Main Menu

அந்நூர் தே.பா

இன முரண்பாடுகள் விடயத்தில் முஸ்லிம்களின் பொறுப்பு

ஏ.எல்.நிப்றாஸ் திகிலும் அச்சமும் நிறைந்தவொரு இரவுப்பொழுதில் மனைவி மக்களுடன் ஆபத்தான காட்டுப்பகுதியை கவனமாகக்கடந்து செல்கின்ற ஒரு பொறுப்புமிக்க குடும்பஸ்தரைப்போல இலங்கை முஸ்லிம்கள் காலத்தைக் கடத்த வேண்டியிருக்கின்றது. பல விடயங்களைப் பொறுமையுடனும் வேறு சில விடயங்களை புத்திசாலித்தனமாகவும் கையாள வேண்டிய காலப்பகுதியாக, இன்றைய காலத்தைக் குறிப்பிட்டுக்கூற முடியும்.

நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான உபாயப் புரட்சியொன்று கடந்த இரு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் முன்பிருந்த ஆட்சியாளரான ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் நின்றனர். கடைசியில் ரணில் மீண்டும் பிரதமராகி இருக்கின்றார்.

இந்நிலையில், அடுத்த வருடம் இரு தேர்தல்கள் நடைபெறப்போகின்றன. எனவே, இனவாத காரணத்திற்காக மட்டுமன்றி அரசியலுக்காகவும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சீண்டி விடப்பட்டுக் கொண்டே இருக்கப்போகின்றார்கள். அளுத்கம கலவரத்தில் தொடங்கி அம்பாறையில் தொட்டு திகண வரை வியாபித்திருந்த இன வன்முறைகள் முடிவுக்கு வந்தததென்று நினைத்திருந்தோம். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தக்கலாசாரம் மாறப்போவதில்லை என்பதையே, கடந்த சில நாட்களாக மாவனல்லை பிரதேசத்தைச் சூழவுள்ள பகுதிகளில் இடம்பெற்ற சிலை உடைப்பு சம்பவங்களும் உணர்த்தி நிற்கின்றன.

மறைமுக காரணம் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக நடக்கின்ற சம்பவங்கள் திட்டமிடப்பட்டவை என்றாலும் கூட சில சம்பவங்களுக்கு முஸ்லிம்களின் நடவடிக்கைகளும் மறைமுகக் காரணமாகியுள்ளதை மறுக்க முடியாது. அதாவது இனவாதிகள் சில போக்குகளை காரணமாக்கிக் கொள்கின்றனர். முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை சிங்கள அரசியல்வாதிகளும் கடும்போக்கு சக்திகளும் தூண்டி விடுகின்றன என்பது உலகறிந்த இரகசியமென்றாலும் பல்லினங்கள் வாழும் நாடொன்றில் முஸ்லிம் சமூகம் தமது நடவடிக்கைகளை மீள் மறுபரிசீலனை செய்யாமையும், நிலைமைகளை மேலும் சிக்கலாக்குவதாக சில நேரங்களில் தோன்றுவதுண்டு.

தற்போது இலங்கையில் ஏற்படுகின்ற இன முறுகல்களுக்கு அல்லது சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் சிண்டுமுடியப்படுவதற்கு பல தரப்பினர் காரணமாகின்றனர். உலகளாவிய முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரல்களுடன் செயற்படும் மேற்கத்தேய சக்திகள், இந்திய துணைக்கண்டத்தை மையமாகக் கொண்டு செயற்படுவதுடன், இலங்கையிலும் ஊடுருவியிருக்கின்ற கடும்போக்கு அரசியல் சக்தி, நாட்டில் வெளிப்படையாகவே இயங்குகின்ற பொதுபலசேனா, ராவண பலய போன்ற பல கடும்போக்கு அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளுக்கு காரணமாகியிருக்கின்றன.

உள்நாட்டு அரசியல் சக்திகள் தமது அதிகாரப்பசிக்காக இனங்களுக்கிடையிலான நல்லுறவை இரையாக்கி வருகின்றன அல்லது முஸ்லிம் - சிங்கள இனங்களுக்கிடையிலான இனவாதத்தீயில் குளிர்காய்கின்றன. இனவாத அமைப்புக்களும் கடும்போக்காளர்களும் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதத்தை முன்னெடுத்தார்கள் என்று பொதுவாக வைத்துக் கொண்டாலும், சாதாரண மற்றும் அடிமட்ட சிங்கள மக்களிடையே, முஸ்லிம்களின் சில போக்குகளை எடுத்துக் காண்பித்தே முஸ்லிம்கள் அல்லது இஸ்லாம் பற்றிய அச்சமென்பது சிருஷ்டிக்கப்பட்டு, உருப்பெருப்பிக்கப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.

முஸ்லிம்களின் வியாபார வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்பவை சிங்கள மக்களிடையே ஒரு ஆபத்தான போக்காக திரிவுபடுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்குப் பாதகமான விதத்தில் செயற்படுகின்றார்கள் அல்லது பௌத்தத்தை இஸ்லாம் மேவுகின்றது போன்ற கருத்தியல்களும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு முஸ்லிம் ஆயுத இயக்கங்கள் பற்றிய புனைகதைகளும் உள்ளன.

ஆனால், அதற்குப் புறம்பாக, முஸ்லிம்களின் அரசியல் பாணியும் மதத்தைக் கடைப்பிடிக்கும் விடயத்தில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களும் சாதாரண சிங்கள மக்களிடையே முஸ்லிம்கள் தொடர்பில் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது என்ற விடயம் சிங்கள மக்கள் முக்கியமான இடங்களில் அளிக்கும் வாக்குமூலங்களிலிருந்து அறிய முடிகின்றது.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அதிகாரத்திலிருப்பதும் சில வேளைகளில் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதும் கடும்போக்கு சிங்கள மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஜீரணிக்க முடியாத நிதர்சனமாக இருக்கின்றது. இப்பின்னணியிலேயே அண்மைக்காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் நகர்வுகளை நோக்க வேண்டியிருக்கின்றது.

அரசியல் காரணி பிரதமராகப்பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியிறக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவிக்கு நியமித்தும், பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் முயற்சியை மேற்கொண்டும் இலங்கையில் தந்திரோபாய அடிப்படையிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனங்களெல்லாம், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து தோல்வியில் முடிவடைந்ததை நாமறிவோம்.

இந்த வேளையில், முஸ்லிம் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மஹிந்த தரப்பும் வேண்டிநின்றது. இரு முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளித்திருந்தால் மஹிந்த தனக்கு கிடைத்த பிரதமர் பதவியைத்தக்க வைத்துக் கொண்டிருக்க இயலுமாகியிருக்கலாமென்பதுடன், ஜனாதிபதிக்கு விரும்பிய ஆட்சியும் கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், இரு முஸ்லிம் கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமே நின்றதாலும் அது கைகூடவில்லை. குறிப்பிட்டளவான முஸ்லிம்கள் மஹிந்த ராஜக்ஷவை சரி கண்ட போதிலும் கூட, பெரும்பாலான முஸ்லிம்களும் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ஜனநாயகம் என்ற கோதாவிலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மஹிந்தவை ஆதரிக்காமல் விட்டமையானது, நாட்டிலுள்ள கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம்களும் ‘மஹிந்தவுக்கு எதிரானவர்கள்’ என்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியோ அதன் தலைவர்களோ முஸ்லிம்கள் விடயத்தில் ‘சுற்றவாளிகள்’ என்று குறிப்பிடுவதற்கில்லை. இந்நிலையில், மென் இனவாதக்கோட்பாடுடைய சிங்கள மக்கள் ஐ.தே.க. மற்றும் ஜனாதிபதி தரப்புக்கும் கடும்போக்கு கொள்கையுடைய அமைப்புக்களும் மக்களும் மஹிந்த தரப்புக்கும் தமது மானசீகமான ஆதரவை வழங்குகின்றனர் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். இங்கு தான் முஸ்லிம் கட்சிகள் எடுத்த நிலைப்பாடு கவனிப்பைப் பெறுகின்றது.

அதாவது, அண்மைய ஆட்சித்தளம்பல் காலத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எடுத்த நிலைப்பாட்டுக்கு பல நியாயமான காரணங்கள் இருந்தன என்பது வேறுவி டயம். மாறாக, மஹிந்தவை ஆதரித்திருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கான இந்த ஆதரவை கடும்போக்கு சக்திகள் குறிப்பாக மஹிந்த தரப்பு வேறு கோணத்தில் பார்க்கின்றதென்பதையே கவனிக்க வேண்டுகின்றேன்.

புதிய அணி முஸ்லிம் கட்சிகள் தம்முடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி விட்டு கடைசி நேரத்தில் ஏமாற்றி விட்டதாக மஹிந்த தரப்பினர் அங்கலாய்த்துள்ளனர். அத்துடன், றவூப் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோரை இனியும் நம்பிருக்க முடியாதென்றும் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளனர். எனவே, இந்த மன நிலையோடு இவ்விரு கட்சிகளுக்கும் சம பலமுள்ளதும் தமக்கு ஆதரவானதுமான (ஏற்கனவே இல்லாத) ஒரு மூன்றாவது முஸ்லிம் அரசியல் அணியை உருவாக்குவது தொடர்பில் மஹிந்த தரப்பு கவனஞ்செலுத்தியிருக்கின்றது. அவ்வாறு நடந்தால் முஸ்லிம் அரசியலில் பல மாறுதல்கள் உருவாகும்.

அதுவொரு புறமிருக்க, ரணில் விக்கிரமசிங்கவுக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்தமையால் மஹிந்த ஆதரவு தரப்பு முஸ்லிம் கட்சிகளில் கடுப்பாக இருப்பதற்கு மேலதிகமாக கடும்போக்கு மக்களிடையே முஸ்லிம்கள் பற்றிய ஒரு குரோத மனப்பான்மையையும் உசுப்பிவிடப்பட்டிருப்பதாக பரவலாகவே பேசப்படுகின்றது. எனவே, முஸ்லிம்கள் மீது இனவாதிகளும் கடும்போக்கு சக்திகளும் நெருக்குவாரங்களைப் பிரயோகிப்பதற்கான உள்ளுறைந்த ஆபத்து காணப்படுகின்றது.

முஸ்லிம்கள் பக்கத்தில், திகணவில் சிங்களவரான லொறிச்சாரதியைத் தாக்கியது போல ஒரு சிறு குழுவினரோ அன்றேல் தனி நபரோ செய்யும் செய்யும் முட்டாள்தனமான காரியங்கள் பெருப்பிக்கப்பட்டு, அது முஸ்லிம்கள் மீதான நாடு தழுவிய இனச்சம்ஹாரமாக விருத்தியடைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

தேர்தலை முன்னிட்டு அதே நேரத்தில், பிறக்கப்போகின்ற புதுவருடம் தேர்தல்களின் வருடமாக இருக்கப் போகின்றது. எனவே, இப்போதிலிருந்தே தேர்தல்கால அரசியலை பெருந்தேசியக்கட்சிகள் ஆரம்பிக்கவுள்ளன. இதனடிப்படையில், தங்களுடைய பிரசாரங்களுக்காகவும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்காகவும் கடும்போக்கு சக்திகளின் ஆதரவைப்பெற்ற மஹிந்த தரப்போ அல்லது அடிவருடி அரசியல்வாதிகளோ சிறிய சிறிய சம்பவங்களூடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை மேற்கொள்ளலாம்.

அரசியலுக்காக இவர்கள் எதையும் செய்வார்கள் என்ற படியால்… மென் இனவாதிகளின் ஆதரவைப்பெற்ற ஆளுந்தரப்பு எதனையுமே செய்யாமல் அப்பாவித்தனமாக நடந்து கொள்ளும் என்று யாரும் கண்மூடித்தனமாக நம்பத்தேவையில்லை. எனவே, அரசியல் காரணங்களுக்காக தோற்றுவிக்கப்படும் இன முரண்பாடுகள் விடயத்தில் யாரும் இனவுறவை வலுப்படுத்த நினைக்கமாட்டார்கள்.

ஆக, அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்கள் இலக்காகக் கொண்டு இன வன்முறைகள் தூண்டிவிடப்படக்கூடிய சாத்தியமுள்ளது. எனவே தான் முஸ்லிம் சமூகம் மிக அவதானத்துடன் நடந்து கொள்வதுடன், இன சௌஜன்யம் என்ற விடயத்தில் ஏனைய இனக்குழுமங்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் பொறுப்பிருக்கின்றது.

எல்லாவற்றுக்கும் ‘அவர்கள் தான் பொறுப்பு’ என்று விரல் நீட்டிக்கொண்டு, ‘நாம் எப்படியும் செயற்படலாம்’ என்று எந்தவொரு முஸ்லிமும் கருதினால், அது இலங்கையில் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் ஆபத்தாகவே வந்து முடியும். அதற்காக அடிமைகளைப்போல எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அடங்கிப்போக வேண்டுமென்று அர்த்தமில்லை. மாறாக, விவேகமாக நடந்து கொள்ள வேண்டும்.

இக்கோணத்திலேயே கேகாலை மாவட்டத்தின் மாவனல்லைப் பிரதேசத்தைச்சூழவுள்ள கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கடந்த ஒருவார காலமாக இடம்பெற்று வருகின்ற அசம்பாவிதங்களை நோக்க வேண்டியிருக்கின்றது.

மாவனல்லை சம்பவம் மாவனல்லையை அண்மித்த பல சிங்களப் பிரதேசங்களிலுள்ள அளவில் சிறிய புத்தர் சிலைகள் பல கடந்த சில தினங்களாக கட்டங்கட்டமாக தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. கடைசியாக புத்தர்சிலை உடைக்கப்பட்ட பின்னர் அச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் சிலைக்குப்பக்கத்தில் வைத்து சிங்களவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரொருவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஆறேழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச்சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான நபர் எனச்சந்தேகிக்கப்படுவோர் தலைமறைவாகியுள்ளதாக அறிய முடிகின்றது. இதற்கிடையில் இது குறித்து பலவிதமான தகவல்கள் உலா வருகின்றன. ஆன போதும், சிங்கள சமூகம் இவ்விடத்தில் பொறுமையைக் கடைப்பிடித்தமையையும், முரண்பாடுகள் வலுவடையாமல் இது தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகளையும் நன்றியுணர்வுடன் பாராட்ட வேண்டும்.

ஆரம்பத்தில், அரசியல் காரணங்களுக்காகவே சிலைகள் உடைக்கப்படுகின்றன என்று பிரதேசத்திலுள்ள சிங்களவர்களும் முஸ்லிம்களும் கருதினர். ஆனால், அதற்குப்பின்னால் வேறு காரணங்கள் இருப்பதாகவும் இச்சம்பவத்துடன் சமூக சிந்தனையற்ற முஸ்லிம் இளைஞர்கள் ஒரு சிலர் தொடர்புபட்டிருப்பதாகவும் எல்லா மட்டங்களிலும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இவ்வாறான கதைகள் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லையென்பது கவனிப்பிற்குரியது. எவ்வாறாயினும் சிலையுடைப்புக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்குமிடையிலான தொடர்பிருப்பதான இக்கதைகள் ஆச்சரியமானவையும் அதிர்ச்சிகரமானவையாகவும் (உறுதிப்படுத்த முன்னர்) பொது வெளியில் எழுத முடியாதவையாகவும் இருக்கின்றன. இவையெல்லாம் பொய்யாகவும், கட்டுக்கதைகளாகவும் இருக்க வேண்டுமென்றே நாட்டிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் வேண்டுகின்றனர். ஆனால், ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்ற அச்சமே இன்று பலருக்கும் ஏற்பட்டிருப்பதைக்காண முடிகின்றது.

செய்ய வேண்டியது முஸ்லிம்கள் ஒரே இறைவன் என்ற கோட்பாட்டை கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும் இன்று முஸ்லிம்களிடையே பல மார்க்கப்பிரிவுகள் தோன்றியுள்ளதுடன், இது மக்களை மார்க்க ரீதியாக துண்டாக்கி, சில வேளைகளில் முரண்படவும் வைத்திருக்கின்றன. அதைத்தவிர, அரபு நாட்டில் முஸ்லிம்கள் வாழ்வதற்கும் பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பல்லின நாடொன்றில் முஸ்லிம்கள் வாழ்வதற்குமான வேறுபாடு தற்கால முஸ்லிம்களுக்கு மேற்குறிப்பிட்ட எந்த அமைப்புக்களாலும் காத்திரமாகப் போதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

சிங்கள இனவாதிகளுக்கு பொறுமையையும் இன வெறுப்பின்மையையும் சகிப்புத்தன்மையையும் போதிப்பதற்கு முன்னதாக, குறிப்பிட்ட சில முஸ்லிம்கள் அவற்றை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பொது இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, பொது ஒழுக்கம் என்ன? மற்ற மதத்தவருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்ற விடயத்தை, தெரியாத முஸ்லிம்களுக்கு சொல்லிக்கொடுப்பது காலத்தின் தேவை எனலாம். பௌத்த இனவாதத்திற்கு அடங்கிப்போதல், அடிமைப்படுதல், குட்டக்குட்டக்குணிதல் என்று இதனை யாரும் அர்த்தப்படுத்தத் தேவையில்லை.

மிக முக்கியமாக, இலங்கையில் தீவிரவாதம் அல்லது வெளிநாட்டு இஸ்லாமிய பெயர்தாங்கி ஆயுதக்குழுக்களில் ஊடுருவல் இருப்பதாக நெடுங்காலமாகவே சிங்கள கடும்போக்காளர்கள் கூறி வருகின்றனர். அந்த கருத்துநிலைக்கு வலுச்சேர்க்கும் சம்பவங்கள் இடம்பெறக்கூடாது. ஆனால் அதற்காக தீவிர மதப்பற்றுதல் என்பது விகாரமாக உருவெடுப்பதற்கு, நிம்மதியாக வாழ விருமம்புகின்ற எந்தவொரு முஸ்லிமும் இடமளிக்கத் தேவையில்லை.

பள்ளிவாசல்களை உடைப்பது தவறென்றால், ஏனைய சமூகத்தினரின் வழிபாட்டிடத்தை உடைப்பதும் தவறாகும் என்பதில் இரு நிலைப்பாடுகள் இருக்க முடியாது. அதை யார் செய்தாலும் தவறு தவறு தான். எனவே, ஒரு வேளை, இவ்வாறான பேர்வழிகள் முஸ்லிம்களுக்குள் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால், அவ்வாறு யாரும் இருந்தால், ‘நாங்கள் சிங்கள இனவாதத்தை எதிர்க்கின்றோம். ஆனால், இவ்வாறான செயற்பாடுகளை ஆதரிக்கவில்லை’ என்ற செய்தியைச்சொல்லும் விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

திகண கலவரம் பின்னர் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்றாலும் கூட, மதுபோதையில் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் ஒரு சிறிய விடயத்திற்காக சிங்கள இளைஞர் ஒருவரைத் தாக்கியமையே உடனடிக்காரணமாக அமைந்ததென்பதை மறந்து விடக்கூடாது.

எனவே, ஒரு சிறிய தவறு முஸ்லிம்கள் பக்கத்திலிருந்து நடந்தால்… அதைப்போல் பன்மடங்கு பெரிய காரியங்களை இனவாதிகள் செய்து விட்டு, முஸ்லிம்கள் மீது பழிபோடுவார்கள் என்பதையும், அது நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும் என்பதை கனவிலும் மறந்து விடக்கூடாது. ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 30.12.2018)