Main Menu

முன்னாள் அதிபர் ஹயாத்து முஹம்மட் ஏறாவூரின் கல்வி வளர்ச்சியின் கலங்கரை விளக்கு : மறைவு ஈடுசெய்ய முடியா பேரிழப்பாகும் – அலி ஸாஹிர் மௌலானா

இந்த செய்தியைப் பகிர்க >>>

(ஊடகப் பிரிவு)
ஏறாவூரின் கல்வி வளர்ச்சியில் தன்னை உளமாற அர்ப்பணித்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களது வாழ்விற்கு ஔியூட்டி, அவர்களது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு கலங்கரை விளக்காய் செயலாற்றிய அலிகார் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ஹயாத்து முஹம்மட் அவர்களது மறைவானது, இந்த மண்ணிற்கும் மாவட்டத்திற்கும், எமது முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

நீண்டகால தனது கல்விப்பணியை மிக நேர்த்தியுடனும், அர்ப்பணிப்புடனும், ஒழுக்க விழுமியங்களைக்கட்டி எழுப்பவும், விளையாட்டு, கலை, கலாசாரம் என அனைத்து முன்னேற்றத்திற்கான ஒரு பன்முக ஆளுமையாக அவர் துடிப்புடன் செயலாற்றியமை என்றுமே எம் நெஞ்சை விட்டகலாது.

தனிப்பட்ட அரசியல் தொடர்புகளுக்கெல்லாம் அப்பால், பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், பாடசாலையின் பௌதீக மற்றும் ஆளணி வளங்களைப் பெற்றுக்கொள்ளவும் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டிற்காகவும் அனைவரையும் அரவணைத்துச் செயலாற்றியமை அவரது ஆளுமைக்கு எடுத்துக் காட்டாகும்.

கடமையிலிருந்த நேரத்திலும், கடமையை விட்டு ஓய்வடைந்த போதிலும், அவரது இலக்கும் தூரநோக்கும் இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் அலிகாரின் முன்னேற்றம் குறித்ததாகுமே காணப்பட்டது. அலிகார், அல் முனீரா ஆகிய இரண்டின் முன்னேற்றத்திலும் அவர் அதிபராகப்பதவி வகித்த காலம் என்றுமே ஈடுசெய்ய முடியாதது.

எம் இருவருக்குமிடையிலான சந்திப்புக்களின் போதல்லாம் பிரதேசத்தின் கல்வியை முன்னிறுத்தியே அவரது கருத்தாடல்கள் எப்போதும் இடம்பெறும்.

ஊரின் கல்வி முன்னேற்றத்தின் மீது கரிசனை கொண்ட ஒரு பெரும் கல்வியாளனை, வினைத்திறன்மிக்க தலைமைத்துவ வழிகாட்டல் செயற்பாடுகளுக்கூடாக ஆரோக்கியமான அடுத்த கட்ட சந்ததியை உருவாக்க தொண்டாற்றிய அதிபர் ஹயாத்து முஹம்மது அவர்களது இன்றைய இழப்புச்செய்தியானது, பெரும் அதிர்வினையும், துயரத்தினையும் எம் மத்தியிலே ஏற்படுத்தி நிற்கின்றது.

ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டுமென்ற நியதிக்கேற்ப இன்று எம்மையெல்லாம் விட்டு உடலால் விடைபெறும் ஆசான் ஹயாத்து முஹம்மது அவர்களது அத்தனை பணிகளையும் இறைவன் பொருந்திக்கொண்டு, பிழைகளை மன்னித்தருளி மேலான சுவனத்தை பரிசளித்திட வேண்டுமென்றும், அவரது இழப்பினால் கலங்கி நிற்கும் உறவுகளின் உள்ளங்களில் அமைதியும் வசந்தமும் விரைவில் மேலோங்க வேண்டுமெனவும் உளமாற பிரார்த்திக்கிறேன்.

கல்விக்கு உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை என்பதற்கமைய, அவர் தன் கல்விப்பணிகளின் வெளிப்பாடுகளுக்கூடே எம்மோடு சங்கமித்துக் கொண்டிருப்பார்.

வல்ல இறைவனின் கருணை எங்கும் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed