Main Menu

விகிதாசார தேர்தல் முறைமை : கணிப்பீடு

இந்த செய்தியைப் பகிர்க >>>

விகிதாசார தேர்தல் முறைமை,
எம்.பிக்களை கணிப்பிடும் படிமுறை,
ஒரு ஆசனத்துக்கான “ஈவு“ பெறுமானம்,
5% வெட்டுப்புள்ளி,
இரண்டு சுற்று ஆசன ஒதுக்கீடு,
விருப்பு வாக்கின் செல்வாக்கு,
அரசியல்வாதிகளின் பொய்க்கணக்குகள் என அனைத்து விளக்கங்களும் உள்ளடங்கிய “பத்தி“

(ஏ.எல். நிப்றாஸ் – வீரகேசரி)

‘எங்களது தலைவர், எமது மாவட்டத்திலிருக்கின்ற பாராளுமன்ற ஆசனங்களில் 5 ஆசனங்களை நாங்கள் பெறுவோமென்று மேடையில் கூறினார். எல்லோரும் கரகோசம் எழுப்பி வெற்றிக்கோஷமிட்டனர். இன்னுமொரு கட்சியின் தலைவரும் நாங்கள் 4 ஆசனம் எடுப்போமென்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.

எனவே, வீட்டுக்கு வந்து மகனிடம் கேட்டேன். ‘எப்படி வாப்பா மாவட்டத்திலிருக்கின்ற மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையே 7 தானே. அப்படியிருக்கையில், இது எப்படிச்சாத்தியம்? என்று கூறி சிரித்து விட்டுப் போய் விட்டான். எனக்கு குழப்பமாயிருக்கின்றது தம்பி’ என்று ஒரு முதியவர் அங்கலாய்த்தார்.

உண்மை தான், இந்தக்குழப்பம் அல்லது தெளிவின்மை பரவலாக இருக்கின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் இது மேலெழுகின்றது. ஆனால், அரசியல்வாதிகளின் கதைவிடுதல்களை; கண்மூடித்தனமாக, தெய்வ வாக்குப் போல நம்புகின்றவர்கள், இந்தச்சந்தேகங்கள் எதுவுமற்ற மாய உலகில் வாழ்கின்றனர்.

அரசியல்வாதிகள் எந்த அடிப்படையுமின்றி சொல்கின்ற கணக்குகளையும் கணிப்புக்களையும் சரியென நம்பி, மற்றவருடன் முட்டாள்தனமாக விவாதிக்கின்ற ஒரு கூட்டமும் குறிப்பாக, முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கின்றது.

கணக்கு காட்டுதல்
முஸ்லிம் அரசியல் பரப்பில், வழமை போலவே இத்தேர்தல் காலத்தில் பல்வேறு கணக்குகளும் முன்கணிப்புக்களும் வெளியிடப்படுகின்றன. உதாரணமாக, நாட்டில் எங்காவது 9 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி, அணி 2 ஆசனங்களை வெல்வதற்கான நிகழ்தகவுகளே காணப்படுகின்ற நிலையில், ‘நாங்கள் 6 ஆசனங்களைப் பெறுவோம்’ என்று பரப்புரை செய்வதைக் காண்கின்றோம்.

இதனடிப்படையில், எல்லா முஸ்லிம் அணிகளின் வேட்பாளர்களும் எதிர்வு கூறுகின்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் கூட்டிப்பார்த்தால் அந்த மாவட்டத்திலிருக்கின்ற ஆசனங்களை 2ஆல் பெருக்க வேண்டி வரும். இக்கட்சிகள் எல்லாம் தமக்கு கிடைக்குமென கூறுகின்ற வாக்குகளின் மொத்த எண்ணிக்கையானது, அத்தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாகக்கூட இருக்கலாம்.

முஸ்லிம் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான வாக்குகளை அதிகரிப்பதற்கும், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் ஒரு தேர்தல் பிரசார உத்தியாக இந்த கணக்குக்காட்டும் பிரசாரங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி தமிழர், சிங்களவர் அரசியலிலும் இதே போக்குகளை அவதானிக்கலாம்.

ஆனாலும், மக்கள் இதில் தெளிவு பெற வேண்டியிருக்கின்றது. குறிப்பாக, இம்முறை முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தரத்தின் அடிப்படையிலும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் உறுதிப்படுத்த வேண்டிய நிலை முஸ்லிம்களுக்கு இருக்கின்றமையில், அரசியல்வாதிகளின் பேய்க்காட்டல்களை நம்பி மாயைகளை நம்பியிருக்காமல், இது விடயத்தில் ஒவ்வொரு முஸ்லிம் பொது மகனும் தெளிவு பெற வேண்டியுள்ளது.

விகிதாசார முறைமை
விகிதாசாரத்தேர்தல் முறைமையில் அனுகூலங்களும் பிரதிகூலங்களும் இருந்தாலும் கூட, உலகில் அநேக நாடுகளில் பயன்பாட்டிலுள்ள தேர்தல் முறைமையாக இது காணப்படுகின்றது. பின்லாந்து, சுவீடன், இஸ்ரேல், பிரேசில், நெதர்லாந்து, தென்னாபிரிக்கா, டென்மார்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளடங்கலாக 80 இற்கு மேற்பட்ட நாடுகளில் சிறு சிறு பிரத்தியேக மாற்றங்களுடன் இத்தேர்தல் முறைமை கடைப்பிடிக்கப்படுகின்றது.

இலங்கையில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிடைத்த பட்டறிவின் பிரகாரம், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பினூடாக விகிதாசாரத்தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தியது. ‘ஒரு குறிப்பிட்ட தொகுதி வாக்காளப் பெருமக்களால் அளிக்கப்படும் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கு விகிதாசார அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்ற முறை’ என இதனைக்குறிப்பிடலாம்.

இலங்கையில் தற்போது உள்ளூராட்சித் தேர்தல்களில் இந்த முறைமை நடைமுறையிலில்லை. பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத்தேர்தல்களே இம்முறையின் கீழ் வருகின்றன. ஆனால், ஒரு வேளை இப்போதிருக்கின்ற சட்ட ஏற்பாடுகளைக் கொண்டமைந்த விகிதாசாரத்தேர்தல் முறைமையில் நாம் சந்திக்கின்ற கடைசி பொதுத்தேர்தலாகக்கூட இது அமையலாம். ஆகவே தான், சிறுபான்மையினருக்கு ஒரு காப்பீடு போல கருதப்படும் இத்தேர்தல் முறைமையின் கீழ் இடம்பெறவுள்ள ஆகஸ்ட் 5 தேர்தலை தெளிவுடன் கவனமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எம்.பி.ஆசனங்கள்
இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்களும் 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டமாகவும், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா நிர்வாக மாவட்டங்கள் வன்னித்தேர்தல் மாவட்டமாகவும் காணப்படுகின்றன.

அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாகவும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நமது பாராளுமன்றம் 225 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் 196 எம்.பி.க்கள் மாவட்டங்களிலிருந்து நேரடியாகவும் 29 பேர் தேசியப்பட்டியல் மூலமாகவும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகின்றனர். அரசியலமைப்பின் 98(8) உறுப்புரைக்கமைய ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் அனுப்பப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயம் செய்கின்றது.

பொதுவாக மாவட்டங்களுக்கான இந்த ஆசன ஒதுக்கீடு ஒவ்வொரு மாவட்டத்திலும் காணப்படும் வாக்காளர்களின் விகிதாசாரத்தைப் பொறுத்து அமைகின்றது. இதனாலேயே சில மாவட்டங்களில் ஆசனங்களை அதிகரிக்க அல்லது குறைக்க வேண்டுமென்ற சர்ச்சைகள் எழுகின்றன.

ஆகவே, இப்பின்னணியில், கட்சிகளுக்கு மாவட்டங்களில் கிடைக்கின்ற விகிதாசார வாக்குகளின் அடிப்படையில்; நாடு முழுவதும் 196 ஆசனங்கள் பகிரப்பட்டுகின்றன.

அத்துடன், ஒரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவானது தேசிய மட்டத்தில் பெற்றுக்கொண்ட வாக்குகளை அடிப்படையாக வைத்து 29 தேசியப்பட்டியல் ஆசனங்களும் ஒதுக்கப்படும். அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்திய 99 (அ) உறுப்புரை தேசியப்பட்டியல் பற்றித் தெளிவாக விபரித்துள்ளது.

வாக்கெண்ணும் நடைமுறை
தேர்தல் காலத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரம் மேலோங்கி நிற்குமென்பதை நாமறிவோம். அந்த வகையில், வாக்களிப்பு நிறைவு பெற்றதும், வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டதும், தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

வாக்குப்பெட்டிகள் கொட்டப்பட்டு முதலாவதாக வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் கணக்கிடப்படும்.

அரசியலமைப்பின் 15 ஆவது திருத்தம் அறிமுகஞ்செய்த, 99 (அ) உறுப்புரைக்கமைவாக, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 சத வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற கட்சி தகுதியற்றதாக்கப்படும்.

எனவே, ஆசன கணிப்பீடு போன்ற அடுத்த கட்டச்செயற்பாடுகளுக்கு அக்கட்சி உள்வாங்கப்படாது. ஏற்கனவே 12 சதவீதமாகக் காணப்பட்ட இந்த வெட்டுப்புள்ளியை பெரும்பாடுபட்டு 5 சத வீதமாகக் குறைத்தவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் என்பது இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

எஞ்சிய செல்லுபடியான வாக்குகள் ஆசன ஒதுக்கீட்டுக்காக கருத்திற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக வாக்குகளைப்பெறும் அரசியற்கட்சிக்கு ஒரு ‘மேலதிக’ (போனஸ்) ஆசனம் உரித்தாகும். அத்துடன், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைவாக ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு கிடைக்க வேண்டிய ஆசனங்கள் இரு சுற்றுக்களில் கணிப்பீடு செய்யப்படும்.

இரு சுற்றுக்கள்
அதாவது, முதற்சுற்றில் ஒரு மாவட்டத்தின் வாக்குகள், மொத்த ஆசனங்களில் ஒரு போனஸ் ஆசனம் கழிக்கப்பட்டு வருகின்ற தொகையினால் வகுக்கப்படும். இதிலிருந்து ஒரு எம்.பி.யைப் பெறுவதற்கான வாக்குகளின் எண்ணிக்கை கணிப்பிடப்படும். கணிதத்தில் இத்தொகையை ‘ஈவு’ (quotient) எனக்கூறுவர். முதற்சுற்றில் ஒரு கட்சி பெற்ற ஆசனங்களை கணிப்பதற்காக இந்த ஈவு பெறுமானம் பயன்படுத்தப்படும்.

ஒரு குறிப்பிட்ட கட்சி பெற்ற வாக்குகளை, ஒரு ஆசனத்தைப் பெறுவதற்காக குறைந்தபட்சம் பெற்றிருக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கையான ஈவு பெறுமானத்தால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் எண்ணிக்கையே அந்த கட்சி முதற்சுற்றில் பெறும் ஆசனங்களாக அமையும். ஒரு கட்சி பெற்ற மொத்த வாக்குகள் ஈவு பெறுமானத்தை விட குறைவு என்றால் முதல் சுற்றில் அக்கட்சிக்கு ஆசனம் ஒதுக்கப்படாது.

இந்நிலையில், முதற்சுற்றில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட பிறகும் மீதமாக ஆசனங்கள் காணப்படுமாயின் இரண்டாவது சுற்றில் ஒதுக்கீடு செய்யப்படும். இதன்போது ஏற்கனவே ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் மீதமாக இருக்கின்ற வாக்குகளின் எண்ணிக்கையும், (ஈவு பெறுமானத்தை விட) குறைந்த வாக்குகளைப் பெற்ற அணியின் வாக்குகளும் கருத்திற் கொள்ளப்படும்.

இந்த நடைமுறையின் போது, அதிக எண்ணிக்கையான வாக்குகளை கொண்ட கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கும். இன்னும் ஆசனங்கள் இருந்தால் அடுத்தடுத்த நிலையில் உள்ள கட்சிகளுக்கு ஆசனங்கள் இங்குவரிசையில் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கமைய ஏற்கனவே ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கோ அல்லது பெறாத கட்சிக்கோ இரண்டவது சுற்றில் ஆசனம் கிடைக்கலாம்.

உதாரண விளக்கம்
உதாரணமாக, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியான வாக்குகள் 450,000 எனவும், 1 போனஸ் ஆசனம் தவிர அம்மாவட்டத்திற்கு 8 ஆசனங்கள் உள்ளன என்றும், இத்தேர்தலில் ஏ, பி, சி, டி என நான்கு கட்சிகள் போட்டியிட்டு 5 சத வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெறுகின்றன எடுத்துக்கொள்வோம்.

அப்படியாயின், இக்குறிப்பிட்ட மாவட்டத்தில் ஒரு எம்.பி.யைப் பெறுவதற்காக ஒரு கட்சி பெற வேண்டிய ஆகக்குறைந்தபட்ச நிர்ணய வாக்குகளின் எண்ணிக்கை (அதாவது ஈவு பெறுமானம்) 56,250 வாக்குகளாகும்.

இந்நிலையில், கட்சிகள் பெற்ற வாக்குகளை எண்ணியதன் அடிப்படையில் ‘கட்சி – ஏ’ 180,000 வாக்குகளையும், ‘கட்சி – பீ ‘142,500 வாக்குகளையும், ‘கட்சி – சி’ ஆனது 75,000 வாக்குகளையும் பெற்றிருக்கின்றதென்றும், ‘டீ’ கட்சியானது, 52,500 வாக்குகளையும் பெறுகின்றதென்றும் கற்பனை செய்து கொள்வோம்.

இதற்கமைய முதலாவது சுற்றில் ஈவுப்பெறுமானமான 56,250 வாக்குகள் ‘ஏ’ கட்சி பெற்ற வாக்குகளில் 3 முறை உள்ளடங்குவதால் அக்கட்சிக்கு 3 ஆசனங்களும், ‘பி’ கட்சியின் வாக்குகளின்படி 2 ஆசனங்களும், ‘சீ’ கட்சிக்கு ஒரு ஆசனமும் ஒதுக்கப்படும். இதற்கு மேலதிகமாக ஏற்கனவே ‘ஏ’ கட்சிக்கு போனஸ் ஆசனமும் தானாகவே உரித்தாகி விடும்.

இப்போது 8 ஆசனங்களில் 6 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு விட்டதுடன், இன்னும் 2 ஆசனங்களை ஒதுக்குவதற்கு இடமிருப்பதால் இரண்டாவது சுற்று ஒதுக்கீடு இடம்பெறும்.

மேற்படி தரவின் பிரகாரம், ஏ, பி, சீ ஆகிய கட்சிகளுக்கு முறையே 11,250, 30,000, 18,750 வாக்குகள் மீதமாக காணப்படுகின்றன. இந்த வாக்குகளுடன், முதற்சுற்றில் ஆசனம் எதனையும் பெறாத ‘டீ’ கட்சியின் மொத்த வாக்குகளான 52500 வாக்குகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதன்படி, ஈவு பெறுமானத்தை விட குறைவான போதும் இரண்டாவது சுற்றில் ஆகக்கூடிய (52,500) வாக்குகளைக் கொண்டுள்ள ‘டீ’ கட்சிக்கும், அதேபோன்று, அதற்கடுத்த நிலையிலுள்ள (30,000) ‘பீ’ கட்சிக்கும் தலா ஒவ்வொரு உறுப்பினர்கள் ஒதுக்கப்படும். இதுவே, விகிதாசாரத்தேர்தல் முறையில் கட்சிகளுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்படும் சூத்திரமாகும்.

விருப்பு வாக்குகள்
இவ்வாறு கட்சிகளுக்குரிய ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், அந்தக்கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் ஆசனங்கள் பகிரக்கப்படும். இதன் போது, அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தம் அறிமுகஞ்செய்த விருப்பு வாக்குமுறைமை ஏற்பாடுகளின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப்பெற்ற வேட்பாளர்ககளிடையே இறங்கு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது தீர்மானிக்கப்படுவர்.

எனவே, இது தான் மேலோட்டமாக விகிதாசாரத்தேர்தல் முறைமையின் வழமையான கணிப்பீட்டு முறை என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். கட்சிக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் அந்தக் கட்சியின் ஆசனங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கின்ற அதே நேரத்தில், விருப்பு வாக்குகளின் அடிப்படையிலேயே எந்த வேட்பாளர் அந்த ஆசனத்திற்குரித்துடையவர் என்ற முடிவெடுக்கப்படும்.

அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், ஒரு கட்சிக்கு பக்கச்சார்பாக நின்று கருத்து வெளியிடுவோர் எதனையும் கூறலாம். எல்லா எம்.பி.க்களையும் நாமே எடுப்போமென்று கூறலாம். அதற்கேற்றாற்போல் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் கிடைக்குமென்றும் ஒரு கூட்டல் கழித்தல் கணக்கை காட்டலாம்.

ஆனால், முஸ்லிம்கள் உள்ளடங்கலாக அனைத்தின மக்களும் இது விடயத்தில் தெளிவுடன் சென்று வாக்களிக்க வேண்டும்.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 26.07.2020)

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed