Main Menu

கல்முனை நகர மண்டபம் பொது மக்கள் பாவனைக்கு : சபை அமர்வுகள் மீண்டும் பழைய இடத்தில் – மாநகர சபை மாதந்த அமர்வில் தீர்மானம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(பாறுக் ஷிஹான் & எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை நகர மண்டபம் விரைவில் பொது மக்கள் பாவனைக்கு விட கல்முனை மாநகர சபை மாதந்த சபை அமர்வில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை நகர மண்டபத்தை மக்கள் பொது பாவனைக்கு விடவும், மாநகர சபை அமர்வுகளை முன்னர் இடம்பெற்ற இடத்தில் நடாத்தப்பட வேண்டுமெனவும் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.ரோஷன் அக்தர் மாநகர சபை மாதாந்த அமர்வில் கோரிக்கையையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.

கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் தலைமையில் கல்முனை நகர மண்டபத்தில் கடந்த 29ம் திகதி பிற்பகல் இடம்பெற்றது.

இதன் போது உறுப்பினர் ஏ.எம்.ரோஷன் அக்தார் மேலும் இது பற்றி சபையில் உரையாற்றுகையில், கல்முனை பகுதியில் பொது மக்களுக்காக நிகழ்வுகளை மற்றும் கூட்டங்களை கலாசார நிகழ்வுகளை நடாத்த பொது மக்கள் பல்வேறு அசெளகரியமான நிலையிலுள்ளனர். கல்முனை மாநகர சபைக்கட்டடமானது, புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், கல்முனை மாநகர மாதாந்த சபை அமர்வு நகர மண்டபத்தில் மாற்றப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில், இதனை பொது மக்கள் பாவனைக்கு திறந்து விடுவது பற்றிய சிக்கல்கள் காணப்பட்டது.

தற்போது கல்முனை மாநகர சபை புதிய கட்டடத்திற்கான நிர்மாணத்திற்கான நிதியொதுக்கீடு தொடர்பாக இன்னும் சரியான தீர்மானமில்லாமலுள்ள நிலையில், குறிப்பாக, ஒரு மாதத்தில் ஒரு தடவை கூட்டப்படுகின்ற மாதாந்த அமர்வுகளில் இந்நகர மண்டபத்தைப் பயன்படுவதில் இருக்கின்ற சாதக, பாதக விடயங்களை இச்சபையில் கருதிற்கொள்ள வேண்டியுள்ளது .

ஏனென்றால், இந்நகர மண்டபம் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்ட பின், இதில் பல கலாசார நிகழ்வுகள் ஏனைய பொது நிகழ்வுகள் இடம்பெற்று வந்தது. பின்னர் மாநகர சபையினால் தனியார் நிறுவனமொன்றுக்கு வாடகைக்கு விடப்பட்ட பின்னர் பொது மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது. அதன் பின்னர் குறித்த தனியார் நிறுவனத்திக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட இக்கட்டடத்தின் ஒப்பந்தம் மாநகர சபையினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

கல்முனை மாநகர கட்டடடமானது, புதிதாக கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், சபை அமர்வுகள் இங்கு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மாநகர கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்தால், சபை அமர்வுகள் இங்கு இடம்பெற எந்த ஆட்சேபனையும் இருந்திருக்காது. ஆனால், கல்முனை மாநகர கட்டடம் உடைக்கப்படாத நிலையில், மாதத்தில் ஒரு தடவை இந்நகர மண்டபத்தில் சபை அமர்வுகள் இடம்பெறும் நிலையில், பொது மக்கள் இதனைப்பயன்படுத்த முடியாத நிலையிலிருப்பதையும் இச்சபையில் கவனத்திற்கொள்ள விரும்புகிறேன் .

இன்று தனியார் மண்டபங்களில் நிகழ்வுகள் இடம்பெற அதிக வாடகை காணப்படுகின்றது. எமது பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் நலன்கருதி எமது சபை ஒன்றுகூடலை முன்னர் இடம்பெற்ற இடத்தில் நடாத்துவதன் மூலம் பொது மக்களின் நலன்கருதி அனைத்து வசதிகளுடன் மக்கள் பாவனைக்கு நகர மண்டபத்தினை திறந்து வைக்க வேண்டுமென முக்கிய கோரிக்கையை முன் வைகிறேன் என்றார் .

மேலும் இதன் போது இக்கோரிக்கைக்கு ஆதரவாக ஏ.ஆர்.எம்.அஸீம் அவர்களும் இதனை பொது மக்கள் பாவனைக்கு விடும் படி சபையில் உரையாற்றினார்.

கல்முனை மாநகர் வாழ் மக்களின் பாவனைக்கு இம்மண்டபத்தை விடுமாறு விடுத்த வேண்டுகோளை சபை ஏகமனதான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் பழைய இடத்தில் அடுத்த அமர்வு இடம்பெறுமென மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் சபையில் அறிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed