Main Menu

பௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதா “ஒரே நாடு, ஒரே சட்டம்”?

இந்த செய்தியைப் பகிர்க >>>

முகம்மத் இக்பால் – சாய்ந்தமருது
இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் கடைப்பிடிக்காத பௌத்த கொள்கையை ராஜபக்ச அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. அதாவது, பேச்சளவில் ஒரே நாடு, அனைத்து இன, மொழி, மதத்தினர்களுக்கும் ஒரே சட்டம் என்று பிரசாரம் செய்து கொண்டு நடைமுறையில் பௌத்த மதத்துக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் எந்தவொரு ஆட்சித்தலைவர்களும் தேர்தல் வெற்றிக்குப் பின்பு பதவியேற்பு வைபவங்களை அல்லது அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்குவதனை ஜனாதிபதி செயலகத்தில் அல்லது அலறி மாளிகையில் நடாத்துவது வழமையாகும்.

ஆனால், வழமைக்கு மாறாக, ராஜபக்சாக்கள் தங்களது பௌத்த மதத்தினை மட்டும் முன்னிலைப்படுத்தி அனைத்து பதவியேற்பு வைபவங்களையும் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் நடாத்தியுள்ளனர்.

அந்த வகையில், ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்ச அனுராதபுரம் “ருவான் வெலிசாய” வில் தனது பதவியேற்பு வைபவத்தினை மேற்கொண்டார்.

தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்த பின்பு துட்டகைமுனு எனும் சிங்கள மன்னனால் வெற்றியின் நினைவாக அனுராதபுரத்தில் கட்டப்பட்டது தான் ருவான் வெளிசாய தூபமாகும்.

பிரபாகரனைத் தோற்கடித்த போது மஹிந்த ராஜபக்ச அவர்களும் துட்டகைமுனு என்றே அப்போது அழைக்கப்பட்டார். அதனை மீண்டும் நினைவுபடுத்துவதாகவே ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவமும் அமைந்திருந்தது.

அது போல, பிரதமராக மஹிந்த ராஜபக்ச களனி ரஜமஹா விகாரையில் பதவியேற்றார். அதன் பின்பு அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணம் தலதா மாளிகையில் நடைபெற்றது.

தலதா மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான பதவியேற்பு வைபவமானது, போயா தினத்தில் நடைபெறுகின்ற பௌத்த மத அனுஸ்டானம் போல காட்சியளித்தது.

அதாவது ஆரம்ப நிகழ்வில் பௌத்த பிக்குகள் நீண்ட நேரம் பௌத்த சமய நிகழ்வுகளை நிகழ்த்தியதன் பின்பே பதவியேற்பு நடைபெற்றது. இதில் ஏனைய இஸ்லாம், கிறிஸ்தவம், ஹிந்து ஆகிய சமய மதகுருமார்கள் எவரும் அழைக்கப்படவில்லை.

இத்தனைக்கும் மேலாக அமைச்சர்களுக்கான பதவியேற்பு வைபவத்தினை முன்னிட்டு கண்டி நகரம் சர்ச்சைக்குரிய தேசியக் கொடியினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதாவது, தமிழ், முஸ்லிம் மக்களை அடையாளப்படுத்தும் மஞ்சள், பச்சை நிறங்கள் நீக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட சிங்கக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

தென்னிலங்கையிலுள்ள பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாதக்குழுக்கள் கடந்த காலங்களில் தேசியக்கொடியிலுள்ள முஸ்லிம், தமிழ் மக்களைக் குறிக்கின்ற பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களை அகற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அதே சர்ச்சைக்குரிய கொடி அரசின் தேசிய வைபவமொன்றில் ஏற்றப்பட்டதானது, இனவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்கானதா? அல்லது எதிர்காலத்தில் இனவாதிகளின் விருப்பத்துக்கேற்ப கொடியில் மாற்றம் செய்வதற்கான ஒத்திகையா? என்ற சந்தேகமுள்ளது.

இதனை தமிழ்த்தலைவர்கள் மட்டுமே கண்டித்து அறிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் காலங்களில் பொங்கியெழுகின்ற முஸ்லிம் தலைவர்கள் எவரும் இது பற்றி வாய் திறக்கவுமில்லை. கண்டுகொள்ளவுமில்லை.

ஆனால், சிலர் அது கண்டி ராசதானிக்குரிய கொடி என்று நியாயம் கூறுகின்றார்கள். தேசிய வைபவமொன்றில் இதுவரை ஏற்றப்படாத ஒரு பிராந்தியக் கொடியினை ஏன் ஏற்ற வேண்டுமென்பது தான் கேள்வியாகும்.

அது மட்டுமல்லாது, ஜனாதிபதி, பிரதமருடன் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட வரலாற்று புகைப்படத்திலும் தலதா மாளிகையை பின்னனியாகக் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ், முஸ்லிம் மக்களிடம் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்று கூறிக்கொண்டு தங்களது பௌத்த மதத்துக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed