Main Menu

யுத்தம், சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குழாய்க்கிணறுகள்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்புப் பகுதியிலுள்ள குடும்பங்களுக்கு 4 குழாய்க்கிணறுகள் கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு இன்று (17) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன், கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியத்தலைவர் மற்றும் ஆலோசகர்கள் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறித்த குழாய்க்கிணறுகளை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி வைத்தனர்.

குறித்த பகுதிகளுக்குச்சென்ற பிரதேச செயலாளரினால் மக்களின் பல்வேறு குறைகள் ஆராயப்பட்டு அவ்விடத்தில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த இக்குழாய்க் கிணறுகளில் இரண்டினை சுவிஸ் நாட்டில் வதியும் லிங்கன் சுதர்சன் என்பவர் செங்கலடியைச்சேர்ந்த அமரர் சுகிர்த மலர் அவர்களின் நினைவாக அனுசரணை வழங்கியிருந்தார்.

மேலும், மட்டக்களப்பு முனைத்தீவைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வதியும் காளி என்பவரினால் ஒரு குழாய்க்கிணறும் அக்கரைப்பற்றினைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டை வதிவிடமாகவும் கொண்ட யசோ ரெட்னா என்பவரின் நிதியுதவியுடன் மற்றுமொரு குழாய்க்கிணறும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed