Main Menu

அமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியைத் தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி இடம்பெறுவதாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

மட்டு. மாவட்டத்தில் ஐக்கிய சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை ஆதரித்து நேற்றிரவு (28.07.2020) ஓட்டமாவடி எம்.பி.சீ.எஸ் வளாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய, சர்வதேசளவில் நாமம் உச்சரிக்கப்படுகின்ற உங்கள் மகனை இந்தத்தேர்தலில் தோற்கடிக்க மஹிந்த அரசின் அடிவருடிகள் முயற்சி செய்கின்றனர்.

கடந்த காலங்களிலும் லெப்பை ஹாஜி, றியாழ் போன்றோரும் தற்போது போட்டியிடுகின்ற வேட்பாளரும் அமீர் அலியைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே நிறுத்தப்பட்டுள்ளனர். இதனை கல்குடா சமூகம் உணர்ந்து அதற்கான விடையைத் தருவார்களா? என்பது தான் எமக்கு முன்னாலுள்ள கேள்வியாகும்.

கடந்த காலத்தில் அமீர் அலி தோற்கடிக்கப்பட்ட போது கண்ணீர் வடித்த சமூகம், அவர் தோல்வியின் பின்னால் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களில் ஒரு வெற்றிடம் இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

கட்சியின் ஆரம்பம் முதல் அதன் வளர்ச்சியில் பல்வேறு பங்களிப்புக்களைச் செய்தவர்களில் முதன்மையானவராக அமீர் அலி திகழ்கிறார். இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அமைச்சர்களிடம் சென்று கெஞ்சியதை நான் கண்டுள்ளேன். இவ்வாறு அயராதுழைத்த பெருமகன்.

இவ்வாறான ஒருவரைத் தோற்கடிப்பதற்காக சதி நடந்து கொண்டிருக்கிறது. ராஜபக்ச அரசாங்கம் அவர்களது ஏஜெண்டுகளாக ஒருவரை நிறுத்தி கலிமாச்சொன்ன எமது சமூகத்தின் வாக்குகளைப் பிரித்தெடுத்து இம்மாவட்டத்திலிருந்து முஸ்லிம்கள் எவரும் வந்து விடக்கூடாதென்ற சதியை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.

மறுபுறம் ஒற்றுமையைப் பேசுகின்ற கட்சி இந்த அமீர் அலியை வெற்றி பெறாமல் செய்வதற்கான திட்டங்களை வகுத்து இப்பிரதேசத்திலே ஒருவரை களமிறக்கி அந்த சதியை செய்து கொண்டிருக்கிறார்கள். அமீர் அலி உங்களுக்காக மட்டுமல்ல. நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு அசம்பாவிதங்களின் போது உயிரையும் துச்சமாக மதித்து என்னோடு தன்னை அர்ப்பணித்தார்.

கல்குடாவுக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்துக்கும் முழு தேசத்துக்கும் அமீர் அலி தேவை. இவரை உருவாக்கிய கல்குடா தாய், அவரை இல்லாமல் செய்ய எடுக்கின்ற சதிகளை உணர்ந்து ஒவ்வொரு வீடு வீடாகச்சென்று அமீர் அலியின் வெற்றி தான் உங்களுடைய, உங்கள் பிள்ளைகளுடைய, இந்த சமுதாயத்துடைய இந்த தொகுதியுடைய மாவட்டத்தின் வெற்றி என்பதை உணர்த்த வேண்டிய தேவைப்பாடுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே இன, மதவாதத்தைக்கக்கி காத்தான்குடி, கல்குடா, ஏறாவூர் என பிரதேசவாத்தைப்பேசி அரசியல் செய்கின்ற கலாசாரத்தை உடைத்தெறிந்த பெருமை இவரையே சாரும். ஹிஸ்புல்லாஹ், சுபையிர் போன்றோரைக் கொண்டு வந்து இப்பிரதேச மக்களின் வாக்குகளை வழங்கி வெற்றி பெற வைத்து இஸ்லாமிய அடிப்படையில் ஒற்றுமைப்படுத்திய பெருமை அமீர் அலியையே சாரும்.

எதிர்வரும் 6ம் திகதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகின்ற போது மத, இன நல்லிணக்கத்திற்காக தமிழ் சமூகத்தை எவ்வாறு அரவணைத்து சேவைகள் செய்துள்ளார்? தமிழ் மக்கள் பட்ட துயரங்களை, கஷ்டங்களை எவ்வாறு துடைத்தெறிந்துள்ளார் என்பது பற்றி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற போது தமிழ் சமூகம் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதிலிருந்து கண்டு கொள்ள முடியும்.

எல்லோரும் வாக்களிக்கப் போகிறார்கள். இருந்தாலும், கல்குடா மக்கள் பிரிந்து விடக்கூடாது. நீங்கள் பிரிவதென்பது ஏமாறுவதென்பது இம்மண்ணையும் இப்பிரதேசத்தையும் காட்டிக் கொடுப்பதென்பது பாரிய துரோகமாகும்.

உலமாக்களிடம் பாரிய பொறுப்புள்ளது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமானிதத்தை குறிப்பாக உங்க ஜூம்ஆ மேடைகளை நீங்கல இந்த சமூகத்திற்கெதிரான சாதிகள் தொடர்பில் தெளிவுபடுத்த பயன்படுத்த வேண்டும்.

இந்த தலைமையையும் கட்சியையும் அமீர் அலியையும் அழித்து இந்த சமூகத்துக்காக பேசுகின்ற குரலை நசுக்க முயல்கின்றனர். ராஜபக்ஷ அரசு கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்க்கின்ற சக்திகளை அழிக்கின்ற முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

சமூகம் தெளிவு பெற வேண்டிய தேவையுள்ளது. இளைஞர் சமூகத்துக்கு தார்மீகப் பொறுப்புள்ளது. இங்கேயுள்ள கூட்டத்தைக் காண்கிற போது நிச்சயம் அமீர் அலிக்கு வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கையுள்ளது. அதன் காரணமாகவே இவ்வளவு நேரமாக இங்கே காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், நீங்கள் ஒவ்வொருவரும் பிரசாரர்களாக மாற வேண்டும். இப்பிரதேசம் பிரிந்து விடக்கூடாது என்பதிலே உங்களிடம் பொறுப்புள்ளது.

இந்த அமீர் அலி அடுத்த பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்திலே இருக்க வேண்டுமென ஆசைப்படுகின்றேன். இவரை வெற்றி பெறச்செய்கின்ற போது முஸ்லீம் சமூகத்துக்கெதிராக கொண்டு வரப்பப்டும் சாதிகளை ஒரே அணியாக நின்று வெல்லக்கூடிய வாய்ப்பாக அமையும். அதற்காக அமீர் அலி எனக்குத்தேவை.

இப்பிரதேசத்துக்கு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் இல்லமாலில்லை. சின்ன சின்ன காரணங்களுக்காக பழி வாங்கும் நேரமல்ல இது. சதி செய்கின்ற தருமல்ல

தேர்தல் காலங்களில் பொட்டணி வியாரிகள் போன்று இங்கு வந்து ஏமாற்றுகின்ற கூட்டம் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வேட்பாளரை புதிதாக நிறுத்தி வாக்குகளைக் கொள்ளையடித்து இப்பிரதேசத்தில் போட்டியிடும் அமீர் அலியைத் தோற்கடிக்க தொடர்ந்து செய்கின்ற சதிகளை நீங்கள் அறிவீர்கள்.

இந்த சதிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஜாஹிலிய்யத்திலுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமும் கடமையாகும். இது சமூகத்தின் விடுதலைக்காகவும் விமோசனத்திற்காகவும் உழைக்க வேண்டிய காலம். அவ்வாறு தைரியமுள்ள அச்சமில்லாது மும்மொழிகளிலும் பேசக்கூடிய ஆற்றலுள்ள இந்தத்தலைமை வெற்றி பெற வேண்டுமென்பது தான் எனது அவா. பல்வேறு வகையில் பாராளுமன்ற அனுபவத்தைக் கொண்டுள்ள இவரால் இப்பிரதேச அபிவிருத்தியை முன்கொண்டு செல்ல பிரிந்திருக்கின்ற அனைவரையும் ஒற்றுமைப்படுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இப்புனித சமூக விடுதலைப் பயணத்தில் உங்கள் பங்களிப்பைச் செய்வதற்காக அமீர் அலியை வெல்ல வைக்க ஒன்றுபடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில், முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுத்தீன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, உள்ளூர் வெளியூர் அரசியல் பிரமுகர்கள், பிரதேச சபைத்தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டாரக்குழு உறுப்பினர்கள், பிரதேச புத்திஜீவிகள், கல்விமான்கள், ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed