Main Menu

சமையல்கலைஞர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பயிற்சி பெற சந்தர்ப்பம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.எம்.எம்.முர்ஷித்
எஸ்4ஐஜி இன் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுப்ரீம் செப் இறுதிப்போட்டிக்குத் தெரிவான சிறந்த நான்கு சமையல் கலைஞர்களுக்கு அவுஸ்திரேலிய அரசின் அனுசரணையில் அவுஸ்திரேலியாவிலுள்ள சிறந்த கல்லூரிகளில் சமையல்கலைப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா ஆகியோரினால் இவர்களுக்கான புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் நேற்று (25) மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய புதிய தொழில் முயற்சிகள் தொழிலினை ஆரம்பிப்பதற்கும், திறன் அபிவிருத்திப் பயிற்சிகளை வழங்கவும், வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கவும் நோக்காகக் கொண்டு இயங்கி வரும் எஸ்4ஐஜி அமைப்பின் ஏற்பாட்டில் சுப்ரீம் செப் எனும் சமையல் கலை வல்லுனர்களைத் தெரிவு செய்யும் போட்டித்தொடர் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இப்பேட்டியில், சுமார் 400 சமையல் கலைஞர்கள் பங்குபற்றினர். இதில் தெரிவு செய்யப்பட்ட 20 சிறந்த போட்டியாளர்களுக்கு எஸ்4ஐஜியினால் நட்சத்திர ஹோட்டல் தலைமை செப்களினால் விசேட பயிற்சிகள் மட்டக்களப்பு மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது. இவர்களிலிருந்து இறுதிப்போட்டிக்குத் தெரிவான சிறந்த சமையல் கலைஞர்களுக்கான இறுதிப்போட்டி நேற்று (25) மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் பொலன்னறுவை மாவட்டத்ததைச்சேர்ந்த சம்பத் முதலிடத்தினையும், அம்பாரை மாவட்டத்ததைச் சேர்ந்த ஹுசாம் இரண்டாமிடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த சர்மினி மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

இது தவிர, சுற்றுலாத்துறையின் மற்றுமொரு அங்கமாக புகைப்படக்கலைஞர்கள், வீடியோ படப்பிடிப்புக் கலைஞர்கள், சமூக வலைத்தள மென்பொருளாளர்களினது படைப்புக்களும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

எஸ்4ஐஜியின் குழுத்தலைவர் டேவிட் அப்லெட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கலாநிதி பிரசாத் ஜயசூரிய, வடக்கு, கிழக்கு மாகாண சுற்றுலா அமைச்சின் செயலாளர் ஆர.எம்.சீ.ரத்நாயக, வடக்கு, கிழக்கு மாகாண சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் என்.ஜீ.தயாரத்ன, கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பொது முகாமையாளர் ஆர்.ஞானசேகர், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்கள மாகாணப்பணிப்பாளர் என். தனஞ்ஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed