Main Menu

றிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதென ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் மதீனா மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் தன்னை ஆதரித்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்திலே இருந்த முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டுமென்று தேசியத்திலிருக்கின்ற பௌத்தவாதத்தைத் தூண்டுகின்ற அதற்குள்ளிருந்து கொண்டு இஸ்லாத்திற்கெதிராக பிரசாரம் செய்கின்ற, இஸ்லாமியர்களைப் பயங்கரவாதிகள் என்று சித்தரித்துக்காட்டுகின்றவர்களுக்கு தேவை இருக்கிறது. கடந்த காலத்திலிருந்த 22 பாராளுமன்ற உறுப்பினர்களில் அரைக்கு அரைவாசியாகக்கொண்டு வர வேண்டுமென்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே விசேடமாக வண்ணத்திப்பூச்சியிலே ஹிஸ்புல்லாவைக் களமிறக்கியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித்தேர்தலை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். உலகத்திலே எங்கும் கண்டிருக்கமாட்டீர்கள். இலங்கை அரசியலமைப்புக்கு முரணான வகையிலே நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மடையர்கள் என்று நினைத்துக்கொண்டு ஜனாதிபதியாக கோட்டாபய அல்லது சஜித் பிரேமதாச ஆகியோரை ஜனாதிபதியாக்க தீர்மானிக்கும் பொறுப்பு என்னிடமுள்ளதென்று வாய் கூசாமல் பள்ளிவாயல்கள் மற்றும் மக்காவிலும் சத்தியம் செய்தார். இவர் பாரிய பொய்யை சொன்ன காரணத்தினால் வெளிநாடுகளில் ஹஜ்ஜூக்குச்செல்ல முடியாது முஸ்லிம்கள் தடுமாறுகின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கவுள்ள இரண்டு முஸ்லிம் ஆசனங்களைக்குறைக்கவே இவர்கள் வண்ணாத்திப்பூச்சியில் களமிறங்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகியவற்றிக்கு மாத்திரமே ஆசனமுண்டு. வேறெந்த கட்சிகளுக்கும் ஆசனம் கிடையாது.

சில வேளைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித்தேர்தலில் சஹ்ரானை வைத்து பதினான்கு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார்கள்.

தற்போது இந்த ஜனாபதி, பிரதமர் ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மைச் சமூகத்தினைத் திருப்திப்படுத்தவில்லை என்கின்ற பிரச்சனையுள்ளது. பல பொருட்களுக்கு விலைகளைக் குறைப்போம். மின்சாரப்பட்டியலைக் குறைப்போம் என்று பட்டியலிட்டார்கள். ஆனால், இவர்கள் எதுவும் செய்து காட்டவில்லை என்பதற்காக பெரும்பான்மைச்சமூகம் சற்று தளம்பல் நிலையிலுள்ளதென்று இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.

இந்த அரசாங்கம் சரியான முறையில் கொரோணா வைரஸ் தாக்கத்தினைக் கையாளமையினால் எல்லாக் கட்சியினரும் இவர்களுக்கெதிராக பேசிக்கொண்டிருக்கின்றார்கள். எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசா எண்பத்தைந்து ஆசனங்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு கிடைக்குமாகா இருந்தால், அவரே இந்த நாட்டில் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புள்ளது.

அவ்வாறில்லையேல் அடி புடிக்குத் தயாரான பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களைத் தயார்படுத்த வேண்டியுள்ளது. கடந்த காலம் போன்று கௌரவமாக பாராளுமன்றத்தில் விழிக்க முடியாது. கடந்த காலத்தில் குரல் கொடுத்தவர்கள் மீண்டும் இருக்க வேண்டுமாக என்ற பொறுப்பு முஸ்லிம் சமூகத்திடம் இருக்க வேண்டும் என்றார்.

மதீனா மீனவ சங்கத்தின் தலைவர் எம்.நபீர் தலைமையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவரும் வேட்பாளருமான பொறியியளாளர் எம்.எம்.அப்துல் ரஹ்மான், ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed