Main Menu

“காலம் செய்த கோலம்” தொடர் 5 -றிஹானா றஸீம்

இந்த செய்தியைப் பகிர்க >>>

“காலம் செய்த கோலம்” தொடர் 5 -றிஹானா றஸீம்

அன்வர் அவசரமாக சென்றதைப்பார்த்தால்
“என்ன சரி பிரச்சனையா இருக்குமோ…?

“ச்சீச்சீ “அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது.

ஹாஜியார் உம்ராக்கு போனதால இவர எது சரி பேசுரதுக்கு வரச்சொல்லி இருப்பாங்களோ…?

அப்படி.. பேச போறதாக இருந்தா ஹாஜியார்ட மகன் சுலைமான் தம்பி கூடவே வந்திருப்பார்.
அவரும் வரல்லையே…

நான் எவ்வளவு கேள்வி கேட்டும் இவரும் எந்தப்பதிலும் சொல்லல்லையே…

என்ன நடந்ததிருக்கும் ஒரே குழப்பமா இருக்கு” இப்படி தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறாள் ஸாறா.

மதிய உணவையும் சமைத்து விட்டு வீட்டின் எதிரே ஓடிக்கொண்டிருக்கும் ஓடையில் குளித்து விட்டு. அவசரமாக
வீடு வந்து லுஹரையும் தொழுது முடித்து விட்டு, மதிய உணவு உண்ணாமல் கணவர் வரும் வரை காத்துக்கொண்டிருக்கிறாள்.

ஆனால், அன்வரும் வாற மாதிரி இல்லை.
“இவ்வளவு நேரம் என்ன செய்றார்..? மணியோ இப்ப நாளரையாகுது.
யார் கிட்ட நான் கேட்க முடியும்” என்று மெளன மொழியோடு பேசுகிறாள்.

தன் கணவர் வருவார் என்று காத்த வண்ணமே சற்று கண்ணை மூடிக்கொண்டாள்.

ஸாறாவை அறியாமல் ஆழ்ந்த தூக்கம் கண்ணை மூடிக்கொண்டது. திடீரென மழை பெய்யும் சத்தம் கேட்டதுமே, கண்ணை விழித்தாள். “ஓவென” மழை பெய்து கொண்டிருந்தது. தலையைத்தூக்கி கடிகாரத்தைப் பார்த்தாள் நேரமோ ஏழு மணியாகி விட்டது.

இப்படி நேரத்தைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதே
அன்வர் வீட்டுக்குள் நுழைந்தான்.

ஸாறா ஓடிப்போய்.
“என்னங்க இவ்வளவு நேரமாகிட்டு என்னாச்சோ…? ஏதாச்சோ…?
என்று பயந்து போய் இருந்தேன். இப்பதான் உங்கள பார்த்ததும்
பாதி உயிர் வந்த மாதிரி இருக்கு” என்று ஆதங்கத்தை கூறினாள்.

சற்றென்று வாசலைப்பார்த்தாள் அங்கே சுலைமான் நின்று கொண்டிருந்தான்.

அட உங்கள நான் கவனிக்காம இவரோட பேசிட்டு இருக்கன். சுலைமானைப்பார்த்து
இப்ப தான் எனக்கு திருப்தியா இருக்கு.
இவர் பொலிஸ் போவதாக இருந்தால், உங்களுடைய வேலைக்குத்தான் போவார்

“இப்ப உங்கள கண்டதால உறுதியாகிட்டு உங்க வேலையா போயிருப்பாருன்னு.

இவரும் எதுவுமே சொல்லாம போனதால எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல.
இவரும் சில நேரம் இப்படித்தான் எதுவுமே வாய திறந்து சொல்லமாட்டார்.
எல்லாமே முடிஞ்சதுக்கு பிறகு தான் சொல்வார்.
இவருக்குத்தெரியுமா…? நான் இங்க எப்படி தவிச்சிருப்பேன்னு.
அதெல்லாம் இவருக்கு எங்க புரிய போகுது” என்று அன்பு கலந்த கோபத்தோடு சுலைமானிடம் கூறினாள்.

சுலைமானும் இவள் கூறியதைக்கேட்டு விட்டு எப்படி ஸாறாகிட்ட நடந்ததெல்லாம் சொல்றது?

அன்வரும் பாவம் எதுவுமே பேசுற நிலைமையில இல்ல என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே. ஸாறா சொல்கிறாள்.
“நான் ஒரு மடச்சி இவ்வளவு நேரம் உங்கள இருக்கச் சொல்லாம நான் புலம்பிட்டு இருக்கன்” என்று பாயை விரித்து உட்கார்ந்து கொள்ளுமாறு கூறினாள்.

“பரவாயில்லை தாத்தா
இதுல என்ன இருக்கு நீங்க எப்படி தனிமையிலே தவிச்சிருப்பீங்கனு நான் இப்ப தெரிஞ்சி கொண்டன்” ஸாறா சிரித்துக்கொண்டு
“என்ன செய்ய தம்பி இவரும் பொலிஸிக்கு போறன்டு சொன்னது மட்டும் தான்
வேற எதுவுமே சொல்லல.
ஸானும் வீட்டில இல்ல.
அதனால எனக்கு ஒன்றுமே புரியல்ல”.  இப்படி இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், அன்வரின் முகமோ வாடி, சுருண்டு, கவலை நிறைந்த முகத்தோடு அப்படியே ஏதும் பேசாமல் திகைத்து நின்றான்.

சுலைமான் ஸாறாவிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாரிங்களா…? என்று கேட்க.

ஸாறாவும் தண்ணீர் எடுப்பதற்கு சமையலறைக்குள் சென்றாள்.
ஸாறா போனதைப்பார்த்து விட்டு. சுலைமான், அன்வரின் அருகில் வந்து “நாநா நீங்களே இப்படி இருந்தா எப்படி…?
கொஞ்சம் தெம்பா இருக்கலாமே..?

அன்வர் சுலைமானைப்பார்த்து என்னால எப்படி இருக்க முடியும். பொலிஸ்ல நடந்த விஷயம் என்னன்டு தெரியும் தானே…
நான் எப்படி ஸாறாகிட்ட சொல்லப்போறன்.
என்னால இது ஏற்றுக்கொள்ளவே முடியல்ல.
நீங்களே பார்த்தீங்க தானே எவ்வளவு கேள்வி கேட்டாள்.
என்னால எதுக்குமே பதில் கொடுக்க முடியயல்லையே… என்று “ஓ வென “அழத்தொடங்கினான்…..”

(அன்வர் அழுவதற்கு காரணம் என்ன…? பொலிஸில் நடந்தவை என்னவாக இருக்கும்…)

தொடரும் …..

றிஹானா றஸீம்
பஹலகம
கெகிறாவ

இந்த செய்தியைப் பகிர்க >>>


Comments are Closed