Main Menu

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவத்தினரை கருணா கொலை செய்தாரா? நடந்தது என்ன ?

இந்த செய்தியைப் பகிர்க >>>

முகம்மத் இக்பால் -சாய்ந்தமருது
அண்மையில் கருணா அம்மான் தெரிவித்த கருத்து, அரசியலரங்கில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது உண்மையா? என ஆராய்வது தான் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1991, 1997, 1998 ஆகிய காலகட்டங்களில் ஆனையிறகு இராணுவத்தளத்தினை கைப்பற்றுவதற்கு புலிகள் பெரும் தாக்குதல் நடாத்தியும், அதனைக்கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்தனர்.

இறுதியாக, விடுதலைப்புலிகளின் “மூன்றாவது ஓயாத அலைகள்” என்ற பெயரில் 2000.03.26 அன்று மாலை ஆணையிறவு படைத்தளத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. ஓயாத தொடர் தாக்குதலினால் 36 நாட்களின் பின்பு தளத்தினை விடுதலைப்புலிகள் முற்றாகக் கைப்பற்றினர்.

தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு இராணுவத்தளத்துக்குச்செல்லும் பிரதான நீர் விநியோகத்தை புலிகள் தடை செய்திருந்தார்கள். இதனால் குடிப்பதற்கு நீரில்லாமல் பல இராணுவத்தினர் மரணித்தனர். ஒரு மாதத்தையும் தாண்டிய புலிகளின் தொடர் தாக்குதலினால் தளத்தின் பல முனைகளை இழந்த இராணுவத்தினர், மேற்கு பக்கமாக ஆழமில்லாத கடல் வழியாக மண்டைதீவை நோக்கித் தப்பிச்சென்றனர். அவ்வாறு செல்லும் போதும் பல இராணுவத்தினர் இறந்தனர்.

இப்படை நடவடிக்கைக்காக விடுதலைப்புலிகளின் முக்கிய முன்னணி தளபதிகள் உட்பட தங்களது அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி சுமார் நாலாயிரம் போராளிகள் களமிறக்கப்பட்டனர். ஆணையிறவு தளத்தினையும், அதனைச்சுற்றியிருந்த முகாமிலும் இருபது தொடக்கம் நாற்தாயிரம் வரையிலான இராணுவத்தினர்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு தளத்தினை தாக்கியளிப்பதென்றால், கருணா கூறியது போன்று வெறும் தளபதி ஒருவரின் தலைமையில் போராளிகள் சென்று தாக்குதல் நடாத்துவதில்லை. ஒரு தளத்தினைக் கைப்பற்றுவதற்கு முன்பு அத்தளத்தின் உள்ளகக்கட்டமைப்பு பற்றிய முழுமையான தகவல்களை புலனாய்வுத்துறையினர் திரட்ட வேண்டும். அவ்வாறு திரட்டுவதற்கு பல வருடங்களும் செல்லலாம்.

திரட்டப்பட்ட புலனாய்வுத் தகவல்களுக்கமைவாக புலிகளின் தலைவர் பிரபாகரன் தாக்குதல் திட்டத்தினை வரைவார். பின்பு அத்திட்டத்தினை தளபதிகளுக்கு விளக்குவார். இதற்காக ஒவ்வொரு பொறுப்புக்கும் மற்றும் ஒவ்வொரு முனைக்கும் ஒவ்வொரு தளபதிகளை நியமிப்பதுடன், அதனை ஒருங்கிணைப்பதற்காக ஒட்டு மொத்த கட்டளைத் தளபதியை நியமிப்பார்.

அவ்வாறு ஆணையிறவு தளம் மீதான தாக்குதலுக்கான ஒருங்கிணைக்கும் கட்டளைத்தளபதியாக கருணா அம்மான் நியமிக்கப்பட்டார்.

கட்டளைத்தளபதி எப்போதும் இராணுவத்தின் துப்பாக்கி வீச்செலைக்கப்பால் பாதுகாப்பான இடத்திலேயே அமர்ந்திருப்பர். கட்டளைத்தளபதியாக நியமிக்கப்படுபவர் சரியாக கட்டளைகளை வளங்குகின்றாரா? என புலிகளின் தலைவர் பிரபாகரன் அவதானித்துக்கொண்டிருப்பார்.

அவ்வாறு கட்டளை வழங்குவதில் தவறுகள் நடைபெற்றால், உடனே அதனை மாற்றம் செய்யும்படி பிரபாகரன் கட்டளைத்தளபதிக்கு பணிப்புரை வழங்குவார். சில நேரங்களில் சூழ்நிலைக்கேற்ப திட்டத்தை மாற்றும்படியும் தளபதிக்கு தலைவர் கூறுவார்.

அத்துடன், இந்தத்தாக்குதல் திட்டத்துக்கு திரட்டப்பட்ட போராளிகளுக்கு தாக்குதல் ஒத்திகை பயிற்சிகள் வேறு பக்கத்தில் நடைபெறும். ஆனால், தாங்கள் எந்த இலக்கைத்தாக்கப்போகிறோம் என்பது இறுதியில் தான் போராளிகளுக்கு தெரிவிக்கப்படும்.

எனவே, ஆணையிறவு மீதான தாக்குதலின் போது, ஒரு இராணுவத்தினரையாவது சுடுவதற்கு கட்டளைத்தளபதி கருணாவுக்கு சந்தர்ப்பம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், தமிழ் மக்களைக் காப்பதற்காக இராணுவத்தைக்கொன்ற வீரன் என தன்னைக்காண்பிப்பதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவ்வாறு கூறினாரேயன்றி, வேறொன்றுமில்லை.

இந்த உண்மை அரச தரப்புக்குத் தெரியாமலுமில்லை. சிங்கள மக்களின் எதிர்ப்பினைச் சமாளிப்பதற்கு அரச தரப்பு கருணாவை விசாரிப்பது போன்று நாடகமாடுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed