Main Menu

அமீர் அலி, ஹிஸ்புல்லாவின் கட்சிகளால் வெற்றி பெற முடியாது – சட்டத்தரணி ஹபீப் றிபான்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடும் கட்சியோ, முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா போட்டியிடும் கட்சியோ வெற்றி பெற முடியாதென மக்களுக்கு நன்றாகத்தெரியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்றத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் தன்னை ஆதரித்து ஓட்டமாவடியிலுள்ள தலைமைக்காரியாலயத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

எமது கல்குடாப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இளவயதில் செய்கின்ற தைரியம் தான் எங்களை முன்னோக்கும். அந்த வகையில், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கல்குடாவுக்கு கொண்டு வர வேண்டுமென்பதற்காக நீங்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.

எங்கள் மண் காப்பாற்றப்பட வேண்டும்.எங்களது மண்ணுக்கு சிறந்த தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும். அந்த தலைமைத்துவம் உண்மையான, நேர்மையான, ஊழலற்ற, பண்பான நல்லதொரு தலைமைத்துவமாக இருக்க வேண்டும். அந்த தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராகவுள்ளேன். இதற்கு நீங்கள் தயாரா?என்று கேட்டு என் பின்னால் ஒன்றிணைய வேண்டும்.

அரசியலில் பல துடிப்புக்கள் மாறுவதற்கு இந்த இளைஞர் சக்தி என்பது ஒரு முக்கியமானதாகவுள்ளது. அந்த சக்தி தான் நீங்கள் கல்குடாவில் எடுக்கின்ற சக்தி. ஒருவரை வெல்ல வைக்கவும், தோற்க வைக்கவும் இளைஞர்களால் முடியும். நாமனைவரும் எமது மண் மீது நம்பிக்கை கொண்டு எமது மண்ணை பாதுகாக்க வேண்டியது எமது அனைவரினதும் கடமையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியிலுள்ள முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடும் கட்சியோ, முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா போட்டியிடும் கட்சியோ வெற்றி பெற முடியாதென்று உங்களுக்கு நன்றாகத்தெரியும். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் வருகின்றதென்றால், அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து மாத்திரமே வர வேண்டும் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.அஸுஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள், இளைஞர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed