Main Menu

Thehotline இன் “எதிரொலி”யில் இணைகிறார் எமது மண்ணின் இளம் விஞ்ஞானி M.I.ஹஸீம்தீன்

இந்த செய்தியைப் பகிர்க >>>

நேர்காணல்-எம்.ஐ,லெப்பைத்தம்பி
அதீ நவீன மருத்துவக்கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வரும் இளம் விஞ்ஞானியான M.I. Hazeemdeen அவர்களுடன் The Hotline இணைய செய்தித்தளம் மேற்கொண்ட நேர்காணலினைப்பதிவிடுகிறோம்.

M.I. Hazeemdeen, M.S.M இக்பால், M.S. சித்தி லதீபா தம்பதியின் மகனாவார். இவர் தனது ஆரம்பக்கல்வியை மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலத்தில் கற்றார். பின்னர் தனது உயர் கல்வியை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் கற்று, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அங்கே தனது விஞ்ஞான இளமானி பட்டத்தினை நிறைவு செய்தார். அதன் பின்னர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தனது விஞ்ஞான முதுமாணி பட்டத்தினை நிறைவு செய்து, தற்பொழுது தனது கலாநிதி (Ph.D.) கற்கையினைத் தொடர்கிறார்.

இவர் புற்று நோய் உட்பட பல சிக்கல் வாய்ந்த நோய்களுக்கு மருந்தினை உருவாக்கக்கூடிய பல அதி உயர் நுட்பங்களைக் கண்டுபிடித்தும், மேலும் மிக நுண்ணியளவில் செயற்பட்டு நோயினைக்கண்டு பிடித்து, அதனைக்குணப்படுத்தக்கூடிய புதிய வகையான Medical Nanorobot இற்கான அடிப்படைகளை உருவாக்கியும் மேலும் பல்வேறு வகையிலான கண்டுபிடிப்புகளையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும், இவர் தனது ஆய்வுகளை, பேராதெனிய பல்கலைக்கழகத்தின் Department of Electrical and Electronic Engineering மற்றும் Department of Chemistry உள்ள மூன்று பேராசிரியர்கள் உட்பட ஏழு நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மேற்கொண்டு வருகிறார்.

இவர் அண்மையில் தனது கண்டுபிடிப்புகள் தொடர்பான ஓர் உரையினை இங்கிலாந்திலுள்ள Oxford பல்கலைக்கதில் நிகழ்த்தினார். மேலும், தனது கண்டுபிடிப்புகளை பல்வேறு நாடுகளில் நடந்த சர்வதேச மாநாடுகளிலும் வெளியிட்டுள்ளார்.

அங்கே சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற அமெரிக்காவிலுள்ள Harvard பல்கலைக்கழகம் மற்றும் Oxford பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களினால் இவர் பாராட்டிக்கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவருடைய உயர்கல்வி மற்றும் கண்டுபிடிப்புக்களைத் தொடர்வதற்கான வழிகாட்டுதலினையும் உதவிகளினையும் தற்பொழுது அப்பேராசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாக, எமது மண்ணுக்கு பெருமை சேர்த்த, நவீன மருத்துவத்துறைக்கு பங்களிப்புச்செய்த இளம் விஞ்ஞானியாக  M.I. Hazeemdeen திகழ்கிறார்.

இவரின் சாதனைகள், ஆய்வுகள் தொடரவும், இவரது கண்டுபிடிப்புகளினூடாக மருத்துவத்துறை மென்மேலும் வளர்ச்சி பெறவும் எமது இணைய தளம் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.

1. எவ்வாறு உங்களுக்குள் மறைந்து கிடந்த திறமை வெளியில் கொண்டு வரப்பட்டது, நீங்கள் கடந்து வந்த பாதையின் அனுபவம் மற்றும் உங்கள் கண்டு பிடிப்புக்கு நீங்கள் பாவித்த துறைகள் பற்றிக்கூற முடியுமா?
உண்மையில் எனக்கு சிறு வயதிலிருந்தே புதிய விடயங்களை உருவாக்குவதும், தேடுவதும் பொழுதுபோக்காகவும் ஆர்வமாகவும் இருந்து வந்துள்ளது. அந்த வகையில், என்னுடைய உயர் தரப்பரீட்சையினை 2008 ஆம் ஆண்டு தோற்றியிருந்த நிலையில், எங்களால் முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சாதனத்தை உடலினுள் செலுத்தி, உடலிலுள்ள நோயினைக்கண்டு பிடிக்கவும் குணப்படுத்தவும் கூடிய ஒரு மிக நுண்ணிய கட்டமைப்பொன்றினைக் கண்டு பிடிக்க வேண்டுமென்ற அவா தோன்றியது. ஆனால் அந்த நேரத்தில் என்ன  துறையைக்கற்க  வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தில்
இவ்வாறிருக்கும் போது, 2009 இல் கிழக்கு பல்கலைக்கழகத்தின் செளக்கிய பராமரிப்பு பீடத்தில் B.Sc. in Nursing எனும் நான்கு வருடப்பாடநெறிக்குத் தெரிவு செய்யப்பட்டேன். இப்பாடநெறியில், 70 % வீதமான பகுதி மருத்துவப்பாடங்களைக் கொண்டிருந்ததால், அதில் பிரதானமாக Surgery, Medicine, Pediatrics, Obstetrics and gynecology, Psychiatry போன்ற துறைகளைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களினாலும், Nursing மற்றும் Pharmacology போன்ற இதர பாடநெறிகளை Norway நாட்டு Tromso பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இந்தியாவிலிருந்து வரப்பட்ட விரிவுரையாளர்களினாலும் செளக்கிய பராமரிப்பு பீடத்தின் விரிவுரையாளர்களினாலும் ஒரு மருத்துவ மாணவனைப் போன்றே மிகச்சிறப்பாகக் கற்பிக்கப்பட்டோம்.

இருந்தாலும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 3+1 பிரச்சினையினால் எங்களுக்குப் பிறகுள்ள மாணவர்களினது பாடநெறியினது வீரியம் குறைக்கப்பட்டமை வருந்தத்தக்கது.

கண்டுபிடிப்பிற்கான பயணத்தில் தடம் வைத்த போது.
இவ்வாறிருக்கும் போது, 2008 ஆம் ஆண்டு தோன்றிய அந்தக்கண்டுபிடிப்பை எவ்வாறேனும் கண்டு பிடிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்ததது. ஆனால், இதற்கு எத்துறையைக் கற்க வேண்டும்? என்ன மூலப்பொருளிலிருந்து உருவாக்க வேண்டும்? என்ற ஒன்றும் எனக்குப்புரியவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் விளங்கிக்கொண்டேன்.

இதற்காக அதிகளவான பகுப்பாய்வுத்திறனும், இலத்திரனியல், பொறியியல் (Electronic Engineering) தொடர்பான ஆழமான அறிவும் தேவைப்படுமென எண்ணினேன். ஆகவே, 2009 ம் ஆண்டே எனது பீடத்திற்கருகிலுள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் Computer Engineering Technology பட்டப்படிப்பை பதிவு செய்து, அற்கற்கயினைத்தொடர ஆரம்பித்தேன்.

இதற்க்காக உயர் தரக்கணிதத்தை சில நண்பர்களின் உதவியுடன் ஆழமாகக் கற்றேன். ஏனெனில், உயர் தரக்கணிதத்தில் புலமையில்லாமல் எந்த உயர் அறிவியலைக் கற்பதோ, உயர் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை மேற்கொள்ளவோ முடியாது.

அத்துடன், எனது பகுப்பாய்வுத்திறனை அதிகரித்துக் கொள்வதற்காக முதலில் Computer Programming மூலம் ஒரு கண்டுபிடிப்பை மேற்கொள்வோம் என்று எண்ணினேன். அந்த வகையில், வைத்திய நிபுணர்களின் அறிவையும் அனுபவங்களை உள்ளீடு செய்து, நோயினை வினைத்திறனாகக் கண்டுபிடிக்கக்கூடியதொரு வலையமைப்புக் கட்டமைப்பொன்றினை (Cognitive Clinical Decision Support System (CCDSS) ) Programming மூலம் உருவாக்க வேண்டுமென எண்ணினேன்.

இதற்காக நான் நான்கு வகையான சுமைகளைத் தாங்க வேண்டியிருந்தது. அதில், பிரதானமாக நான் தொடரும் இரு கற்கை நெறிகளுக்குரிய பாடத்திட்டத்தினைப் படித்து, அதில் வரும் பரீட்சைகளையும் Assignment களையும் செய்ய வேண்டும். அத்துடன், மூன்றாவதாக நான் உருவாக்க நினைத்த நோயைக்கண்டு பிடிக்கும் கட்டமைப்பின் வடிவமைப்பினையும் அதற்கான Algorithm இனையும் உருவாக்க வேண்டும்.

மேலும், நான்காவதாக இதற்க்கான Computer Programming இனையும் படிக்க வேண்டும். இவை நான்கும் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேலும், ஒரு துறையிலும் அனுபவமோ அறிவோ அத்துடன் ஆங்கிலப்புலமையோ இல்லாத எனக்கு, எல்லாமே எனது திட்டத்திற்கு எதிராகவே இருந்தது.

ஒரு வழிகாட்டலுமில்லாத சூழலிலிருந்த எனக்கு எதை எங்கிருந்து ஆரம்பிப்பது? எதை எப்படிக்கற்பதென்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தேன். அதனால், பகுப்பாய்வு செய்வதன் மூலம் எல்லாவற்றையும் கற்க ஆரம்பித்தேன்.

உதாரணமாக, Java மற்றும் PHP போன்ற Programming Language மூலம் உருவாக்கப்பட்ட வலையமைப்புக்கள் மென்பொருட்கள் என்பவற்றின் மொழிகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் தொடர்புக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் எனக்கொன்று தனியொரு உலகத்தையே உருவாக்கியிருந்தேன்.

இதனால் வைத்தியசாலைக்குச்சென்றாலும், பல்கலைக்கழகத்தில் இருந்தாலும், வீட்டுக்கு வந்தாலும் என் முழு நேரத்தையும் இதனை உருவாக்குவதற்கே செலவளித்தேன்.

இவ்வாறு 2009 இலிருந்து 2012 வரை எனது காலம் கடந்தது. மறுபுறமாக, இக்காலப்பகுதிக்குள் இந்நான்கு சுமையினாலும் எனது பரீட்சைப்பெறுபேறுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஒரு துறையிலும் பாரியளவிலான முன்னேற்றத்தினை நான் அடையவில்லை. இதனால் நான் கற்கும் சூழலிலிருந்து பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பியது. இவ்விரண்டு வருடங்களில் அங்கேயும் இங்கேயுமாக அடிபட்டு கந்தலாக்கப்பட்டேன் என்று கூடச்சொல்லலாம்.

மனிதாபிமானமுள்ள மனிதர்களின் செறிவை குறைவாகவே கண்டேன். இறுதியில் மன அழுத்தமும் நோயும் மோசமான பரீட்சை பெறுபேறுகளுமே எஞ்சியது. மனித ஆதரவற்ற உலகின் நரகமாகவே அந்தச்சூழல் எனக்கிருந்தது என்று சொல்லலாம். அந்நிலையில், எனக்கு இரண்டு தெரிவே இருந்தது

ஒன்று, எனது கண்டுபிடிப்புகளுக்கான சகல வேலைத்திட்டங்களையும் விட்டு, மற்ற மாணவர்களைப்போல் சந்தோசமாக இருக்க வேண்டும் அல்லது அந்தச்சூழலிலிருந்து நான் வெளியேற வேண்டும்,

இருந்தாலும், செய் அல்லது செத்து மடி (Do or Die) என்ற கொள்கையிலிருந்த எனக்கு அந்த இரண்டு தீர்வும் கோழைத்தனமாகவே இருந்தது. இதனால் ஒன்றையும் கவனியாமல் எனது பணியைத்தொடர ஆரம்பித்தேன்.

நிலைமை இன்னும் மோசமாகியது, இதுவெல்லாம் எனது தலையில் தூக்கிப்போட்டு நானே தேடிக்கொண்டதென்று நண்பர்கள் அறிவுரை கூறினார்கள். நான் ஒன்றையும் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தினாலும் நோயினாலும் மரணித்து விடுவோனோ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

இந்த காலப்பகுதிக்குள் எனது பெற்றோர்களும் அதில் முக்கியமாக எனது தாயாரும் மூத்த சகோதரரும் மற்றும் ஒரு சில கரிசனையாளர்களுமே எனக்கு எல்லா வகையிலும் ஆதரவாளர்களாக இருந்தார்கள்.

அந்த அதியுச்ச பயங்கரமான நேரத்தில் எனது எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கான வேலைத்திட்டங்களையும் நிறுத்தினேன். ஓரிரு மாதங்கள் ஒன்றுமே மேற்கொள்ளாமல் ஓய்வெடுத்தேன்.

பிறகு, எனது திட்டங்களை மீளாய்வு செய்த பிறகு, இதனை எப்படியாவது மீளத்தொடர்வதற்கான மூலோபாயத் திட்டங்களை உருவாக்க எண்ணினேன். இதற்காக மேலும் ஓரிரு மாதங்களுக்கு Neuroscience இனையும் Psychology இனையும் மிக ஆழமாகக்கற்று, சுமயமாகக்கற்கும் நுட்பங்களை எனக்கென்றே உருவாக்கினேன்.

மேலும், என்ன வகையான பிரச்சினை வந்தாலும், அதனைச் சமாளிக்கக்கூடிய மனத்திடத்தினையும் பெற்றேன். இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதற்குப்பிறகு மீதியுள்ள நாட்களெல்லாம் தலை கீழாக மாறியது.

கண்டுபிடிப்புக்களை உருவாக்க ஆரம்பித்த காலம்
பின்னர் எல்லாத்துறைகளையும் மிக இலகுவாகவே கற்றேன். பரீட்சைப்பெறுபேறுகள் சீரானது . மேலும் CCDSS இற்கான Algorithm இனையும உருவாக்கினேன். அத்துடன், என்ன வகையான கண்டுபிடிப்பையும் யோசிப்பதற்கான திறனைக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

அதைப்பரீட்சிப்பதற்காக ஒரு நல்ல சந்தர்ப்பமொன்றும் 2012 இல் வந்ததது. அது தான் எங்கள் பீடத்தில் நடந்த மருத்துவக்கண்காட்சி. அதிலே எனக்கும் ஏதாவதொன்றைச்செய்ய வேண்டுமென்றவொரு சந்தர்ப்பம் வந்ததது.

அதிலே நான், நோர்வே நாட்டிலுள்ள சிகரெட் புகைப்பவர்கள் 5 இலட்சம் நபர்களில் செய்யப்பட்ட ஆய்வு முடிவிலிருந்து ஒரு கணிதச்சமன்பாட்டினை உருவாக்கி, அதனை Programme செய்ததன் மூலம் புகைப்பவர் ஒருவரின் மீது ஏற்படும் நோயின் நிகழ்தகவைப்பகுப்பாய்வு செய்யக்கூடிய ஒரு மென்பொருளினை (Software) உருவாக்கினேன்.

(Smoking Effect Analyzer (SEA)) இதனைக்கண்காட்சிக்கு வந்த சுமார் 25,000 நபர்களுக்கு விளங்கப்படுத்தி இருந்தேன். மேலும், கூறப்போனால் இம்மென் பொருளை உருவாக்குவதற்காக சுமார் மூன்று மாதங்களையே செலவிட்டுருந்தேன்.

இதற்குப்பிறகு ஒரு விடயத்தினை உருவாக்குவதற்கான திறன் அசூர வேகமடைந்திருப்பதை உணர்ந்தேன். பின்னர் 2012 இலிருந்து 2014 காலப்பகுதிக்குள் CCDSS இன் Algorithm இனை System ஆக மாற்றுவதற்காக Java-Enterprise-Edition ஐயும் Software Engineering நுட்பங்களையும் கற்றேன்.

அதற்கு மேல் அதனைத்தொடர்வதற்கு ஒரு Software Engineering Company இன் உதவி தேவைப்பட்டதால் அத்திட்டத்தினை நிறுத்தினேன். அதுவரைக்கும் நான் உருவாக்கிய CCDSS மற்றும் SEA இலிருந்து ஆழமான Programming அறிவினையும் பகுப்பாய்வு செய்யும் திறனையும் பெற்ற பின்னர், நான் பிரதானமாக உருவாக்க நினைத்த கண்டுபிடிப்புக்குத் தேவையான Electronic Engineering தொடர்பான அறிவையும் தானாகேவே ஒரு வருடத்திற்குள் கற்றேன்.

அத்துடன், இதற்குச்சமாந்தரமாக 2014 இல் எனது பட்டப்படிப்பும் முடிந்தது. மேலும், எனக்குத்தேவையான Programming அறிவினையும் Electronic Engineering தொடர்பான அறிவினையும் தானாகவே கற்றிருந்ததால் திறந்த பல்கலைக்கழகத்திலுள்ள (Open University) கற்கை நெறியினைத்தொடர வேண்டிய தேவை அந்த நேரத்தில் எனக்கிருக்கவில்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்.
மேலும், எனது பிரதான கண்டுபிடிப்பிற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு பொறியியல் அறிவும் மட்டும் போதாது. அதனை உருவாக்கத்தேவையான ஆய்வுகூட அறிவும்  மூலப்பொருள்  (Materials) தொடர்பான ஆழமான அறிவும் தேவைப்படுமென்பதை உணர்ந்து, பட்டப்பின்படிப்புத் துறைகளை ஆராய்ந்து Nano-science and Nanotechnology இலிருக்கும் விஞ்ஞான முதுமாணிப்பட்டமே இதற்குப் பொருத்தமானதெனக் கருதினேன்.

இவ்வாறு எனது பட்டபடிப்பின் இறுதிக்கட்டத்திலிருக்கும் போது, பேராதெனிய பல்கலைக்கழகம் Master of Science in Nano-science and Nanotechnology எனும் பட்டப்பின் படிப்புக்கு அழைப்பினை விடுத்திருந்தது. அதற்கு விண்ணப்பித்து, அதற்கான நேர்முகத்தேர்வுக்கும் அழைக்கப்பட்டிருந்தேன்.

பொதுவாக, Master of Science in Nano-science and Nanotechnology இனைத்தொடர்வதற்கு அடிப்படைத் தகைமையாக B.Sc. in Engineering அல்லது Physics or Chemistry இல் Special Degree இருக்க வேண்டும்.

ஏனெனில், இத்துறை சார்ந்தவர்களினாலேயே Nanotechnology இனை இலகுவாகக் கற்க முடியும். நேர்முகத்தேர்வில் எனது பட்டம் மருத்துவ விஞ்ஞானம் தெடர்பான பட்டமாக இருந்தாலும், இலத்திரனியல் பொறியியல் தொடர்பான அறிவும் அதிநுட்பமான கண்டுபிடிப்புக்களையும் மேற்கொண்டிருந்ததால், எனக்கும் Master of Science in Nano-science and Nanotechnology இனைப் படிக்கலாமென்று அங்கே இருந்த தலைமைப்பேராசிரியர் ஒரு நிபந்தனையுடன் அனுமதி தந்தார்.

அதாவது, எனது பட்டப்படிப்பை 25-04-2014 இற்கு முன்னதாக நான் நிறைவு செய்தால், இக்கற்கை நெறியினைத் தொடர முடியும். அதற்குப்பிறகு இறைவனின் உதவியுடனும் எனது பீடத்தின் உதவியுடனும் பலத்த முயற்சிக்குப்பிறகு எனது முதலாவது பட்டத்தினை 24-04-2014 நிறைவு செய்ய முடிந்தது. இந்த இரண்டு நாட்களும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகவும் உள்ளது.

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கற்க ஆரம்பிக்கும் போது.
பின்னர் M.Sc.. இற்குத் தெரிவு செய்யப்பட்ட ஆனந்தத்துடன், இக்கற்கை நெறியினைத் தொடர ஆரம்பித்தேன். உண்மையில், நானோ தொழிநுட்பமென்பது நவீன காலத்திலுள்ள நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானிகளின் அதிக எண்ணிகையுமுள்ள விசாலமான விஞ்ஞானத்துறைகளையுடைய அடர்ந்த பரப்பைக் கொண்ட அறிவியலாகும்.

இப்பாடநெறியில் பல அதி நவீன அறிவியலை உள்ளடக்கிய துறைகளையும் அதிநுட்பமான இயல்புகளை வெளிப்படுத்தும் உபகரணங்களையும் (Materials) ஆய்வு செய்து உருவாக்கக்கூடிய பாடங்களையும் உள்ளடக்கியிருந்தது.

நான் இத்துறையைக்கற்க ஆரம்பிக்கும் போது, என்னால் விளங்கிக் கொள்ள முடியாமலிருந்த பாடம் Quantum Mechanics /Quantum Physics ஆகும். அதுவரை எனக்கு மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான துறைகளும் பொறியியல் தொடர்பான அறிவும் தெரியுமென்பதால், எனக்கு எல்லாம் தெரியுமென்ற பிரம்மையுடன் இருந்த எனக்கு, Quantum Physics துறையினைக் கண்டவுடன் எல்லா எண்ணங்களும் சுக்கு நூறாகியது.

ஏனெனில், உலகில் உருவாகிய விஞ்ஞானிகள் ஐன்ஸ்ட்டின் உட்பட பல அறிவியலாளர்களால் கூட முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாதவொரு துறை இருக்குமென்றால், அதை Quantum Physics எனக்கூறலாம்.

இத்துறையின் ஒரு வளர்ச்சியாக 10,000 விஞ்ஞானிகளையும் பொறியியலார்களையும் கொண்ட இலங்கையின் பாதியளவுடைய உலகிலேயே மிகப்பெரிய ஆய்வுகூடம் (European Organization for Nuclear Research (CERN))  ஓன்று ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போதுள்ள பொறியியல், வானவியல் மற்றும் மருத்துவம் போன்றே துறைகளுக்கு முற்றிலும் மாற்றமான அடுத்த நூற்றாண்டை ஆக்கிரமிக்கக்கூடிய அதியுயர் நுட்பமுடைய பொறியியல், மருத்துவம் மற்றும் ஏனைய துறைகளுக்குரிய தேவையான அறிவியல் இங்கிருந்து தான் உருவாகின்றது.

அத்துடன், இக்கடினமான பட்டப்பின்படிப்பைத் தொடரக்கூடிய வகையில் பொருத்தமானதும், எனது விருப்பத்துக்குரிய வேலையொன்றினை தேடினேன். அதன் விளைவாக ஒரு பொருத்தமான நிறுவனத்தை அடையாளம் கண்டேன்.

அந்த நிறுவனம் ஒரு மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான பெருமளவு தகவலை மக்களிடமிருந்து திரட்டி, அதனைப்பாகுப்பாய்வு செய்வதும் மற்றும் மருத்துவம் தொடர்பான மென்பொருட்களை உருவாக்கும் நிறுவனமாகவும் இருந்தது.

அங்கே சென்று தலைமை மென்பொருள் பொறியிலாளரிடம் (Senior Software Engineer) அனுமதி பெற்று, நான் உருவாக்கிய மருத்துவம் தொடர்பான மென்பொருட்களைக் காண்பித்தேன். அவர் உண்மையில் சந்தோஷப்பட்டார்.

அவர் கூறினார் “ஒரு நிறுவனம் செய்யக்கூடிய வேலையினை நீங்கள் செய்திருக்கிறீர்கள். எங்களிடம் Programming செய்யக்கூடியவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். எங்கள் பிரச்சினை என்னவென்றால். மருத்துவம் (Medical) தொடர்பான பெருந்திரள் தகவல்களிலிருந்து மென்பொருள் (Software) செய்வதற்கான திட்டக்கட்டமைப்பினை உருவாக்குவதே பெரும் கடினமான விடயம். உங்களிடம் அந்தத்திறமை இருக்கிறது.

நீங்கள் செய்த மென்பொருளினைப் போல் நாங்கள் சேர்ந்து வேறு விதமான மென்பொருட்களை உருவாக்கலாம். இது தொடர்பான ஒரு புதிய பகுதியினை எங்கள் நிறுவனத் தலைமையிடம் பேசி உருவாக்குவோம். அதற்கு முதல் எங்கள் கிளையிலுள்ள மருத்துவத்தகவல் தொடர்பான பகுதிக்கு பொறுப்பானவரிடம் கலந்துறையாடுவோம்” என்றார்.

பின்னர் நடந்த கலந்துரையாடலில் அந்த மருத்துவத்தகவல் தொடர்பான பொறுப்பாளர் எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக்கிடைப்பதை விரும்பவில்லை. இத்திட்டத்தை நிறுத்துவதற்கு அவரின் உள்ளத்திலிருந்த நோயினால் மிகுந்த கரிசனை எடுத்துக்கொண்டார்.

அவருடைய செயலைப்பார்த்து தலைமை மென்பொருள் பொறியிலாளரே ஆடிப்போய் விட்டார். அவரின் நடவடிக்கையினால் எனக்கும் கோபம் வந்தது, பின்னர் அமெரிக்காவிலுள்ள அந்த நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அறிவித்து, இந்த வேலைத்திட்டத்தை எப்படியாவது ஆரம்பிக்கவேண்டுமென்று நினைத்தேன். பிறகு அவரின் நெஞ்சிலுள்ள நஞ்சை என்ன செய்வது? அந்தத்திட்டத்தை கைவிட்டேன்.

மீண்டும் எனக்குப் பொருத்தமான ஒரு நிறுவனத்தை தேடிக்கண்டுபிடித்தேன். அந்த நிறுவனமானது, நோயாளிகள் மற்றும் அவர்களின் உடலிலுள்ள நுண்ணங்கிகளின் DNA இன் தொடர் ஒழுங்கினைக் கண்டறிந்து, அதை Computer Programming மூலம் பகுப்பாய்வு செய்யக்கூடிய Bio-Medical Information எனும் வேலைக்கு விண்ணப்பம் கோரி இருந்தார்கள்.

அதற்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வுக்கும் அழைக்கப்பற்றிருந்தேன். அங்கே எனக்கொரு நிபந்தனையுடன் அந்த வேலையைத் தருவதாகக் கூறினார்கள். அதாவது, எனது ஆய்வு வேலைத்திட்டங்கள் மிகப்பெரிதாக இருப்பதால், அது அவர்களுடைய வேலையைப்பாதிக்கும் என்ற காரணத்தினால் எனது கண்டுபிடிப்புகளுக்கான வேலைத்திட்டங்களை நிறுத்தி விட்டு, அவர்களுடன் நீண்ட காலம் வேலை செய்ய வேண்டுமென்றார்கள். எனது வேலைத்திட்டங்களை நிறுத்தவில்லை. அந்த வேலையை மறுத்து விட்டேன்.

அந்த நேரத்தில், எனக்கு இரன்டு தேர்வுகளே இருந்தது. ஒன்று எனது பாரிய வேலைத்திட்டங்களை கைவிட்டு, கிடைத்த வேலையைச்செய்ய வேண்டும். அல்லது எனது மேற்படிப்பைச் சிறப்பாகக்கற்க வேண்டும்.

என்ன செய்வதென்று புரியாமலிருந்த நேரத்தில் இறைவனின் உதவியால் திடீரெண்டு அமெரிக்காவிலிருந்து ஒரு பெரும் தொகையான புலமைப்பரிசில் எனது மேற்படிப்பைத் தொடர்வதற்காக கிடைத்தது.

பின்னர் அது ஒன்றையும் கவனியாமல் எனது மேற்படிப்பைத் தொடரலாம் என்ற நம்பிக்கையையும் அடையாளத்தினையும் தந்தது. அத்துடன், எனது பெற்றோரும் குறிப்பாக, எனது தாயாரும் மூத்த சகோதரரும் மற்றும் சில நண்பர்களும் நாங்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்போம். மேற்படிப்பைத் தொடருங்கள் என்றார்கள்.

உண்மையில் இவர்கள் எனக்காகச்செய்த தியாகங்கள் பக்கம் பக்கமாக எழுதப்படக்கூடியவைகள். அந்த நேரத்தில் இவ்வளவு ஆதரவு கிடைத்ததால் எனக்கு புதியதொரு புத்துணர்வும் அதிக நேரமும் கிடைத்தது.

Protein Engine (Novel Medical Nano-robot) இற்கான திட்டத்தை உருவாக்கிய போது
மீண்டும் எனக்கு 2008 இல் தோன்றிய கண்டுபிடிப்பிற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளலாமென நினைத்தேன். இதற்காக Nanotechnology துறைக்கு மேலதிகமாக Cellular Biology, Molecular Biology, Chemical-Bio-Sensor, Bioinformatics, and Computational Biology ஆகிய துறைகளை ஆழமாகக்கற்றேன்.

இத்துறைகளெல்லாம் எங்களுடைய உடல் மூலக்கூற்று ரீதியில் எவ்வாறு தொழிற்படுகிறது? மேலும், ஒரு நோய் வந்தால், அது எங்களை மூலக்கூற்று அடிப்பையில் எப்படிப்பாதிக்கின்றது? என்ற அறிவினை ஆழமாகக் கொண்டிருக்கும்.

அத்துடன், இவ்வாறான துறைகள் புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான பாதையையும் காட்டித்தரும். இதற்காக ஏறத்தாழ பல மணி நேரங்களைச் செலவளித்தேன். சுமார் ஒரு நாளைக்கு 17 மணித்தியாலங்கள் என்ற கணக்கில் பல நாட்களைச் செலவளித்திருப்பேன்.

அதற்குப்பிறகு நான் நினைத்த பிரதான கண்டுபிடிப்பிற்க்கான முழுமையான யோசனை (Idea) வந்தது. அதாவது, Protein மூலக்கூறுகளை Nano-Scale இல் செய்யப்பட்ட Electromagnetic Optic Sensor மற்றும் Nano-electronic Processor உடன் சேர்த்து உடலை Atomic-Scale இல் ஸ்கேன் செய்யக்கூடியதும், அதே போல் Protein மூலக்கூறுகளை தேவையான இடத்தில் Delivery செய்து பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியதுமான ஒரு புதிய வகையான Medical Nano robot (Protein Engine) எனும் மிக நுண்ணிய உபகரணத்திற்கான ஒரு வடிவமைப்பை உருவாக்கினேன்.

இதனை பின்னர் 4D தொழிநுட்பம் மூலம் ஒரு விபரிப்புப்படமாக மாற்றிய பின்னர், இது தொடர்பாக எனது தலைமைப்பேராசிரியரிடம் அறிவித்து, அவரைச்சந்திப்பதற்கான அனுமதியையும் பெற்றேன். அச்சந்திப்பில், எனது கண்டுபிடிப்பிற்கான திட்டங்களைப் பார்த்த பேராசிரியர் பெரிதும் சந்தோசப்பட்டு இதனைச் செய்வதற்கான வழிகாட்டலையும் உதவியையும் அளிப்பதாக உறுதியளித்தார்.

இதற்காக, மேலும் ஒரு Electronics துறை சார்ந்த பேராசிரியர் ஒருவரையும் Computational Chemistry துறையைச்சேர்ந்த Ph.D.நிபுணரையும் இத்திட்டத்துடன் இணைத்தார்.

Protein Engine எனும் கண்டுபிடிப்பிற்கான திட்டமானது, Protein Design, Protein Engineering, Nanotechnology, Electromagnetic Engineering, Electronic Engineering, Computational Chemistry, and Structural Biology போன்ற பல சிக்கலான துறைகளைக் கொண்டும், மேலும் முற்று முழுதாக நானே உருவாக்கியும் இருந்ததால், எல்லாவற்றினையும் நானே கற்று நானே கண்டுபிடிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் இருந்தேன்.

இது பெரும் சுமையாக இருந்தததால், ஒரு விடயத்தினைக் கண்டுபிடிப்பதற்கான யோசனை இலகுவாக வருவதற்கான நுட்பத்தினை Induced Neuroplasticity மூலம் எனக்கென்றே சில தனித்துவமான நுட்பங்களை உருவாக்கினேன்.

அதாவது Induced Neuroplasticity எனப்படுவது , எங்களது மூளை ஒவ்வொரு திறனுக்கும் அனுபவத்திறகும் ஏற்ற வகையில், மூளையிலுள்ள நரம்புக்கட்டமைப்பு வலையமைப்பின் தொடர்பினை மாற்றிக்கொள்ளும். இதனை Neuroplasticity என அழைப்பார்கள். சில நுட்பங்கள் மூலம் இந்த Neuroplasticity யைத்தூண்டுவதன் மூலம், எங்களுக்கு தேவையான இயல்புகள் மற்றும் திறமைகளை நாங்களே உருவாக்கிக் கொள்ளலாம்.

புரத மூலக்கூறுகளை உருவாக்கும் முறைமைகளின் உருவாக்கம்.
அந்த வகையில், முதலாவதாக, புதிய புரதக்கட்டமைப்புக்களை வடிவைப்பதில் நிபுணத்துவம் பெற எண்ணினேன். உண்மையில் புரத மூலக்கூறுகள் என்பது பல்லாயிரக்கணக்கான அணுக்களைக் கொண்ட ஒரு மூலக்கூற்றுக் கட்டமைப்பாகும்.

வெவ்வேறு வடிவங்களைக்கொண்ட பல மில்லியன் கணக்கான புரத மூலக்கூறுகளே எங்கள் உடலின் கட்டமைப்பினையும் தொழிற்பாட்டினையும் மிக நுண்ணிய முறையில் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது.

புதிய புரதங்களை எங்களுக்கு வடிவமைக்க முடியுமென்றால், பல்வேறு வகையான சிக்கல் நிறைந்த நோய்களுக்கு எங்களுக்கு மருந்தினை உருவாக்க முடியும். ஆனால், புரத மூலக்கூறுகள் பல்லாயிரக்கணக்கான அணுக்களைக்கொண்டிருப்பதால், Drug Design இனைப்போல் Protein Design எனும் பொதுவான முறைமையில்லை.

இத்துறை சார்ந்த விஞ்ஞானிகள் புரத மூலக்கூறுகளை வடிவமைப்பதற்கான வழிகளை அவர்களுக்கென்றே தனித்துவமான முறையில் உருவாக்கிக்கொள்வார்கள். அந்த வகையில், இறைவனின் உதவியினால் நானும் புதிய வகை புரத மூலக்கூறுகளை வடிவமைப்பதற்கான நுட்பங்கள் சிலவற்றை உருவாக்கினேன். இவ்வ்வாறு 2015 ஆம் ஆண்டு கடந்து போனது. இக்காலப்பகுதிக்குள் எனது உயர் கல்வி தொடர்பான மலேசியா விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தேன்.

புற்றுநோய்க்கான மருந்தொன்றினை வடிவமைக்க ஆரம்பித்திருந்த காலம்.
மேலும், நான் உருவாக்கிய புதிய புரத மூலக்கூறுகளை வடிவமைப்பதற்கான நுட்பங்களைப் பரீட்சித்துப் பார்பதற்காக புற்றுநோய்க்கான மருந்தொன்றினை ஒரு புதிய புரத மூலக்கூறொன்றினை வடிவமைப்பதன் மூலம் உருவாக்க எண்ணினேன்.

பின்னர் புற்றுநோய்க்கான பிரதான காரணியான கலங்களின் வாழ்க்கைக் காலத்தைத் தீர்மானிக்கும் DNA இன் அபூர்வ வளர்ச்சி என்ற காரணத்திற்கெதிராக (இப்பிரதான காரணத்தைக் கண்டுபிடித்ததற்காக 3 விஞ்ஞானிகளுக்கு 2009 இல் நோபல் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது) கிட்டத்தட்ட 2300 அணுக்களைக் கொண்ட ஒரு புதிய புரத மூலக்கூறொன்றினை நான் உருவாக்கிய தனித்துவ முறைமைகள் மூலம் வடிவமைத்தேன்.

பின்னர், Computational Chemistry நிபுணரான எனது மேற்பார்வையாளரின் (Supervisor) உதவியுடன் இதனை Molecular Dynamic Simulation நுட்பம் மூலம் பரிசோதித்து, வெற்றிகரமான முடிவுகளையும் பெற்றேன்.

2016 டிசம்பர் மாதம் டுபாயில் நடந்த International Cancer Care and Cure மாநாட்டில் எனது ஆய்வினைச் சமர்ப்பித்தேன். அத்துடன், எனது கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக அங்கே வருகை தந்திருந்த சர்வதேசளவில் புகழ் பெற்ற பல பேராசிரியர்களின் தொடர்பினையும் பெற்றேன்.

Protein Engine (Novel Medical Nanorobot) இற்கான முழுமையான வடிவமைப்பினை உருவாக்கிய காலம்.
2017 இல் மீண்டும் Protein Engine கண்டுபிடிப்பிற்கான வேலைத்திட்டத்தினைத் தொடர ஆரம்பித்தேன். இதற்காக Computational Electromagnetic Engineering மற்றும் Asynchronous Electronic Processor Design எனும் துறைகளைக்கற்று Protein Engine இனுடைய Scan System இன் வடிவம் மற்றும் Electronic Processor இன் கட்டமைப்பு என்பவற்றை வடிவமைப்புச்செய்தேன்.

பின்னர், எனது கண்டுபிடிப்பிற்கான வேலைத்திட்டத்தினை கண்காணித்து வழிகாட்டுவதற்கு Engineering துறைசார்ந்த பேராசியரியர்களின் உதவி தேவைப்பட்டது. பின்னர் எனது தலைமைப் பேராசிரியரின் பரிந்துரையுடன், பேராதெனிய  பல்கலைக்கழகத்தின்  Electrical and Electronic Engineering துறைசார்ந்த ஓரு பேராசிரியரின் உதவி கிடைத்தது. அவர் எனது கண்டுபிடிப்பை தொடர்வதற்காக பெரிதும் உறுதுனையாக இருந்தார்.

அவர், ” நீங்கள் உங்களுடைய Protein Engine இற்குப் பாவித்திருக்கும் Computational Electromagnetic Engineering மற்றும் Electronic Embedded Architecture போன்றே துறைகள் மிகவும் ஆழமாகவுள்ளது. இது தொடர்பாகவுள்ள வேறு பேராசிரியர்களின் உதவிகளைப் பெற்றுத்தருகிறேன்” என்று கூறி அப்பேராசிரியர்களின் தொடர்பினையும் ஏற்படுத்தித்தந்தார்.

மேலும், அவர் என்னுடைய கண்டுபிடிப்புகளை IBM போன்றே நிறுவனங்கள் ஆர்வமாக உள்வாங்குவார்கள் எனக்கூறி அங்கே போகக்கூடிய உதவிகளையும் செய்து தருவதாக எனக்கு நமிபிக்கையூட்டினார்.

தற்போது எனது இரு பிரதான கண்டுபிடிப்புகளுக்கான வேலைத்திட்டங்களை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் Electrical and Engineering Department மற்றும் Chemistry Department இலிருந்து மூன்று பேராசிரியர்கள் உட்பட மொத்தமாக 7 நிபுணர்கள் வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பின்னர், எனது ஆய்வுகளை இங்கிலாந்திலுள்ள  University of Oxford மற்றும் சர்வதேச நனோ மருத்துவ ஆராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கும் பெரும் வாய்ப்பொன்று வந்தது. 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எனது இரு கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளையும் அங்கே சமர்ப்பித்தேன்.

அங்கே மிகவும் முக்கியமான பேராசிரியர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் எனது கண்டுபிடிப்புகளுக்கான வேலைத்திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான உதவியையும் செய்து தருவதாக உறுதி மொழியினையும் தந்தார்கள்.

தற்பொழுது நான் புற்றுநோய்க்கான மருந்து தொடர்பான ஆய்வினை முதலாவது மேற்கொள்வோம் என்ற எண்ணத்தில், அடுத்த கட்டமான Ph.D. இனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேன். தற்பொழுது இறைவனினின் உதவியுடன் எனது கண்டுபிடிப்புகளுக்கான வேலைத்திட்டங்களை தொடர்ந்தும்
மேற்கொள்வதற்காக பல பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மிகப்பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், இராஜதந்திரிகள் எனப்பெரியதொரு வட்டம் உள் நாட்டிலிருந்து சர்வேதேசம் வரை எனக்கு உதவியாகவும் பக்க பலமாகவும் இருக்கிறார்கள். இது எனக்கு மென்மேலும் மகிழ்ச்சியினையும் நம்பிக்கையினையும் தந்திருக்கிறது.

இறுதியாக, இந்த நிலைக்கு உயர்த்திய இறைவனுக்கு முதலில் நன்றியும் மற்றும் எனக்காக கஷ்டப்பட்ட எனது பெற்றோர்கள், முக்கியமாக எனது தாய்க்கும் மூத்த சகோதரருக்கும் எனது சில நண்பர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அத்துடன், மேலும் எனக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டிய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2. Oxford அனுபவம் பற்றி
உண்மையில் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் (University of Oxford) எனது ஆய்வுகளைச் சமர்பிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமையானது, எனது கண்டுபிடிப்புகளுக்கு சர்வதேச ரீதியாக கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரமாகவும், அத்துடன் எனது கல்விப்பயணத்தில் நான் கண்ட ஒரு மிகப்பெரிய அடைவாகவும் காண்கிறேன்.

அத்துடன், நான் ஏற்கனவே கூறியது போல அங்கே அதிகமான பேராசிரியர்களின் தொடர்பும் வழிகாட்டலும் கிடைத்தது. அவர்கள் ஒருவரிடம் இருக்கும் ஒரு திறமையினை அடையாளங்கண்டால், அத்திறமையுள்ளவர்களைப் பாராட்டி அவர்களுக்கு உதவ முன்வரும் நல்ல மனப்பாங்கு கொண்டவர்களாகவும் பண்பாடானவர்களாகவும் இருந்தார்கள்.

இப்பயணத்தில் Tissue Engineering துறையில் சர்வதேச ரீதீயில் மிகப்பிரபல்யமடைந்த மற்றும் மனித உடலுறுப்புக்களை ஆய்வுகூடத்தில் வளர்க்கும் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் மிகப்பெரிய விஞ்ஞானியின் சந்திப்பும் தொடர்பும் கிடைத்தமையை நினைத்து மகிழ்வடைகிறேன்.

3. Tissue Engineering என்ற துறையை தெளிவுபடுத்தமுடியுமா ?
அதாவது, எங்களின் உடற்பாகங்களின் கட்டமைப்புக்கள், தொழிற்பாடுகள் என்பவற்றைத் தீர்மானிப்பதற்கு ஏறத்தாழ  30,000 பரம்பரை அலகுகள் எங்களின் ஒவ்வொரு உடற்பாகங்களிலுமுள்ள கலங்களில் காணப்படுகின்றது.

ஒரே வகையிலான பரம்பரை அலகுகள் எல்லாக்கலங்களிலும் காணப்பட்டாலும், எங்களின் ஒவ்வொரு உடலுறுப்பின் தன்மை மற்றும் தொழிற்பாடுகள் ஒன்றோடுடொன்று வேறுபடுகின்றது. இதற்கு என்ன காரணமென்று இன்னும் இதனை விளக்கிக்கூறினால், கலங்களிலுள்ள DNA இன் தொழிற்பாட்டினைக் கட்டுப்படுத்தும் வெவ்வேறு விதமான புரத மூலக்கூறின் உதவியுடன் சில பரம்பரை அலகுகளின் இயல்புகள் வெளிப்படுத்தப்படுகிறது. சில பரம்பரை அலகுகளின் இயல்புகள் மறைக்கப்படுகிறது  உதாரணமாக, சிறு நீரகத்திலுள்ள கலங்களை எடுத்துக்கொண்டால், அதில் மற்றைய அங்கங்களுக்குரிய இயல்புகள் மறைக்கப்பட்டு, சிறுநீரகத்திற்குரிய இயல்புகள் மாத்திரம் வெளிப்படுத்தப்படுகிறது.

இதனை அடிப்படையாக வைத்து சில நுட்பங்கள் மூலம் பரம்பரை அலகுகளின் வெளிப்படும் தன்மை மற்றும் மறைக்கப்படும் தன்மைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிக்கல் குறைந்த இழையமைப்புடைய அங்கங்கள் ஆய்வு கூடத்தில் வளர்க்கப்பட்டு, மனிதனுக்கு பொருத்தப்படுகின்றது

உதாரணமாக, மூக்கு, காது, தோல் போன்ற அங்கங்கள் தற்பொழுது வெற்றிகரமாக வளர்க்கப்பட்டிருக்கின்றது.சிறுநீரகம் போன்ற சிக்கலான இழையமைப்பையுடைய அங்கங்களை வளர்ப்பதற்கான முயற்சிகள் தற்பொழுது விஞ்ஞானிகளினால் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இது தொடர்பான துறையே Tissue Engineering எனப்படும்.

4. தற்காலத்தில் விஞ்ஞானத்துறையில் ஏற்பட்ட அதீத வளர்ச்சி மருத்துவத்துறையில் ஏற்பட்ட தாக்கத்தினைப்பற்றிக் கூற முடியுமா?
நான் ஏற்கனவே இது தொடர்பான பல தகவல்களைக்கூறி விட்டேன். இதற்கு மேலதிகமாகக் கூற வேண்டுமென்றால், தற்போழுது விஞ்ஞானிகள் Quantum Computer இனை உருவாக்கியுள்ளார்கள். இது புதிய மருந்துகளைக்கண்டுபிடிக்கும் வேகத்தினை தற்போதைய நிலையை விட பல மடங்கு அதிகரிக்கும்.

மேலும் Artificial Intelligence மற்றும் Machine Learning போன்ற துறைகளின் வளர்ச்சியினால் மிக நுணுக்கமாக சத்திர சிகிச்சைகளை கூடியதும் Image Recognition செய்து நோய்களைக் கண்டுபிடிக்கக் கூடியதுமான அதிநுட்பமான இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இது சத்திர சிகிச்சை துறையில் மிகப்பெரிய புரட்சியை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

5. “Nano-robot மூலம் புற்றுநோய்க்கான மருந்து” இது பற்றிய தெளிவினை வழங்க முடியுமா?
தற்பொழுது நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் புற்றுநோய்க்கான புரத மூலக்கூறினை உடலினுள் செலுத்துவதற்கு Medical Nanobot (Protein Engine) தேவையில்லை. புற்றுநோய்க்கான புரத மூலக்கூறின் கண்டுபிடிப்பும் Protein Engine தொடர்பான கண்டுபிடிப்பும் இரு வெவ்வேறான கண்டுபிடிப்புக்களாகும்.

Protein Engine ஆனது முக்கியமாக உடலினை Atomic-Scale இல் படமெடுப்பதற்கும் வேறு வகையான நோயிகளுக்கெதிராக புரத மூலக்கூறுகளை தேவையான உடற்பாகத்தில் Delivery செய்வதற்குமே பயன்படும்.

6. உங்கள் ஆய்வுகள் பற்றிய தகவல்கள் சாதாரண மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றதா?
அதற்கு ஓரிரு வருடங்கள் செல்லுமென நினைக்கிறேன். ஏனனில், தற்பொழுது தான் நான் எனது ஆய்வுகளை High Impact Scientific Journal இற்கு முழுமையாக வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுளேன். ஒரு கண்டுபிடிப்பு உலகத்திற்கே புதிதான மற்றும் முக்கியமான கண்டுபிடிப்பாக இருக்கும் போது மாத்திரமே High Impact Scientific Journal அதனை வெளியிட கவனத்திற்கொள்ளும். இதன் படிமுறைகளைப் பின்பற்ற சில காலம் தேவைப்படும்.

அத்துடன். High Impact Scientific Journal ஒரு கண்டுபிடிப்பினை வெளிடியிட்டதால் மாத்திரமே சர்வேதச ஊடகங்கள்அதனைக் கருத்திற்கொள்ளும். பின்னர் அது சாதரண மக்கள் வரை இலகுபடுத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படும். இருந்தாலும், இதனை High Impact Scientific Journal இல் வெளியிடும் வரை இத்துறை சார்ந்த விஞ்ஞானிகளின் தொடர்புகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

7. உங்களுடைய எதிர்கால இலட்சியம் மற்றும் திட்டம் பற்றிக்கூற முடியுமா?
இறைவனின் உதவியுடன் இதுவரைக்கும் தெளிவான திட்டமிடலுடன் நகர்ந்து வந்திருக்கின்றேன் என நினைக்கிறேன். அந்த வகையில், எனது வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய முதலாவதாக Nanotechnology உடனும் Computational Chemistry உடனும் சம்பந்தப்பட்ட ஒரு துறையில் Ph.D. செய்வதன் மூலம் புற்றுநோய்க்கான மருந்தினை முழுமையாகக் கண்டுபிடிக்க வேண்டும்.

அத்துடன், இதனுடன் சேர்த்து புதிய மருந்துகளை இலகுவாகக்கண்டுபிடிக்கக்கூடிய நுட்பங்களையும் உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, எனது Protein Engine வேலைத்திட்டத்தினை முழுமைப்படுத்துவதற்காக Electronic Engineering or Biomedical Engineering துறையில் இரண்டாவது Ph.D. முடிக்க வேண்டும்.

அத்துடன், எல்லவற்றிக்கும் மேலாக நான் கண்டுபிடித்த விடயங்களை வர்த்தக மயப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் சமூகத்திற்கு பிரயோசனமளிக்கும் பல திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் எண்ணியுள்ளேன்.

அந்த வகையில், Software Development செய்யும் ஒரு நிறுவனத்தை Australia இல் வைத்திருக்கும் எனது நண்பர் ஒருவரும் நானும் சேர்ந்து என்னால் உருவாக்கப்பட்ட மென்பொருட்களை மேலும் அபிவிருத்தி செய்து வர்த்தக மயப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

மேலும் புதிய விடயங்களை உருவாக்க ஆர்வமுள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து வர்த்தக ரீதியில் இலாபம் தரக்கூடிய பல வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்றும் எண்ணியுள்ளேன்.

8. பிரதேசத்தில் பாரிய அச்சுறுத்தலாகியுள்ள தொற்றாநோய்கள் தொடர்பிலும் அதற்கான சிகிச்சை தொடர்பிலும் ஏதும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளீர்களா?
நாட்டில் சிறுநீரக செயலிழப்புக்கள் ஏற்படும் வீதம் படுவேகமடைந்துள்ளது. இதன் மூல காரணங்களில் ஒன்றான Fluoride ion எனும் இரசாயணத்தின் தாக்கம் எவ்வாறு சிறுநீரகத்தை மூலக்கூற்று அடிப்படையில் பாதிக்கின்றதென்ற ஆய்வை மேற்கொண்டுள்ளேன்.

9. இவ்வாறான வயது வித்தியாசமின்றி வரும் நோய்களுக்கு என்ன காரணம்? இதனைத்தடுக்க வழி முறைகள் என்ன?
இதற்குப்பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, எங்களுடைய உணவுப்பழக்க வழக்கம், சுற்றுச்சூழலின் அமைப்பு , புவியியல் அமைப்பு, வாழ்க்கை முறைமை, பரம்பரை அலகு என்பவற்றைக்கூறலாம்.

இதனைத்தடுக்கும் வழிகளாக, இது தொடர்பாக அதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். மேலும், மக்களுக்கு அதிகமான விழிப்புணர்வுகளும் வழங்கப்பட வேண்டும்.

10. எமது பிரதேசத்தை ஆட்டிப்படைக்கும் போதைப்பொருள் பாவனை பற்றி உங்கள் கருத்து என்ன?
இதன் பாதிப்பை நான் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை, ஊரிலுள்ள பள்ளிவாயல்கள், பாடசாலை அதிபர்கள், பொலீஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள், பெற்றோர்கள் விளையாட்டுக்கழகங்கள் போன்ற அமைப்புக்களும் தனி நபர்களும் நினைத்தால் இப்பிரச்சினையை இலகுவாகத் தீர்க்கலாம்.

11. இறுதியாக The Hotline  இணைய ஊடகம் பற்றி  உங்களுடைய பார்வை ?

என்னுடைய பார்வையில் The Hotline இணையச்செய்தித்தளமானது அரசியல் மற்றும் இயக்க ரீதியாக  பக்கச்சார்பின்றி சுதந்திரமாக இயங்கும்  ஒரு  சிறந்த  ஊடகமாகத் திகழ்கிறது. இதன் சிறப்பம்சமாக  “எதிரொலி” எனும் பிரிவின் மூலம் சமூகப்பிரச்சினைகளைத் தைரியமாக வெளிக்கொணர்வது  பாராட்டத்தக்கது.
இத்தளத்தினைச்சிறப்பாக  நிர்வகித்து வரும் இதன்  பணிப்பாளர் M.I. Lebbe Thamby  அவர்களின் ஊடகப்பயணம் சிறப்பாக அமைய வேண்டுமென எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed