Main Menu

அரசியல்

நம்பிக்கையளிக்கும் கல்குடா

- Dr MB Halith இந்த வருடத்தின் சங்கைமிகு ரமழான் எம்மை விட்டுப்பிரிந்து சென்றிருக்கின்றது. ஆரவாரங்கள், கேளிக்கைகள், அளவுக்கு மிஞ்சிய செலவுகள் என்று நாம் மூழ்கி விடாமல், என்றுமில்லாதவாறு ஆன்மீக அடக்கத்தையும் கற்றுத்தந்தது.

அது போல, கஷ்டப்படுபவர்கள் கவலைகள், கண்ணீரைத்துடைத்து இன்புறும் மனிதர்களை ஊர் ஊராக எழுச்சியடையச்செய்தது.

கோவிட்-19 இன் பாதிப்பினால் ஏழைகள் முதல் செல்வந்தர்கள் வரை பாதிக்கப்பட்டிருந்தாலும், சமூகத்தின் ஒரு சாரார் அன்றாட உணவுக்கே அல்லலுறும் அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய, இடர்கால நிலையொன்று தோன்றியது.

துன்பங்களும், துயரங்களும் மனிதர்களை புடம் போடும் என்ற உண்மைக்கமைவாக தனது துன்பத்தை விட தனது சகோதரனின் துன்பம் கடினமானது என்ற நற்சிந்தனையுடைய எமது உறவுகளின் எழுச்சியை கடந்த இரண்டு மாதங்களில் கண்கூடாகக் காண்கிறோம். அந்த எழுச்சியின் வெற்றியாய் பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் தமது கஷ்டத்தினையும் மனப்பாரத்தையும் ஓரளவு இறக்கி வைக்க முடிந்தமை ஒரு வரலாற்று வெற்றியே.

கல்குடாவில் காலாகாலமாக இருந்து வரும் அமைப்பு ரீதியான செயற்பாட்டுத்தொய்வுகள் இம்முறை குறிப்பிட்டளவு களையப்பட்டு, பாரிய உதவிகளை சமூக மட்டத்தில் செய்து முடிக்க ஏதுவாய் மாறியிருக்கின்றது இந்த கொவிட் -19 காலம்.

கோவிட் -19 இன் முதலாவது முடக்கம் 23/3/2020 திகதி முடிவடைந்த நாளே பல சவால்களையும் தகர்த்து கல்குடாவின் முதலாவது உலருணவுப்பொதிகள் விநியோகம் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து மிகவும் அவதானமாகத் தெரிவு செய்யப்பட்ட 150 பயனாளிகளுக்கு முதலாம் கட்டமாக 3 இலட்சம் பெறுமதியான உதவிகள் FRDK அமைப்பின் அங்கத்தவர்களின் நிதிப்பங்களிப்பில் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கல்குடா ஜம்மியதுல் உலமாவின் முன்னெடுப்பில் ஒரு பெரும் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தி முடிக்கப்பட்டது. 20 இலட்சங்கள் இதற்காகத் திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து, FRDK இன் வேண்டுகோளோடு ஸக்காத் நிதியம் இணைந்து ஒரு பாரிய திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஸக்காத் நிதியத்தின் முன்னெடுப்பினால் கல்குடா ஜம்இய்யதுல் உலமா, ஓட்டமாவடி, வாழைச்சேனை வர்த்தகர் சங்கங்கள், பிரதான 4 ஜும்ஆப் பள்ளிவாயல்கள் இணைந்து, பலதரப்பட்டவர்களின் உதவியோடு கல்குடா வரலாற்றில் மிகப்பெரும் உலருணவு வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் போது, 58 இலட்சங்களை அரசியல்வாதிகள், தனவந்தர்கள் வழங்கியிருந்தமையும் அதன் மூலம் 4200 குடும்பங்கள் நன்மையாடைந்தன.

மாவடிச்சேனை ஜிப்ரி சனசமூக நிலையத்தின் திட்டமிடல, முயற்சியினால் மாவடிச்சேனைப் பிரதேசத்தை முன்னிறுத்திய ஒரு பெரிய திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, 6.6 இலட்ச ரூபாயில் உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

அஸ்ஸபர் சமூக நிறுவனத்தினால் 4 கட்டங்களாக முன்னெடுக்கக்கப்பட்ட உலருணவுப்பொதிகள் வழங்கும் செயற்பாடுகள் மீராவோடைப் பிராந்தியத்தை முன்னிறுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

கோவிட் தடுப்புச்செயலணியின் பணிகளும் உதவிகளும் குறிப்பிடத்தக்களவில் இருந்தது. புனானை தனிமைப்படுத்தல் நிலையங்களில் அவதியுற்ற எமது சகோதரர்களின் இன்னல் தீர்ப்பதில் இவர்களின் பங்கு சிறப்பானாதாகக் காணப்பட்டது.

ஜனாசா நலன்புரிச்சங்கம் (KPW) தாம் மேற்கொள்ளும் ஜனசா சார்பான பல இன்னோரன்ன செயற்பாடுகளைத் தாண்டி பொதுச்சேவைகளில் விருப்புக்கொண்டு இக்காலத்தில் உலருணவுப்பொதிகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

FRDK 2ஆம் , 3 ஆம் கட்ட நிவாரணங்களும் நோன்பு காலத்தில் குறிப்பிட்ட குழுக்களைத் தெரிவு செய்து வழங்கியிருந்தது. அது போல, எமது பிரதேச வைத்தியர்களின் மூலம் வழங்கப்பட்ட தொலைபேசி வாயிலான வைத்திய சேவையும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

Helping Wing அமைப்பினாலும் உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. அதே போல விளையாட்டுக்கழகங்கள், இளைஞர் அமைப்புகள், மார்க்க அமைப்புகள், ஆட்டோ சங்கம் போன்ற பல அமைப்புகள் முன்னின்று பல நிவாரணங்களை வழங்கியிருந்தன.

தனிப்பட்ட வியாபார நிறுவனங்கள், தனிப்பட்ட தனவந்தர்கள், பெயர் குறிப்பிடாத சமூக சேவை நிறுவனங்கள், அரசியல்வாதிகள், NGO க்கள் எனப்பலரும் இவ்வாறான செயற்பாடுகளில் தனிப்பட்ட முறையிலும் ஈடுபாடு காட்டி வழங்கியிருந்தையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அனைத்து விடயங்களிலும் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்தி சமூகத்தொண்டாற்றுகின்ற Al islah, Helping Wing, Helping Mind போன்ற அமைப்புகளின் செயற்பாடுகள் மெச்சத்தக்கவை. எதிர்காலத்தின் கல்குடா வேண்டி நிற்கின்ற ஒரு செயற்பாட்டுச்சக்தி அவர்களிடம் இருக்கின்றது. அத்தோடு, தனிப்பட்ட தன்னார்வலர்களின் செயற்பாடுகளும் பாராட்டப்பட வேண்டியதே.

Help Dress அமைப்பானது, பெருநாளை ஏழைகள் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான செயற்பாடாக ஆடைகள் வழங்குதலை முன்னெடுத்து வெற்றியடைந்தது.

இவ்வாறு கல்குடாவின் வரலாற்றில் அதிகப்படியான உதவிகளும், செயற்பாடுகளும் நடைபெறுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, அமைப்புக்களின் செயற்பாடுகள் மனதில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான அமைப்புகளுக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் இறைவன் அருள்புரிவானாக.

இவ்வாறான அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு ஆணிவேர் எமது பிரதேச தனவந்தர்களாகும். அவர்களின் கல்வி, ஆயுள், செல்வத்தில் செழிப்பை ஏற்படுத்த இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அத்தோடு, இவ்வாறான செயற்பாடுகளின் போது மறக்க முடியாத உதவிகள். கள உத்தியோகத்தர்களின் பங்களிப்புகளாகும். முக்கியமாக கிராம சேவகர்களின் பணி பாரட்டத்தக்கது. அதே போல, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றைய அரச அலுவலர்களின் உதவிகளும் மெச்சப்பட்டக்கூடியது.

அமைப்புகளும், இயக்கங்களும் விமர்சனங்களைத்தாண்டி எமது பிரதேசத்தின் கல்வி, கலாசார, சுகாதார, உட்கட்டமைப்பு, வாழ்வாதார வளர்ச்சியில் தொடர்ச்சியாகவும் திட்டமிடலுடனும் இயங்கி எமது கல்குடா பிரதேசத்தை முன்மாதிரியான ஒரு பிரதேசமாகக் கொண்டு வர தொடர்ந்து ஓய்வின்றிப்பயணிக்க வேண்டுகிறேன்.

செல்வத்தால் வளர்வோம், கல்வியால் உயர்வோம். இதனால் மிளிரட்டும் கல்குடா.

உங்கள் சகோதரன் Dr MB Halith