Main Menu

ESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாயிஸா நெளபல்
“பிரிக்கப்பட்ட கடந்த காலத்திலிருந்து பகிரப்பட்ட எதிர்காலத்தை நோக்கி” எனும் கருப்பொருளில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் (ESDF) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகங்களுக்கிடையிலான இன நல்லுறவை மேம்படுத்தும் பெருவிழா மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் கடந்த 25.07.2020 சனிக்கிழமை மு.ப 9.00 தொடக்கம் பி.ப 1.30 மணி வரை வெற்றிகரமாக நடைபெற்றது.

ESDF நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் புஹாரி மொஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்பும் வகையிலான கடந்த கால நேர்சிந்தனை அனுபவப்பகிர்வு, அனைத்து சமயங்களையும் பிரதிபலிக்கும் சம்பிரதாய உணவுப்பந்தல், கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், நாட்டார் பாடல்கள் மற்றும் ஓவியக்கலையினூடான கருத்து வெளிப்பாடு என்பன உள்ளடக்கப்பட்டிருந்தமை ஓர் சிறப்பம்சமாகும்.

குறிப்பாக இனவாதம், தீவிரவாதம் மற்றும் வெறுப்பூட்டும் கருத்து வெளிப்பாடுகளால் சிதைந்து போய் பயணிக்கும் சமூகங்களிடையே கடந்த கால இன ஐக்கியம், சகவாழ்வு அதனோடிணைந்த சகோதரத்துவப் பண்புகளை மனக்கண் முன்னிறுத்தி மீண்டும் அவ்வாறானதொரு ஒற்றுமைப்பட்ட சமூகங்களைள் கட்டியெழுப்புவதற்கான உந்து சக்தியை இளைய சமுதாயத்தினரிடம் ஏற்படுத்துவதே இவ்விழாவின் பிரதான நோக்கமாகும்.

அந்த வகையில், பேராசிரியர் சி.மௌனகுரு, எஸ்.எல்.எம்.ஹனீபா, விஸ்வபாரத கலாலய மாணவியர்கள், சேகு இஸ்மாயில் பாவா குழுவினர், பேகர்ஸ் போக்ஸ் குழுவினர் மற்றும் ஜவாஹிர் ஆசிரியரின் குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டு தமது காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

அத்தோடு, பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள், பாடசாலை இடைவிலகல் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என்போர் பல்வேறு கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இறுதியாக, போட்டிகளில் கலந்து வெற்றியீட்டியோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமெனவும் கருத்துரைக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed