Main Menu

கொரோனா அச்சம் : சகல பொதுக்கூட்டங்கள், ஒன்றுகூடல்களுக்கும் தடை

இந்த செய்தியைப் பகிர்க >>>

(எஸ்.அஷ்ரப்கான் & சர்ஜுன் லாபீர்)
கல்முனைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை மீண்டும் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்பந்தமாக கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தெளிவூட்டும் நிகழ்வு இன்று (6) கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. கு.சுகுணன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக தெளிவுபடுத்தினார்.

பொது மக்கள் சகலரும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அணியாதவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வியாபார இஸ்தலங்களில் சமூக இடைவெளி பேணப்பட்டு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைகளில் முகக்கவசம் அணியாதவர்கள் காணப்பட்டால், உடன் அந்த வியாபார நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் குறிப்பிட்டார்.

மேலும், தூரப்பிரயாணங்கள் மேற்கொள்வோர் குறிப்பாக, வெளி மாவட்டங்களுக்கு தொழிலுக்காக மற்றும் ஏனைய விடயங்களுக்காகச் செல்வோர்கள் உடன் சுகாதாரத் திணைக்களப் பிரிவினரின் அனுமதி பெற வேண்டுமென்பதோடு, சகல விதமான ஒன்றுகூடல்கள், திருமண நிகழ்வுகள், டியுசன் வகுப்புகள் அனைத்தும் சமூக இடைவெளிகளோடு, முகக்கவசம் அணிந்தும் குறித்த தொகையினர் மாத்திரம் உள்ளடக்கியதாக நடத்தப்பட வேண்டும்.

மேலும், மதஸ்தாபனங்களில் கடந்த காலங்களில் பேணப்பட்டு வந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வெளியில் தேவையில்லாமல் செல்வது, களியாட்ட நிகழ்வுகள் அனைத்தும் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இன்று மருதமுனைப் பிரதேசத்தில் இனங்காணப்பட்ட வாகனச் சாரதியின் PCR பரிசோதனை முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக இருக்கின்றது. அந்த முடிவு நெகடிவ்வாக அமைந்தால், மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுமென்றும், அதன் முடிவு பொசிடிவ்வாக அமையும் பட்சத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக அமுல்படுத்தப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், இந்நிகழ்வில் கல்முனை இராணுவ மேஜர் எம்.கே.எம்.ஆர்.தேசப்பிரிய, கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த, கல்முனை மாநகர சுகாதார வைத்திய அதிகாரி எம்.கே.எம்.ஆர்.காரியப்பர், கல்முனை பிராந்திய தொற்றுநோய் வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரீப், தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ.றிஸ்னி, கல்முனை பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், கல்முனைப் பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் எனப்பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed