Main Menu

புதையல் தோண்டி எடுத்த புராதன சிலையுடன் ஒருவர் கைது

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதிலுள்ள வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன்வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்த குறித்த சிலையையும் கைப்பற்றியுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி டபிள்யூ.சி.சந்தனகுமார தெரிவித்தார்.

கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தரவின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.ஜ.சம்பத் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்களான எஸ்.வீரசிங்க, எஸ்.அசோக், எஸ்.சேனாதீர, எஸ்.கோபிநாத், எஸ்.பியங்கர ஆகியோர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் புராதன காலத்து சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது.

கல்குடாப் பிரதேசத்தில் அண்மையில் ஆலயமொன்றில் சிலையொன்று இனந்தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போது, இவ்வாறானதொரு அரிய வகை புராதான சிலையொன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், இது தொப்பிகல பிரதேசத்தில் சட்ட விரோத புதையல் அகழ்வு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் புராதான காலத்து சிலைகள் இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed