Main Menu

தனிமைப்படுத்தல் – முஹம்மத் றிழா

இந்த செய்தியைப் பகிர்க >>>

தனிமைப்படுத்தல் என்ற சொல் 1920ம் ஆண்டின் பின்னர் எம்மை மீள ஆட்கொண்டுள்ளது. தனிமைப்படுத்தலை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் நாம் ஆரோக்கியமாக வாழ தனிமைப்படுத்தலை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

உலகளாவிய ரீதியில் இரண்டாவது அலையாகப் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமையால் “வீட்டிலிருப்போம், பாதுகாப்பாக இருப்போம்“ என்ற தொனிப்பொருள் உலகளவில் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.

தொற்றுநோய்களுக்கு எதிர்ப்பு மருந்துகள் இல்லாமல் போகும் போது, நோயாளர்களைத் தனிமைப்படுத்தப்படுவது வரலாற்று நெடுகிலும் இடம்பெற்று வருகின்ற ஒன்றாகும். 1918 பெப்ரவரி முதல் 1920 ஏப்ரல் வரை உலகை ஆட்கொண்ட ஸ்பானிஸ் புழு அல்லது இன்புளுவன்ஸா பென்டமிக் முதலாவது, இரண்டாவது அலை ஏற்பட்ட போது, மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இது நமக்குள்ள கிட்டிய வரலாறாகும்.

கடந்த வாரம், ஆபிரிக்க ஆதிக்குடிகளின் மானுடவியல் வரலாறு குறித்த கட்டுரையொன்றை வாசிக்கக் கிடைத்தது. ஜனீ பொடி எழுதிய இந்தக்கட்டுரையில் கட்டுமஸ்தான கறுப்பின இளைஞன் ஒருவன் பற்றியும் எழுதியிருந்தார். அக்குலப் பெண்களின் மனதை வென்றவன் அவன். ஆனால், ஒரு போதும் தந்தை சொல் கேட்காத பிடிவாதக்காரன். அந்த ஆதிகுடிகள் வாழ்ந்த பகுதியில் மந்தைகளுக்கு நீரற்றுப்போகும் நிலையேற்பட, தந்தை அவ்விளைஞனை அழைத்து நீரிருக்கும் பகுதியைக்கண்டு வருமாறு பணிக்கிறார். அப்போது அந்த இளைஞனிடம் இரண்டு விடங்களைப் பின்பற்றுமாறு தந்தை கேட்டுக் கொள்கிறார்.

முதலாவது, இறந்து கிடக்கும் மிருகங்களை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட வேண்டாம். இரண்டாவது, கொண்டு செல்லும் நீரினைச்சாப்பிட்ட பின்னர் குறைந்தளவு பருகவும் என தந்தை அந்த இளைஞனிடம் அறிவுரை சொல்கிறார்.

ஆனால், அந்த இளைஞனோ தனது தந்தையின் அறிவுரையைக் கேளாது, இறந்து கிடந்த மான் ஒன்றின் இறைச்சியை வயிறு புடைக்க சாப்பிட்டதுடன், கொண்டு சென்ற நீரினை தீருமளவு பருகியும் விடுகிறார்.
இவ்வாறு சாப்பிட்டு, நீர் அருந்தியதால் ஏற்பட்ட உண்ட களைப்பில் அவ்விளைஞன் அவ்விடத்திலே உறங்கவும் செய்கிறான். பின்னர் கண் விழித்துப் பார்க்கிற அவன், சூரியன் மறைவதை உணர்ந்து வீடு திரும்புகிறான். வீடு வந்ததும், தந்தையிடம் தான் நீரிருக்கும் பகுதி எதையும் காணவில்லை என்று சொல்லி விட்டு வீட்டினுள் இருக்கலானான்.

இரவு பொழுதுதை அவனால் கடக்க முடியவில்லை. அவன் வயிற்று வலியால் பீடிக்கப்பட்டான். பின்னிரவு தொடங்க அவனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. வயிறு வலித்துக் கொண்டே வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. தந்தையை சத்தமிட்டு அழைக்கிறான். தந்தை அவன் படும் வதையைக் கண்டு கண்கலங்குகிறார்.
அதிகாலை வரை இவ்வாறு அவதியுறும் அவனுக்கு தன்னால் முடியுமான கைமருந்தினை தந்தை செய்தும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதிகாலை தந்தை தனது குலத்தலைவனைக் காண ஓடிச்சென்று மகன் அவதியுறுவதைச் சொல்கிறார். குலத்தலைவன் கைமருத்துவர் ஒருவரை அழைத்துக் கொண்டு அவ்விளைஞனைக் காண விழைகிறார்.
கைமருத்துவரோ அவ்விளைஞனைப் பார்த்து விட்டு வந்து குலத்தலைவனிடம் இவ்வாறு சொல்கிறார். “இது ஒரு புதுவகை வியாதி. இது மற்றவர்களுக்கும் பரவக்கூடும் என்ற சந்தேகம் எனக்குள்ளது. இவரைச்சற்று தொலைவில் தனியாக இருக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் மருந்துகளைச் செய்து கொண்டுவருகிறேன்“ என்றார்.

இதனைக்கேட்ட குலத்தலைவன், அக்கட்டுமஸ்தான கறுப்பின இளைஞனைத் தனிமைப்படுத்துகிறார். அவனுக்கென பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட அறையுள் அவனை அழைத்துச்செல்லும் போது, அங்கு வியப்பிலிருந்த மக்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். இளம் பெண்கள் அவனைக் கண்டதும் கொல்லென சிரிக்கும் சத்தங்களும் கேட்கிறது என அக்கட்டுரையாளர் வரலாற்றைப் பதிகிறார்.

ஆக, பொது மக்களுக்குள் புதிய வகை நோய் அறிமுகமாகும் போதும், ஆதி குடிகளும் இவ்வாறு தனிமைப்படுத்தும் முறையையே கையாண்டுள்ளார்கள் என்பதை இதை வாசிக்கும் போது எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே, கொரோனா தொற்றின் மூலம் தனிமைப்படுத்தப்படும் மக்கள் பற்றியும், அவர் சார்ந்தவர்கள் பற்றியும் அல்லது ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்படும் போதும் சரி, அதைச்சார்ந்து எழும் கதைகளும், ஏனையவர்களின் புரிதல்களும் நேர்மறையானதாக அமைய வேண்டுமே தவிர, அவர் பற்றியோ அல்லது அப்பிரதேசம் பற்றியோ தவறான மனப்பதிவு எம்மிடம் உருவாகிவிடக்கூடாது.

மருத்துவத்துறை உரிய மருந்தினைக் கண்டுபிடிக்க எடுக்கும் காலத்திற்குள் ஏற்படும் இழுபறியால் மக்களைத் தண்டிக்குமளவிற்கு கதையாடல்களை பரப்புவது அவ்வளவு பொருத்தமற்றது. மருந்து கண்டுபிடிப்பாளர்களின் தவறு, மக்களின் தவறல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்றது போல, உடலாரோக்கியம் இருந்தால் தான் எதையும் செய்ய முடியுமென்பதே வெளிப்படையான உண்மையாகும். ஆக, தனிமைப்படுத்தும் நடைமுறையை மதித்து நடப்பதன் மூலம் தங்களையும், தங்களை அண்டி வாழும் மக்களையும், நாளைய சமூகத்தினையும் ஆரோக்கியமாக வாழ உதவுவோமாக.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed