Main Menu

முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?

இந்த செய்தியைப் பகிர்க >>>

உரிமை என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு தனது சுகபோகங்களை மனதில் ஏந்தி, கட்சியும் தனது பதவியும் பெரிதென்று எண்ணிய முஸ்லிம் தலைவர்களினால் இன்று முழு இலங்கை வாழ் முஸ்லிம்களும் அனாதரவாக விடப்பட்டுள்ளார்கள் என்ற ஒரு நிலை தோன்றியுள்ளது.

அதாவது, இன்றைய இலங்கை பிரதமர் மஹிந்தா ராஜபக்ஷ அவர்கள் 1977 இலிருந்து இலங்கையைத் தாண்டி உலகில் வாழும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒரு போராளி. அவரை இன்றைய சுயநல முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது பட்டம், பதவி, பணம், சுகபோக வாழ்க்கைக்காக மஹிந்தா ராஜபக்ஷவை மட்டுமே குறி வைத்து அரசியல் செய்ததால் தான் இன்று நாங்கள் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இனமாக மாறி வருகிறோம்.

மேலும், பலஸ்தீன் இலங்கை நட்புறவுச்சங்கத்தின் தலைவராக இருந்து இஸ்ரவேலுக்கெதிராக 1977 ஆம் ஆண்டு தொடக்கம் தான் பிரதமராக வரும் வரைக்கும் கொழும்பு கோட்டை தொடக்கம் வீதி வீதியாக பலஸ்தீன் மக்களுக்காக கூட்டங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர் மஹிந்தா. இதனால் அவருக்கு விருது வழங்கப்பட்டு பலஸ்தீன் மக்களால் அங்கு ஒரு தெருவுக்கு மஹிந்தா ராஜபக்ஷ வீதி என்று பெயர் வைக்கப்பட்டு, உலகலாவிய ரீதியில் புகழ் பெற்றவர் தான் மஹிந்த.

இன்னும் சொல்லப்போனால், இலங்கை அரசாங்க வரலாற்றில் அதிகமாக அரபு நாடுகள் நிதியுதவி செய்து பாலங்கள், கட்டடங்கள், வீதிகள் என அபிவிருத்தி செய்ததும் மஹிந்தா காலமே. அதிகமான முஸ்லிம் ஊர்களுக்கு பெரியளவில் வீதிகளும் அதை இணைக்கும் பாலங்களும் மஹிந்த அவர்கள் காலத்திலேயே வந்தது. இவருக்கு முன் பின் வந்த எந்த அரசாங்கத்திற்கும் மஹிந்த காலம் போல் முஸ்லிம் நாடுகள் நெருக்கமாக இருந்ததுமில்லை. நிதியுதவிகள் வழங்கியதுமில்லை.

அதே நேரம், 1997 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களை 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பிறகு வில்பத்து வரைக்கும் அந்த மக்களை குடியமர்த்தி, அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் செய்ததும் இவர் தான். இந்த காலகட்டத்தில் சிங்கள மக்கள் கூட வீதியில் இறங்கி முஸ்லிம் மக்களின் நலனுக்காக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

மேலும், சொல்லப்போனால், இந்த நேரத்தில் ஞானசாரும் இல்லை, ரத்ன தேரரும் இல்லை, ஹலால் பிரச்சினையும் இல்லை, கருணா இருந்தும் அவன் பாட்டுக்கு தனது பணியைச்செய்து கொண்டிருந்தான். ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ஹக்கீம், ரிஷாத் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேகமாக முன்னேறி பல அபிவிருத்திகளை பசில் ராஜபக்ச மூலம் செய்து வந்தார்கள்.

இப்படி பேரும் புகழும் பதவியிலும் மிதந்த ஹக்கீம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் காங்கிரஸ் கட்சிகள் தலைக்கனம் பிடித்து மஹிந்தா ராஜபக்ஷ அவர்களை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நோக்கில் சரத் பொன்சேகாவின் பின்னால் ஓடினார்கள். அதுவும், 2000 ஆம் ஆண்டில் சந்திரிக்கா அம்மையார் ஆட்சியைக் கவிழ்த்து இரண்டு ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியாத ஆட்சி செய்த ரணிலை நம்பி. அன்றிலிருந்து பிடித்தது நிம்மதியாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கு நாசம். ஆகவே, இன்றைய எமது நிலைக்கு காரணம் இந்த இரண்டு தேசியத்தலைவர்களும் விட்ட தவறே!

இதற்குப் பிறகு தான் ஞானசார் வருகிறார், ரத்ன தேரர் வருகிறார், ஹலால் பிரச்சினை, மதரஸாக்கள் பிரச்சினை என எமது சமூகம் நசுக்கப்பட்டது. இப்படி இருந்தும், பதவிக்காக மஹிந்த பக்கம் ஓடிய இவர்கள் இருவரும். மீண்டும் 2015 ஆம் ஆண்டு ரணிலுடன் சேர்ந்து மஹிந்தாவுக்கு துரோகம் செய்து தோற்கடித்து ரணிலுடன் இணைந்து மைத்திரியுடன் ஆட்சியமைத்து சுகபோகம், பதவி, பணம் என கொடி கட்டிப்பறந்த போது, 52 நாள் அரசியல் மாற்றம் மீண்டும் மஹிந்த பிரதமராக வருகிறார்.

அப்போதாவது, 32 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியுற்று, தனது பதவிக்காலத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாகவோ சினேகித பூர்வமாகவோ செல்லாமல் முஸ்லிம் விரோதப்போக்கைக் கடைப்பிடித்த ரணிலை விட்டு இவர்கள் இருவரும் வெளியே வராமல் உம்ரா போய் வந்து மஹிந்தவுக்கு எதிராக கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு நீதிமன்றம் ஏறி மஹிந்த அவர்களை பதவி இறங்க வைத்தார்கள்.

இதை நங்கு கண்ணுற்ற சிங்கள அரசியல் தலைமைகளும், சிங்கள மக்களும் சிந்தனை செய்து உணர்ந்து கொண்டார்கள். முஸ்லிம் – தமிழ் அரசியல் களம் ஒன்றுபட்டு விட்டது. நாங்கள் ஒன்று படும் நேரம் இது தான் என்று எண்ணி சிங்கள தேசம் சத்தமில்லாமல் அரசியல் புரட்சி செய்து அரசியல் மாற்றம் காண கோத்தபாய ராஜபக்ச அவர்களை ஜனாதிபதியாகக் கொண்டு வந்தார்கள்.

மேலும், இந்த ஜனாதிபதித்தேர்தலில் கூட மஹிந்தவுக்கெதிராக ரணிலுடன் இணைந்து செயற்பட்டார்கள். இதைத்தொடர்ந்து 2020/08/05 ஆம் திகதி நடக்கவுள்ள பொதுத்தேர்தலிலும் மஹிந்தாவுக்கெதிராக சஜித்துடன் சேர்ந்து போட்டியிடும் இவர்களின் ஒரே நோக்கம் மஹிந்த வரக்கூடாது என்பதாகும். இந்த இரண்டு முஸ்லிம் கட்சிகளும் தொடர்ந்து தவறுகளைச்செய்து வந்து, அதை மறைக்க இனவாதம் என்ற சொல்லைத்தூக்கி எமது தலையில் போடுகிறார்கள்.

மேலும், இந்த இரண்டு தலைவர்கள் மக்களின் நலனுக்காகச் செயற்பட்டால் இருவர்களும் இணைந்து தனிக்கூட்டணி அமைத்து இலங்கை முழுவதும் போட்டியிட்டு சஜித் வென்றால், சஜித் பக்கம், மஹிந்த வென்றால் மஹிந்தா பக்கம் என்று போயிருக்கலாம். ஆனால், இவர்கள் இருவரும் தொடர்ந்து மஹிந்தவுக்கெதிராகச் செயற்பட்டு இன்று நட்டாற்றில் முஸ்லிம் மக்களைத் தள்ளி விட்டார்கள்.

ஆகவே, இந்த இரண்டு முஸ்லிம் தலைவர்களின் போராட்டம் மஹிந்த என்ற தனி நபருக்கெதிராகவே அமைகிறது. இதனாலேயே மஹிந்தவை ரிஷாத் மற்றும் ஹக்கீம் இருவருக்கும் எதிராகச்செயற்பட வைத்தது. மஹிந்தவின் இன்றைய நிலை முஸ்லிம் மக்களுக்கெதிரான நகர்வில்லை என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்தவின் சிந்தனையில் முஸ்லிம்களுக்கெதிரான சிந்தனையைக் கொண்டு வந்தவர்கள் யார் என்று இப்போது உங்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

கடைசியாக தமிழ் கூட்டணி கூட பிரிவினைவாத அரசியலைத் தூரமாக்கி தனது மக்களின் நலனுக்காக ஆளும் அரசுடன் இணைந்து பயணிக்கத் தீர்மானித்திருக்கும் இக்கால கட்டத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகளும் பகைமை மற்றும் வெறுப்புப்போக்கான அரசியலைக்கைவிட்டு மக்களின் நலனுக்காக வேண்டி இனியாவது ஆளும் மஹிந்த அரசுடன் ஒன்றுபட்டு பயணிப்பது எனது விருப்பம் மட்டுமல்ல, முழு நாட்டில் வாழும் சகோதரத்துவ எண்ணம் கொண்ட அனைத்தின மக்களின் விருப்பமாகும். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் இணைந்தே பயணித்து எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வோம்.

நன்றி.
உங்கள் ஐனி.
2020

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed