Main Menu

கல்முனைத்தொகுதியை வெற்றி கொள்ளும் துரும்பு மருதமுனையிடம்?

இந்த செய்தியைப் பகிர்க >>>

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது
அம்பாறை மாவட்டத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்று பிரசாரம் செய்கின்ற நாங்கள் கல்முனைத் தொகுதியைப் பற்றியும் அலச வேண்டியுள்ளது.

1988 மாகாண சபைத்தேர்தல் தொடக்கம் 2018 இன் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் வரைக்குமான அனைத்துத் தேர்தல்களிலும் கல்முனைத் தொகுதியில் அமோக வெற்றி பெற்று கல்முனை தனது கோட்டை என்பதனை முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே வருகின்றது.

அது போல, இந்தத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென்பது தான் எங்களது பிரார்த்தனையாகும். அதனால் 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல், உள்ளூராட்சிமன்றத்தேர்தல் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்து ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

2015 பொதுத்தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு சாய்ந்தமருதின் பதின்மூவாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் அடங்கலாக முஸ்லிம் காங்கிரஸ் 24,992 வாக்குகளைப் பெற்றதுடன், தமிழரசுக்கட்சி 10,847 வாக்குகளையும், மக்கள் காங்கிரஸ் 8,549 வாக்குகளையும் பெற்றது.

இதில் வெற்றி பெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கும் இரண்டாமிடத்துக்கு வந்த தமிழரசுக் கட்சிக்குமிடைப்பட்ட வாக்குகளின் வித்தியாசம் 14,145 ஆகும். 2018 உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் யானைச்சின்னத்தில் போட்டியிட்டு முஸ்லிம் காங்கிரஸ் 17,424 வாக்குகளையும், சாய்ந்தமருது சுயேட்சைக்குழு 13,239 யும், தமிழரசுக்கட்சி 9003 யும், மக்கள் காங்கிரஸ் 7573 வாக்குகளையும் பெற்றது.

2015க்கு முன்பு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் இரண்டாமிடத்தைப் பெறுகின்ற கட்சிகளை விட சுமார் பத்தாயிரத்துக்கு மேலான வாக்குகள் வித்தியாசத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறுவது வழக்கமாகும்.

ஆனால், சாய்ந்தமருதில் ஏற்பட்ட எழுச்சிப் போராட்டத்தின் விளைவாக கடந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் சாய்ந்தமருதிலிருந்து முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படுகின்ற வாக்குகள் சுயேட்சைக்குழுவுக்குச் சென்றதனால் 4,185 வாக்குகள் வித்தியாசத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான வாக்கு வித்தியாசமாகும்.

சாய்ந்தமருதில் ஆறு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு ஏராளமான பணம் செலவளிக்கப்பட்டிருந்தும் 2,278 வாக்குகளையே முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது. மு.கா வரலாற்றில் பெற்றுக்கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இது ஓர் பின்னடைவாகும்.

வழமையாக தொண்ணூறு வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை வழங்குகின்ற சாய்ந்தமருதில் இம்முறை மு.கா சார்பாக வேட்பாளர் எவரும் நிறுத்தப்படவில்லை. அதாவது, முஸ்லிம் காங்கிரசின் எதிரிகளுக்கு அங்கே தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், சாய்ந்தமருது எழுச்சிக்கு முன்பிருந்தது போன்று மு.காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை அங்கு காண முடியவில்லை.

தற்போது சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையிலான அணியினருக்குள் பிளவுகள் ஏற்பட்டிருந்தாலும், அது முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவான அலையாக மாறவில்லை. மாறாக, மயோன் முஸ்தபாவின் பக்கமே அந்த வாக்குகள் திரும்பியுள்ளது.

அத்துடன், இத்தேர்தலில் சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினர் அதாவுல்லாவுடன் இணைந்து போட்டியிடுவதனால் கல்முனைத்தொகுதியின் ஏனைய ஊர்களிலுள்ள தேசிய காங்கிரசின் வாக்குகளையும் சேர்த்து கணிக்க வேண்டியுள்ளது.

கடந்த 2018 உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் சாய்ந்தமருது எழுச்சியின் காரணமாக கல்முனை பறி போகலாமென்ற அச்சத்தினால் கல்முனைக்குடியில் மு.காங்கிரசின் அலை அதிகமாக இருந்தது. இதற்கு ஐ.தே.கட்சியினர்களின் நேரடி ஒத்துழைப்பும் இருந்தது.

ஆனால், இம்முறை கல்முனைக்குடியில் மக்கள் காங்கிரஸ் சார்பாக வை.எல்.எஸ் ஹமீதும், ஜவாதும் களமிறங்கியிருப்பதனால் கடந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் பெற்றது போன்று, இந்தத்தேர்தலிலும் ஒட்டுமொத்த வாக்குகளையும் எதிர்பார்க்க முடியாது.

அத்துடன், கடந்த உள்ளூராட்சிமன்றத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை மருதமுனையில் மு.காங்கிரசின் வாக்கு வங்கியில் சரிவினைக் காணக்கூடியதாகவுள்ளது. அங்கு தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு கடந்த தேர்தலை விட சொற்ப வாக்குகள் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது மு.காங்கிரசிலிருந்து சென்றதாகும்.

இவைகள் ஒரு புறமிருக்க, கல்முனையில் இரண்டாவது சக்தியாக இருக்கின்ற தமிழர்களின் பிரதேசங்களில் கருணா அம்மானின் எழுச்சி அதிகரித்துக் காணப்படுகின்றது.

முஸ்லிம் மக்களுக்கெதிரான விசமப்பிரசாரமும், வாக்குறுதிகளுமே இதற்கு காரணமாகும். கல்முனையைக் கைப்பற்ற வேண்டுமென்ற இலட்சியத்துடன் கருணா தலைமையில் கல்முனை தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

கடந்த காலங்களை போலல்லாமல் இந்தத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிக்கும் வீதம் அதிகரிக்கும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முஸ்லிம்களின் வாக்கு வீதம் குறைவடையலாமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் வழமை போன்று முஸ்லிம் காங்கிரஸ் கல்முனைத் தொகுதியை வெற்றி பெறுவதென்றால், அது மருதமுனை மக்களின் கையிலேயே தங்கியுள்ளது. மருதமுனை மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகப்படியான வாக்குகளைச் செலுத்தாவிட்டால் கல்முனைத்தொகுதியை கைப்பற்றுவது கருணா அம்மானா?அல்லது தேசிய காங்கிரசா? என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed