Main Menu

ஓட்டமாவடியில் அதிக விலைக்கு கோழி இறைச்சி விற்பனை : வியாபாரிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் – ஆர்.எப்.அன்வர் சதாத்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனைப்பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை விற்பனை செய்த எட்டு வியாபாரிகளுக்கெதிராக திங்கட்கிழமை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் மீராவோடை போன்ற பகுதிகளில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களால் நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைவாக நடைபெற்ற விசாரணைகளின் போதே எட்டு வியாபாரிகளுக்கெதிராக வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி ஒரு கிலோ 500.00 க்கு விற்கப்பட வேண்டுமென்று நிர்ணய விலை உள்ள நிலையில், குறித்த வர்த்தகர்கள் 650.00 க்கு விற்பனை செய்ததாகவும் இதனை விசாரிக்கச்சென்ற அதிகாரிகளை கடமையை செய்வதற்கு இடைஞ்சலாக வார்த்தைப்பிரயோகங்கள் செய்ததாகவும் இவ்வாறு கூடிய விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கெதிராக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்ககு எதிர்வரும் 25.06.2020ம் திகதி வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் பொருட்கொள்வனவில் தெளிவாக இருக்க வேண்டுமென்றும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் எனது தொலைபேசி இலக்கமான 077011096 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed