Main Menu

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூருக்கு நினைவு முத்திரை – வேண்டுகோள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை மாநகரின் சிற்பி, கறைபடியா கரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி அல்ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் சேவையினைக் கௌரவிக்குமுகமாக ஞாபகார்த்த முத்திரை வெளியிடக்கோரி ஏ.ஆர்.மன்சூர் பௌன்டேசனினால் அஞ்சல் திணைக்களத்தின் அஞ்சல் அதிபதி ரஞ்சித் ஆரியரத்னவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர், 1977 தொடக்கம் 1994ம் ஆண்டு வரை (17 வருடங்கள்) பாராளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும், வர்த்தக, வாணிபம் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும், கிழக்கு மாகாண பாதுகாப்பு கவுன்சிலின் உயர்பீட அங்கத்தவராகவும் மற்றும் குவைத் நாட்டின் தூதுவராகவும் தன் தூய்மையான சேவைகளாலும், அளப்பரிய அர்ப்பணிப்புக்களாலும் பதவிகளை அலங்கரித்து, சிறுபான்மை அரசியல் தலைவர்களில் முன்மாதிரியும் முதன்மையானவருமாகத் திகழ்ந்து, அரசியலிருந்து கெளரவமாக ஓய்வுபெற்ற அன்னாருக்கே அஞ்சல் திணைக்களத்தின் 2021ம் ஆண்டுக்கான ஞாபகார்த்த முத்திரையை வெளியிடுமாறு கோரியே ஏ.ஆர்.பௌன்டேசனின் செயலாளர் மிப்றாஸ் மன்சூரினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பாலான அரசியல்வாதிகளைப்போல் அரசியலிருப்புக்களைத் தக்க வைத்துக்கொள்ள குறுக்கு வழிகளைச் செயற்படுத்த விரும்பாத, மிகவும் நேர்மையான அரசியல்வாதியாக இறுதிவரையில் செயற்பட்டு வந்தவர். சமூகப் பொறுப்புகள் நிறைந்த, சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் உயர்ந்த சமூக குறிக்கோள்களைக் கொண்டு செயற்படுத்திக் காட்டியவர்.

இவரின் காலகட்டத்தில் சமூகங்களுக்கிடையே ஆங்காங்கே பற்றிக்கொண்ட இனவாதத் தீப்பொறிகளுக்கு இன உணர்ச்சி என்ற எண்ணெய் அண்டிக்கொள்ளாத வகையில், அதனை அணைத்துவிட அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை அவருக்கே உரித்தான ஆளுமை என்றால், அது மிகையாகாது.

அத்துடன், 1980இல் ஐ.நா.சபையில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உலகமெல்லாம் வாழும் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்தார். உலக நாடுகளில் நடைபெற்ற மகாநாடுகளிலும் சர்வதேச பாராளுமன்ற சம்மேளனக் கூட்டங்களிலும் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு, எமது நாட்டிற்கும் மக்களுக்கும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுதந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed