Main Menu

போதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்

இந்த செய்தியைப் பகிர்க >>>
எம்.பி.எம்.இஸ்ஸத்
இன்று எமது பிரதேசத்தில் தலைவிரித்தாடும் போதைவஸ்துப்பாவனையால் சமூகப்பிறழ்வுகள், அனாச்சாரங்கள் உச்சம் தொட்டு நிற்பதுடன், அநியாயக்கொலைகளும் நடந்தேறியுள்ளதை நாம் அவதானிக்கிறோம்.
 
அண்மையில் எமது பிரதேசத்தில் அதிர்ச்சியை உண்டு பண்ணிய வயோதிபப் பெண்ணொருவரின் கொலைக்கும் போதைவஸ்துப்பாவனை தான் முக்கிய காரணமென்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இக்கொலை இப்பிரதேச மக்களை அச்சத்துக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.
 
இதன் தொடர்ச்சியாக அண்மையில் மாற்று மத சகோதரியொருவர் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞரால் பாலியல் வல்லுறவு முயற்சிக்குட்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். அந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர் எமது பிரதேசத்தைச்சேர்ந்த முஸ்லிம் என்பதால் மாற்று மத சகோதரர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையம் நோக்கி விரல் நீட்டுவதை அவதானிக்க முடிந்தது. எமது பிரதேசங்களில் இடம்பெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கெதிரான வன்கொடுமைச்சம்பவங்கள் அனைத்தும் போதைவஸ்துக்கு அடிமையான இளைஞர் சமூகமொன்றால் அரங்கேற்றப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.
 
கடந்தவொரு தசாப்தமாக எமதூரில் பல சமூகப்பிறழ்வுகள், அனாச்சாரங்கள் கொடூரமான முறையில் அதிகரித்துச் செல்லும் தருணத்தில் தசாப்த கால அரசியல் அதிகாரம் கொண்ட அரசியல் தலைமைகள் மௌனம் காப்பது சமூகத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே.
 
முன்பெல்லாம் குடு, ஹெரோயின் போன்றவை எமது பகுதிகளில் மிக அரிதாகவே அறியப்பட்டது. தற்போது அவைகளை புதுப்புது பெயர்களில் இளைஞர்கள் சர்வ சாதாராணமாக உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
கடந்த பதினைந்து வருடங்களில் போதைவஸ்துப்பாவனை நினைத்துப்பார்க்க முடியாதளவு பன்மடங்காக அதிகரித்துள்ளது. பாடசாலை மாணவர்களும் இத்தீய பழக்கத்திற்கு திட்டமிட்டு அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக, பாடசாலை மாணவர்கள், சிறார்களை இலக்கு வைத்து ஒரு போதை மாஃபியா இயக்கி வருவதை நாம் அவதானிக்கலாம்.
 
தனக்கு வேண்டாதவர்கள், தன்னை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சிக்காரர்களை தனது முழு அரசியல் அதிகாரத்தையும் பாவித்து பழிவாங்கவோ அல்லது இடமாற்றங்களைச் செய்யவோ முடியுமாக இருக்கும் போது, சகல அரச, அரச சார்பற்ற இயந்திரங்களிலும் தனது கையோங்கி இருக்கின்ற நிலையில், இப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த கற்ற சமூகம் இப்பிரதேசங்களிலுள்ள அரச அலுவலகங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிக்க முடியாது அரசியல் அதிகாரம் உச்ச கட்டமாகப் பாவிக்கப்படும் நிலையினை நாம் கடந்த காலங்களில் அனுபவ ரீதியாகக் கண்டுள்ளோம்.
 
இவ்வாறான நிலையில், ஒரு சமூகத்தின் உயிர்நாடிகளான நாளை இந்த சமூகத்தை தலையில் வைத்து சுமக்க வேண்டிய இளைஞர் சமூகம் போதைக்கு அடிமைப்பட்டு சின்னாபின்னமாக சீரழிந்து கொண்டிருப்பதை கண்டும் காணாமல் பாராமுகமாக இருப்பது சமூகத்துரோகமாகும்.
 
ஒட்டுமொத்த மாவட்ட அரசியல் அதிகாரத்தை தனது கையில் வைத்துக்கொண்டும், பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புப் படையினரை இலாவகமாக அணுகக்கூடிய சூழல் இருந்த போதிலும் போதைக்கெதிராக இங்கு எதையம் சாதிக்க முடியவில்லை.
 
தேசியளவில் அதிகாரமிக்கவராக, மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருந்தவர்களால் தேசியளவில் அல்லது மாவட்டளவில் இல்லாவிட்டாலும், பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ், இராணுவத்தின் உதவியோடு இந்த போதை என்ற சமூகச்சீரழிவைத்தடுக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் என்ன? அதனால் சாதித்து என்ன? எவ்வளவு தூரம் இந்த போதைவஸ்து பாவனையை இப்பிரதேசத்திலிருந்து துடைத்தெறிய முடிந்தது?
 
அதே நேரம், போதைவஸ்து பாவித்தார்கள், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற தெளிவான குற்றச்சாட்டுக்களில் கைதானவர்கள் அரசியலதிகாரம், செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடிலியிருந்து தப்பித்து வெளியில் வந்து மீண்டும் மீண்டும் அதே தவறைச்செய்கின்ற, அதனைத் தொழிலாகச்செய்கின்ற சூழலையே எம் பிரதேசத்தில் கண்டு கொண்டோம்.
 
இதன் காரணமாக பிரதேச மட்ட அரசியல்வாதியொருவர் செல்வாக்கிழந்து மக்கள் அவரை புறக்கணித்து விட்ட வரலாறும் போதையால் வந்த வினை என்பதனை நாம் உணராதவர்களல்ல.
 
இவ்வாறு சட்டத்தின் பிடியிலிருந்து இலாவகமாக தப்பித்துக்கொள்ளும் இவர்களால் தான் பாடசாலைச் சிறார்களும், இளம் வயதினரும் போதைக்கு அடிமையாகி தமது எதிர்காலத்தை, கல்வியை, குடும்பத்தின் நற்பெயரை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பிள்ளைகளின் பெற்றோரும் உறவுகளும் பல்வேறு வகையில் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாவதையும் காண்கின்றோம்.
 
குறிப்பாக, தமது குடும்பத்தின் வறிய நிலையினையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் செல்லும் பெற்றோர் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். பல பெற்றோர் படிக்கின்ற வயதில் போதைக்கு அடிமையான தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருகிப்போனதை எண்ணி மனம் நொந்து, அவர்களின் கல்வியை இடைநடுவில் நிறுத்தி, தாம் தொழில் புரியும் நாடுகளுக்கு அழைத்து தமது பாதுகாப்பில் வைத்து பராமரித்து வருவதும் பலருக்கு தெரியாத விடயங்கள். இதன் காரணமாக, அவர்களின் கல்வி பாதிப்புக்குள்ளாகி எதிர்காலம் சூன்யமாகிப் போகிறது.
 
இதற்கெல்லாம் அதிகாரத்தை கையில் வைத்திருந்த நாம் என்ன பதிலைச் சொல்லப்போகிறோம்? இந்த சமூகப் பழியை எவ்வாறு துடைத்தெறியப்போகிறோம்?
 
வெறுமனே போதைக்கெதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஊர்வலம் போவதாலோ, டீ சேர்ட் அடித்து போதை ஆபத்து என்ற சுலோகங்களைப் பொறித்து, அணிந்து திரிவதாலோ எமது பிரதேசத்தில் வேரூன்றிப் போயுள்ள போதை என்ற பெருவிருட்ஷத்தை கிள்ளியெறிந்து விட முடியாது. அவைகள் புகைப்படங்களுக்கும் பெயருக்குமான திட்டங்களாகவே இருக்குமேயொழிய, எதையும் சாதித்து விட்டதாகாது.
 
போதைக்கு அடிமையாகி எமது பிரதேசம் தேசிய ரீதியில் போதைவஸ்தின் கேந்திர மையமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இதனால் எமது பிரதேசம் சுமந்து நிற்கின்ற அவப்பெயரை களைந்தெறிய அரசியலதிகாரம் கடுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சமூக அமைப்புக்களும் தங்களது வகிபாகங்களைச் செலுத்த தவறி விட்டதாகவே உள்ளது. இதற்கான பழியினை அவர்களும் சுமந்தாக வேண்டும்.
 
அதே நேரம், பிரதேச மட்ட அரசியலும் வெறும் படம் காட்டும் அமைப்பாகவே மாறிப்போயுள்ளது. கடந்த காலங்களில் புதிதாக இப்பிரதேச சபையின் அதிகாரத்திற்கு வந்த பொறுப்பானவர்கள் கண்காணிப்பு காமெராக்களை பொருத்தி போதையொழிக்கப் போவதாக வெறும் வாய் வார்த்தைகளால் திட்டங்களை வகுத்துச் சென்றனரே ஒழிய செயற்பாட்டு ரீதியாக எதனையும் சாதித்து விடவில்லை.
 
தேர்தல் காலங்களில் கல்வி, சமூகம், உரிமை என்றெல்லாம் கூக்குரலிடும் அரசியல்வாதிகள் இதுவரை காலமும் இதற்கெதிராக எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்பது கவலையளிக்கும் விடயம். நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விட, இந்த போதை மாபியாவிற்கு மறைகரமாக இருந்து, சமூகச்சீரழிவின் பங்குதாரர்களாக இருந்தார்கள் என்பதே உண்மை.
 
தேர்தல் களம் சூடு பிடித்து, தேர்தல் பரப்புரைகள் முடிவுற்ற நேற்றைய தினம் வரை இந்த போதையொழிப்பு தொடர்பில் எந்தவொரு வேட்பாளரும் ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வைப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.
 
இவ்வாறான ஏமாற்று அரசியல் நிலவும் சூழலில் வாக்களிப்பில் வெற்றி பெற்று அரசியலதிகாரம் மீண்டும் கிடைக்கின்ற பட்சத்தில் இந்த சமூகத்தையும் எமது பிரதேசத்தையும் இப்பாரிய போதைச்சீரழிவிலிருந்து பாதுகாக்க என்ன நடைமுறைகளை, திட்டங்களை வகுக்கப்போகிறார்கள் என்பது பாரிய சந்தேகமே.
 
எமது சமூகமும் காலத்தைக்கடத்தி, இளம் சந்ததியை போதையிடம் அடமானம் வைத்து விட்டு கை சேதப்பட்டு நிற்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed