Main Menu

படுதோல்வியில் முடிந்த ஏறாவூர் நகர சபையின் வரவு செலவுத்திட்டம் : மீண்டும் தோல்வியடையச் செய்யப்போவதாக உறுப்பினர்கள் உறுதி

இந்த செய்தியைப் பகிர்க >>>

ஏறாவூர் முஹம்மது அஸ்மி
ஏறாவூர் நகர சபையின் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தவிசாளர் வாஸித் அவர்களால் இன்று (12.10.2020) திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு படுதோல்வி கண்டுள்ளது.

இதன் போது, தவிசாளரது வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டுத் தெரிவான உறுப்பினர்களான சரூஜ், றியாழ், திருமதி சபீஹா ரபீக் ஆகியோரும், ஒட்டகச்சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தெரிவான ரசீட் ஆகியோர் மாத்திரமே வாக்களித்தனர்.

வரவு செலவுத் திட்டத்திற்கெதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்களான உப தவிசாளர் ரெபுபாசம், சுபையிர், பஜீஹா ஆகியோரும், முஸ்லிம் தேசியக்கூட்டமைப்பு சார்பில் தெரிவான நழீம், றியாழ், ஜெமீல், சுலைஹா, ஆரிபா மௌலானா ஆகியோரும், ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு சார்பில் தெரிவான நிசார், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவான சுதாகரன், சுதாகர ராசா ஆகியோரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் தெரிவான பிரபாகரன் ஆகிய 12 உறுப்பினர்களும் ஒன்றுபட்டு எதிராக வாக்களித்தனர்.

மேலதிக 7 வாக்குகளால் தவிசாளர் அப்துல் வாஸித் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தது.
விரைவில் மீண்டும் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படும் என தவிசாளர் வாஸித் தெரிவித்தார்.

மீண்டும் ஒற்றுமையுடன் செயலாற்றி தோற்கடித்து மாற்றம் கொண்டு வருவோம் என எதிரணியினர் நம்பிக்கை வெளியிட்டனர்.

இதன் போது, உறுப்பினர் ஒருவர் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்த உறுப்பினர்கள் சிலருடன் முறைகேடான முறையில் நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டு பலத்த விமர்சனம் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed