Main Menu

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்ப நடவடிக்கை

இந்த செய்தியைப் பகிர்க >>>

(றாசிக் நபாயிஸ்)
கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக, இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை உலக வங்கி மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையை சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராய்ச்சி முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை தெரிவித்தார்.

இலங்கை, சுற்றுலா வலய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைய அம்பாறை மாவட்டம் பொத்துவில், அறுகம்பை சுற்றுலா பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும், அப்பிரதேசத்திலுள்ள குறைபாடுகளைக் கண்டறியும் பொருட்டும், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் அறுகம்பை பிரதேசத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளத்தின் ஏற்பாட்டில், பொத்துவில் பிரதேச செயலகத்தின் வழிநடத்தலுடன் இக்கலந்துரையாடல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளத்தின் தலைவர் ஏ.எம்.ஜகுபர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராய்ச்சி, சுற்றுலாத்துறை அமைச்சின் அபிவிருத்திக்கான பணிப்பாளர் எஸ்.எல்.எம்.ஹசீம், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் உமா நிராஞ்சனி, பொத்துவில் பிரதேச சபைத்தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித், பொத்துவில் உதவிப்பிரதேச செயலாளர் வை. றாசீத், முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறை தொழிலாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராய்ச்சி அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், கொவிட் 19 தாக்கம் காரணமாக, விமான நிலையங்கள் மூடப்பட்டு சேவைகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது சுற்றுலாத்துறையாகும். வீழ்ச்சியடைந்துள்ள இச்சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளை சுற்றுலாத்துறை அமைச்சும் அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றது.

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அத்துறை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மிகக்குறைந்த 5 வீத வட்டியில் கடன் சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
மேலும், அவர்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள், பிரச்சினைகள் தொடர்பிலும் உரிய பிரதேசங்களுக்குச் சென்று ஆராய்ந்து அவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்று வருகின்றோம்.

சுற்றுலாத்துறைக்கு புகழ் பெற்றுள்ள அறுகம்பை குடா பிரதேசம், சேர்பிங் கடலலை நீர்ச்சறுக்கல் விளையாட்டுக்கும், உலகில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதனால் அரசாங்கத்தின் சுற்றுலா வலய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் இது முக்கிய இடம் வகிக்கின்றதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் மொத்த வருமானத்தில் சுற்றுலாத்துறையினூடாக 5 வீத வருமானமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைந்துள்ள போதிலும், ஏனைய 95 வீதமான வருமானத்தை ஈட்டித்தரும் துறைகள் பாதிக்கப்படாதவாறு எமது நடவடிக்கைகள் அமைவதற்கு மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed