மனநிலை பாதிப்பு மரணம் வரை சென்றது

இந்த செய்தியைப் பகிர்க >>>

எரி காயங்களுடன் வபாத்தான காத்தான்குடி இர்சாத் : இறைச்சத்துடன் நேர்மையாக வாழத்துடித்தவர் : மனநிலை பாதிப்பு மரணம் வரை சென்றது.

முகம்மட் இர்சாத் (வயது 38) காத்தான்குடி 3ம் குறிச்சி பாவா வீதியைச்சேர்ந்தவர். சிறந்த ஒழுக்கமுள்ள குடும்பப் பின்னணியைக் கொண்டவர். கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரை கல்வி கற்றிருந்ததுடன், மார்க்க ரீதியான பற்றும் நேர்மையும் சிறு வயது முதலே இவரிடமிருந்து வந்தது.

கல்விப் பொதுத்தராதர சாதரணப்பரீட்சையின் பின்னர் இலங்கையிலுள்ள முன்னணி இஸ்லாமிய கலாசாலையொன்றில் மார்க்கக்கல்வி கற்கச்சென்ற போது, முதலாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருந்த நிலையில், கல்லூரி வளாகத்தில் நின்ற தென்னை மரக்குரும்பபைகள், மாங்காய்களை சக மாணவர்கள் களவாக ஆய்ந்த போது, இது ஹராமான வேலை. கல்லூரி நிருவாகத்தின் அனுமதியில்லாமல் செய்யும் இந்த வேலை ஹராமானதாகும் எனக்கூறி அங்கிருந்து விலகியுள்ளார்.

பின்னர் கல்விப் பொதுத்தராதார உயர் தரம் கல்வி கற்றதுடன், கணணிக் கல்வியையும் ஆங்கிலக் கல்வியை சிறப்பாகக் கற்றுள்ளார். இதன் பின்னர் கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த நிறுவனத்தின் உயர் பதவியிலிருந்த ஒருவர் செய்து வந்த கள்ளத்தனமான வேலையைக்கண்டு இது பிழையான வேலையென்றும், இதை நிறுத்துமாறும் இல்லாவிடில் முதலாளியிடம் தெரியப்படுத்துவேன். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் எனவும் உரியவரிடம் எச்சரித்துள்ளார்.

ஆனால், அவர் அதை விடவில்லை. பின்னர் இவரின் கொள்ளையை முதலாளியிடம் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, குறித்த உயர் பதவியிலிருந்த வெளிநாட்டவர், நான்கு பேருடன் ஓரிரவு இர்சாத்தை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இவரின் தலையிலும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அன்றிருந்து இவருக்கு தலையில் சுகயீனம் ஏற்பட்டதுடன், ஒரு மனநோயாளியாக மாறியுள்ளார்.

கட்டாலிரிருந்து நாடு திரும்பிய இவரை குடும்பத்தினர் பல்வேறு வைத்தியர்களிடமும் காட்டி சுகப்படுத்தினாலும் மருந்துகளை உட்கொண்டு வந்தார்.

காத்தான்குடியிலுள்ள ஒரு உணவகத்தில் காசாளராக தொழில் புரிந்து வந்த போது, அங்கு சிகரட் விற்பனை செய்கின்றார்கள். அது ஹராமானது என்று கூறி அங்கிருந்து விலகினார். பின்னர், காத்தான்குடியில் ஒரு நகைக்கடையில் சேர்ந்து அங்கிருந்த போது தனக்கு அங்கு வேலை ஒன்றுமில்லை. சும்மா இருந்து சம்பளம் பெறுவது ஹராமானதென்று கூறி அங்கிருந்தும் விலகினார்.

ஒரு நாள் இவரும், இவரது சகோதரரும் தாயுமாக மூவரும் கொழும்புக்கு செல்லும் போது, கதுறுவலையிலிருந்து குளிரூட்டப்பட்ட பஸ் வண்டியில் சென்றுள்ளனர். இவரது சகோதரன் (தம்பி) சிறியவர் என்பதற்காக இவருக்கும் தாய்க்குமாக இரண்டு ஆசனங்களுக்கே கட்டணம் செலுத்தி சென்று கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில் இவர்கள் அமர்ந்திருந்த பக்கத்து ஆசனத்தில் ஆளில்லாத போது, தாய் இவரது தம்பியை அந்த ஆசனத்தில் இருப்பாட்ட, இது பிழையான விடயம் நாம் இரண்டு ஆசனங்களுக்கே கட்டணம் செலுத்தியுள்ளோம். தம்பியை தூக்குங்கள் என்று கூறி தாயுடன் தர்க்கம் செய்துள்ளார்.

இவ்வாறு இவரிடம் நேர்மையும் இறையச்சமும் அதிகமாகவே காணப்பட்டுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட இவரை, சுகப்படுத்துவதில் இவரது குடும்பம் காட்டிய அக்கறை மிக அதிகம்.

கடந்த ஏழு வருடங்களுக்கு முன் இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், தாய் மீது இவர் தாக்குதல் நடாத்தியுள்ளார். தாய் வபாத்தானார். பின்னர் மூன்று வருடங்கள் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலிலும் பின்னர் தண்டணையாக நான்கு வருடங்கள் சிறைத்தண்டனையையும் அனுபவித்து வந்த நிலையில், கடந்த மாதம் விடுதலையாகி ஊர் வந்து சுமூகமான நிலையில் நடமாடினார்.

சிறிய வியாபார முயற்சியொன்றிலும் ஈடுபட்டிருந்தார். கடந்த வாரம் இவரை நான் சந்தித்த போது, என்னை சுகம் விசாரித்தார். நானும் அவரிடம் சுகம் விசாரித்தேன். எனது ஊடகச்செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், எனது செய்திகள், ஆக்கங்களை விரும்பிப் பார்ப்பதாகவும் கூறினார்.

01.06.2020ம் திகதி திங்கட்கிழமை மாலை காத்தான்குடி கர்பலா வீதியிலுள்ள பாழடைந்த கட்டடமொன்றில் ஒருவர் தீப்பற்றி எரிகாயங்களுக்குள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்தது.

குறித்த இடத்துக்கு இதை விசாரிக்கச்சென்ற போது, குறித்த நபர் மேற்படி முகம்மட் இர்ஷாத் எனத்தகவல் கிடைத்தது. இவர் எரிந்த நிலையில் வீதியில் கிடந்து சுழன்று கொண்டிருக்கும் காணொளியொன்று சில முக நூல்களில் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதைப்பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.
ஒரு சில மணி நேரத்தில் இவர் வபாத்தாகி விட்டார் என்ற செய்தி கிடைத்தது.

மனநிலை பாதிக்கப்பட்டு சுகமில்லாத நிலையில், இவர் தனக்குத்தானே தீ வைத்துள்ளார் என பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது. இவருடைய பாவங்களை மன்னித்து இவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
03.06.2020

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed