Main Menu

எமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மறுப்பு

இந்த செய்தியைப் பகிர்க >>>

கடந்த 30.11.2020ம் திகதி “சட்ட நடவடிக்கை தாமதமாவதற்கு நீதிமன்றச் செயற்பாடுகளே காரணமாகும்” எனும் தலைப்பில் எமது இணைய தளத்தில் வெளிவந்த செய்திக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.குணசிங்கம் சுகுணன் அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அவர் எமக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி செய்தி தொடர்பில் தங்களது வலைத்தளத்தில் 2020 நவம்பர் 30ம் திகதி வெளிவந்த செய்தி தவறானது என்பதை ச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தற்போது அக்கரைப்பற்றில் கொவிட்-19 தொற்று அதிகரித்துக் காணப்படுவதனால் அதனைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்குடன் அக்கரைப்பற்று பொலிஸ் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு பலவிதமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் 2020 நவம்பர் 30ம் திகதி நடைபெற்ற எனது ஊடகவியலாளர் சந்திப்பில் என்னால் கூறப்பட்ட கருத்துக்கள் தவறான அர்த்தம் தரும் வகையில் தலைப்பிடப்பட்டு தங்கள் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.

2020 நவம்பர் 30ம் திகதி எனது ஊடகவியலாளர் சந்திப்பில் என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்து “இந்த கொவிட் -19 தொற்றிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக இங்கு தடுப்பு நடவடிக்கைகள் பல அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சினாலும் எங்களினாலும் மக்களுக்கு விலாவாரியாகக் கூறப்பட்டுள்ளது.

இருந்தாலும், அந்த தடுப்பு நடவடிக்கைகளை அவர்கள் மிகவும் கைக்கொள்ள வேண்டியவர்களாக இருப்பினும் அதை அவர்கள் நிராகரிப்பது போன்று நடந்து கொள்வது வேதனைக்குரியது. இந்த விடயங்களை தாங்கள் எத்தனை முறை அறிவுறுத்தல் மூலம் தெரிவித்திருந்தும் அது எங்களுக்கு வெற்றியளிக்காத பட்சத்தில் நாங்கள் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கியமான நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி உயர்வு தாழ்வின்றி இந்த சுகாதார நடைமுறைகளை அனைவரும் கைக்கொள்ள வேண்டும். நாங்கள் சட்டநடவடிக்கைகளுக்காக பல பெயர்களை நாங்கள் பதிந்து வைத்திருக்கின்றோம். இந்த நீதிமன்றங்கள் சரியாக இயங்குகின்ற போது உங்களுக்கு தெரிய வரும் எத்தனை பெருக்கெதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என்ற விடயத்தை கூறிக்கொண்டு மக்களை மீண்டும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் பாதுகாப்பு நடைமுறைகளை கைக்கொள்ளுங்கள் என்பதைத்தான்” என நான் வலியுறுத்திக் கூறிய எனது கருத்துக்கள் மேற்படி “Thehotlinelk” செய்தியில் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதிவை மறுதலிப்புச் செய்வதுடன், அதனை உடனடியாக நீக்கி விடுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரச உத்தியோகத்தராகிய நான் எமது நாட்டின் சட்ட ஒழுங்குகளுக்கு அமைவாக எப்பொழுதும் நடந்து வருகின்றேன். அரசையோ நீதிமன்றங்களையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு துணியளவுமில்லை என அவர் எமக்கு அனுப்பி வைத்துள்ள மறுப்பறிக்கையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr.குணசிங்கம் சுகுணன் அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed