Main Menu

தேர்தல் கால ஒலிபெருக்கி பாவனை மட்டுப்படுத்தப்பட்ட வேண்டும் : சட்டத்தைப் போதிக்க வேண்டிய அரசியல்வாதிகள் சட்டத்தை மீறலாமா?

இந்த செய்தியைப் பகிர்க >>>

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது
ஒலிபெருக்கியைப் பாவித்து தேர்தலுக்கான பிரசாரப்பொதுக்கூட்டம் நடாத்துவதற்காக பொலிசார் அனுமதி வழங்குகின்ற போது, குறித்த நேரத்துக்குள் பொதுக்கூட்டத்தை முடிக்க வேண்டுமென்பது பொலிசாரின் அனுமதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குறிப்பாக, நள்ளிரவு பன்னிரெண்டு மணியுடன் கூட்டத்தை முடிக்க வேண்டுமென்பது பொலிசாரின் கட்டளையாகும். அதற்கு உடன்பட்டவாறே நாங்கள் அனுமதியைப்பெற்று ஒலிபெருக்கிகளைப்பாவித்து பொதுக்கூட்டத்தினை நடாத்துகின்றோம்.

அவ்வாறு பெற்றுக்கொண்ட அனுமதிக்கமைவாக நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் பொதுக்கூட்டத்தினை நிறைவு செய்தால் மட்டுமே நாங்கள் சட்டத்தினை மதிப்பதாக அமைகின்றது. ஆனால், பொலிசாரினால் அனுமதிக்கப்பட்ட நேரத்தினையும் தாண்டி தொடர்ந்து பொதுக்கூட்டம் நாடாத்துகின்ற போது, நாங்கள் சட்டத்தினை மீறுகின்றோம். அவ்வாறு மீறுகின்ற போது, ஒலிபெருக்கியை அணைக்குமாறு அறிவுறுத்துவது பொலிசாரின் கடமையாகும்.

அவ்வாறு பொலிசாரின் அறிவுத்தலை மீறினால் அவர்கள் ஒலிபெருக்கியின் வயர்களைக் கழட்டுவது தவிர்க்க முடியாதவொன்றாகும். அவ்வாறு பொலிசார் ஒலிபெருக்கியின் வயரைத்துண்டிக்கும் வரைக்கும் இருந்து விட்டு, தங்களது அல்லக்கைகள் இருக்கின்றார்கள் என்ற தைரியத்தில் பொலிசாருடன் வாய்த்தர்க்கம் செய்து மக்கள் முன்பாக தங்களை வீரர்களாகக் காண்பிக்க முற்படுவதும் ஒரு அரசியல் நாடகமாகும்.

அதாவது, நாங்கள் சட்டத்தை மீறியவாறு பொலிசாருடன் வாய்த்தர்க்கம் செய்வது ஒன்றும் வீரமல்ல. அது மக்கள் முன்பாக காண்பிக்கும் நாடகமாகும். வீரமென்றால், எமது மக்களுக்கெதிராக எத்தனையோ அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கின்றது. அப்போது கோழைகளாக இருந்து விட்டு, பொலிசாரிடம் வாய்த்தர்க்கம் செய்வது மட்டும் வீரமாகாது.

மக்களை வழிநடாத்துகின்ற நாங்கள் முதலில் சட்டத்தினை மதிக்கத்தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் அதிகாரத்துக்கு வந்த பின்பு மக்களுக்கு சட்டத்தினைப் போதிக்க முடியும். இல்லாவிட்டால், அவ்வாறு அறிவுறுத்துவதற்கு எங்களுக்கு எந்தத்தகுதியும் இருக்காது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed