Main Menu

அமைச்சரவை மாற்றத்தில் வியத்மகே பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஸவுக்கு பொறுப்பான பதவி வழங்குங்கள் – நாட்டை காக்கும் இளைஞரணி

இந்த செய்தியைப் பகிர்க >>>

எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை
அமைச்சரவை மாற்றத்தின் போது, வியத்மகே சார்பான அரசாங்க எம்.பி. டாக்டர் திலக் ராஜபக்ஸவுக்கு பொறுப்பான பதவி வழங்க வேண்டுமென நாட்டைக்காக்கும் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது.

வியத்மகே அமைப்பு சார்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸவுக்கு வரவு – செலவுத்திட்டத்தின் பின்னரான அமைச்சரவை மாற்றத்தின் போது சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட முக்கிய பொறுப்பொன்றை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ வழங்க உரிய நடவடிக்கையெடுக்க வேண்டுமென நாட்டை காக்கும் இளைஞரணியின் கிழக்கு மாகாணத்தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாம் தெரிவித்தார்.

இவரின் அக்கரைப்பற்று இல்லத்தில் இன்று (17) செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் வேலைத்திட்டங்கள் நாட்டு மக்கள் அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கொரோனா தொற்று பரம்பலின் முதலாவது அலையை இலாவகமாக ஜனாதிபதி தோற்கடித்தார்.

இவரின் சிந்தனையில் உருவான வியத்மகே அமைப்பு துறைசார்ந்த நிபுணர்கள், புத்திஜீவிகள், தேசபக்தர்கள் ஆகியோரைக் கொண்டிருக்கின்றது. கொரோனா முதலாவது அலை வெற்றி கொள்ளப்பட்டதில் இவர்களின் பங்கு, பங்களிப்பு மிகக்காத்திரமானவை.

இதனடிப்படையில், இந்நாட்டு மக்கள் வியத்மகே அமைப்பை ஏற்று ஆதரித்து அங்கீகரித்துள்ளார்கள். நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வியத்மகே அமைப்பு சார்பாக பெரமுனவில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மகத்தான பேராதரவைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளமை இதற்குச்சான்றாகும்.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் ஒவ்வொரு வேலைத்திட்டங்களிலும் வெற்றிக்குப் பின்னால் வியத்மகே அமைப்பு நிற்கின்றது. இந்நிலையில் தான் வியத்மகே அமைப்பின் உச்சபட்ச பலன்களை நாடும், நாட்டு மக்களும் பெற வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்து வளர்ந்து நிற்கின்றது. கொரோனா இரண்டாவது அலை இதை காலத்தின் கட்டாயமாக்கி இருக்கின்றது.

மாத்திரமல்ல, வியத்மகே அமைப்பைச்சேர்ந்த எம்.பிகளுக்கு சுகாதாரத்துறை சார்ந்த அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதன் மூலம் கொரோனாவை விரட்டியடிக்க முடியுமென்பதில் பொது மக்கள் மாத்திரமல்ல எதிர்க்கட்சியினரும் பெருநம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

எனவே, புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது, சுகாதாரத்துறை சார்ந்த அமைச்சுப் பதவிகள் வியத்மகே அமைப்பிலுள்ள வைத்திய கலாநிதிகளான எம்.பிகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.
குறிப்பாக, வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஸ அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் கூட, சுமார் 15 வருடங்களுக்கு மேல் வைத்தியராக அரச துறையில் பணியாற்றியவர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை அலங்கரித்தவர். கடமையின் போது ஒரு நாள் கூட விடுப்பு பெற்றவரல்லர். ஒரு போதும் தனிப்பட்ட கிளினிக்குகள் நடத்தாதவர். பாராளுமன்ற உறுப்பினராக தற்போது பதவி வகிக்கின்ற காலத்தில் கூட வைத்திய உதவிகளை நாடி வருகின்ற மக்களுக்கு இலவச சேவைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குபவர்.

இவருக்கு சுகாதாரத்துறைசார்ந்த பொறுப்பான பதவி வழங்கப்படுதல் வேண்டும். இது அம்பாறை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் விசேட எதிர்பார்ப்புமாகும். கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரித்த அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்களின் முதனிலை விருப்பத்தெரிவாகவும் டாக்டர் திலக் ராஜபக்ஸவே அமைந்தார்.

ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஸ பதவியேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஒரு வருட நிறைவையொட்டி அம்பாறை மாவட்டத்தின் மூவின மக்களுக்கும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ வழங்குகின்ற உயரிய பரிசாகவும், வரமாகவும் டாக்டர் திலக் ராஜபக்ஸ எம்.பிக்கு அமைச்சரவை மாற்றத்தில் கிடைக்கின்ற அங்கீகாரம் அமைதல் வேண்டும் என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed