Main Menu

கல்முனை திறமையான பல வீரர்களை உருவாக்கிய மண் – எச்.எம்.எம்.ஹரீஸ் எம்பி புகழாரம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எம்.என்.எம்.அப்ராஸ்)
பால்கன் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுகமும், கௌரவிப்பு நிகழ்வும் கழகத்தின் செயலாளர் எம்.எம்.முகம்மது காமில் தலைமையில் அக்ஸான் இன்ஜினீயரிங் வேர்க் நிருவாகப்பணிப்பாளர் அல்ஹாஜ். கே.எல்.எம்.அர்ஷாத் அவர்களின் அனுசரணையில் கல்முனை இக்பால் சன சமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நாடளும்ன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அங்கு உரையாற்றுகையில்,

கல்முனைப் பிராந்தியம் என்பது விளையாட்டுப் போட்டிகளுக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். தேசிய ரீதியில் திறமையை வெளிக்காட்டிய பல வீரர்களை உருவாக்கிய மண்ணாகும். இந்த மண்ணிலிருந்து இவ்வாறானதொரு விளையாட்டுக்கழகம் உருவாகியுள்ளது.

இது எம்மனைவருக்கும் பெருமையே. அதே போல, இவ்வாறான விளையாட்டுக் கழகங்கள் மென்மேலும் எமது பிராந்தியத்தில் உருவாக வேண்டும். விளையாட்டு மூலம் எமது திறமைகள் வெளிகொணர வாய்ப்பாக அமையும். இதற்காய் தான் முன்னின்று பல்வேறுபட்ட விளையாட்டு தொடர்பான செயற்றிட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை எதிர்காலத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் கல்முனை கடற்கரை மைதானத்தின் மைதான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள துரிதமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் தான் அதீத கரிசனை மேற்கொள்வதாகவும் இதே வேளை தனது பாராளுமன்ற நிதியொதுக்கீடுகள் மூலம் அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு மென்மேலும் வளர்ச்சியடைய தான் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.

மேலும், நிகழ்வில் அங்கமாக நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் மீண்டும் அம்பாறை மாவட்டத்திலிருந்து வெற்றியீட்டி பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு பால்கன் விளையாட்டுக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர் யூ.கே.லாபிர், பொருளாளர் முகம்மது நைசர் உட்பட நிருவாகக்குழு அங்கத்தவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வின் இறுதி அம்சமாக பால்கன் அணியின் புதிய சீருடையை அறிமுகம் செய்யுமுகமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.எம்.முகம்மது காமில் அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட அதே வேளை, கலந்து கொண்ட கழகத்தின் வீரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டு புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இதன் போது, விசேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் நௌபர் ஏ.பாவா கலந்து சிறப்பித்ததுடன், அணியின் நிருவாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed