Main Menu

மட்டு. மாவட்ட ஆசனத்தினைப்பெறும் தகுதி முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரமே உள்ளது : அமீர் அலியால் வெல்ல முடியாது – கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
எங்களை நாங்களே பாதுகாத்துக்கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டிக்கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அணுக வேண்டிய காலம் வந்துள்ளதென கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபானை ஆதரித்து ஓட்டமாவடியிலுள்ள தலைமைக்காரியாலயத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ், சிங்களம், முஸ்லிம் சகோதரர்கள் பயணித்தால் முஸ்லிம் சகோதரனை இறங்கி விசாரணை செய்கின்ற காலம் சஹ்ரானுக்கு பிற்பட்ட காலம். இலங்கையிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் சகோதரனையும் பார்த்து அவன் பயங்கரவாதியாக இருக்கக்கூடும் என்று பேரினவாதிகள் சத்தமிட்டுக்கூறும் நிலைமை இந்நாட்டில் திட்டமிட்டு அடிப்படையில் உருவாகியுள்ளது.

எங்களை நாங்களே பாதுகாத்துக் கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டிக்கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அணுக வேண்டிய காலம் வந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பேரினவாதத்திற்கெதிராகப் போராடிக்கொண்டிருக்கின்றோம். பொத்துவிலில் நில அபகரிப்புக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கிழக்கு தொல்பொருள் செயலணி என்று இந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்திற்கு 1956ம் ஆண்டுகளில் 70 சதுரபரப்புள்ள ஏக்கர் காணிகள் கொடுக்கப்பட்டிருந்த போது, 1965ம் ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களத்திற்கு முப்பது ஏக்கர் காணிகள் தான் கொடுக்கப்பட்டது. சிங்கள மதகுருமார்களின் வழிகாட்டுதலின்கீழ் இந்த அரசாங்கம் எழுபது ஏக்கர் காணிகளை குறிப்பாக, முஸ்லிம்கள் காலா காலம் குடியேறியுள்ள காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதற்கெதிராக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கையைப் பொறுத்த வரையில் பெரும்பான்மை இனவாதிகள் எங்களை இல்லாமல் செய்ய வேண்டுமென்கின்ற நடவடிக்கையில் மிகத்தெளிவாக திட்டம் வகுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் சகோதரர்கள் எங்களுக்கெதிராக எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று உங்களுக்கு தெரியும். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து இந்த சமூகத்தைப்பாதுகாக்க வேண்டிய தேவையும். எங்களது இருப்பை, காணியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தெரிவு செய்யப்படும் எமது பாராளுமன்ற உறுப்பினருக்குள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எமது இருப்பை எவ்வாறு பாதுகாக்கப்போகின்றோம் என்ற போர்வையில் ஒவ்வொரு இளைஞனும் புறப்பட வேண்டும். முகைதீன் அப்துல் காதர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஐந்து கிராம சேகவர் பிரிவுகள் கோறளைப்பற்று மத்தியோடு சேர்க்கப்பட்டது. இதற்குப்பதிலாக காணிகள் வழங்குவதாக கூறப்பட்டது. அவரும் மரணித்து விட்டார். அதற்குப்பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக வந்தவர் ஏறத்தாழ பதினோழு வருடங்களாக ஆட்சி செய்கின்றார்.

கொடுக்கப்பட்ட கிராம சேகவர் பிரிவு காணிகள் வளமான காணிகளாக இருந்தது. வளமான நீரோட்டமாக இருந்தது. ஆனால், பதினோழு வருடங்களாக ஆட்சி செய்து முக்கிய பதவிகளில் இருந்தவர் ஏன் இதனை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இவர்களால் முடியாத காரணமாகவா இருந்தது.

அரசியல் ரீதியாக முடிவு காணப்பட வேண்டிய விடயம். இதற்கான காரணமென்ன? முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தது கணேசமூர்த்தி என்பவர். ஆனால், தற்போது அவரில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கின்ற தமிழ் வாக்குகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தன்னுடையசுயநலத்திற்காக பறிகொடுக்கப்பட்ட காணிகளை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் தான் பெற்றுக்கொள்ள முடியும். அதில் மூன்று ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்புபெற்றுக் கொள்ளும். முஸ்லிம்களுக்கு ஆசனமொன்று கிடைக்கும். அந்த ஆசனத்தினைப் பெறக்கூடியதகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரம் தானுள்ளது. இன்னொரு ஆசனத்தினை முஸ்லிம் பெற்றுக் கொள்ள முடியுமென்றால், அது எதிர்காலத்தில் நடக்க முடியாத காரியம். அதனை நோக்கி தமிழ் சகோதரர்கள் விழித்துக் கொண்டார்கள். மூன்று ஆசனங்களை தமிழர்கள் பெறும் ஆசனத்தினை நான்காக அதிகரித்துக் கொள்வதற்காக இளைஞர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள்.

இம்முறை பிள்ளையானுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கலாம். அவ்வாறு ஐந்து பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும் பிரிக்கப்படுகின்றது. இங்குள்ள முன்னாள் அமைச்சர் எந்த முறையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கப் போகின்றார்கள்? என்ற புள்ளி விபரத்தினை எமக்குத்தெரிவிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால், தொழில்வாய்ப்பு பணத்திற்கு விற்கப்பட்ட விடயங்கள் தெரியும்;. அவரின் கீழ் கிராமிய மற்றும் மீன்பிடித்தொழில், விவசாயம், நீர்ப்பாசனத்துறை இருந்தது. இந்த பிரதேசத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார்.

இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரல்லாத சமயத்திலும் குடிநீர்ப்பிரச்சனை இங்கு மாத்திரம் தான் தீர்க்கப்பட்டுள்ளது என்றார்.

ஓட்டமாவடி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.அஸுஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள், இளைஞர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed