Main Menu

சர்வதேசம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கும் இலங்கை முஸ்லிம்களும்

இப்னு அஸாத் உலக முஸ்லிம் வரலாற்றில் நீதித்துறையில் கரும்புள்ளி பதித்த ஒரு நாளே 09.11.2019 பாபர் மசூதி இடிப்பு வழக்குத்தீர்ப்பாகும். அதாவது, 500 வருடங்கள் பழமையான இந்தியா முஸ்லிம்களின் பூர்வீக மஸ்ஜித் அமைந்துள்ள பூமியை கோவில் பூமியெனத் தீர்ப்பளித்துள்ளமையாகும். இத்தீர்ப்பானது, முஸ்லிம்களின் கலை, கலாசார அடையாளத்திற்கு கிடைத்த பாரிய தோல்வியாகும்.

பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்து விட்டு, அந்த இடத்தில் கோவிலைக்கட்டினார் என்றே இந்திய இந்துக்கள் வாதிடுகின்றனர். இந்த வாதத்தில் உண்மையுள்ளதா? என்றால், அதிலும் உண்மையில்லை.

அப்பள்ளிவாசலின் வரலாறு இது தான். சரயூ நதிக்கரையின் வடகிழக்கில், முகடு போன்ற பகுதியான ராம்கோட்டில் தான் பாபர் மசூதி அமைந்திருக்கிறது. ஆஃப்கானிய முறை வடிவங்களான இந்த மசூதிகளின் வரிசையில் தான் அயோத்தியின் பாபர் மசூதியும் இடம்பெறுகிறது. மூன்று சதுர வடிவிலான கட்டடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒவ்வொரு சதுரத்தின் மேலும் ஒரு குவிமாடம் (Dome) எழுப்பப்பட்டிருக்கும். முக்கிய நுழைவு வளைவின் கூரையில் (Chhajja) இருக்கும் எட்டு பத்திகளைக் கொண்ட பெர்சிய எழுத்துருக்கள் தான் பாபருக்கு அந்த மசூதியை உரிமைக்குரியவாக்குகின்றன.. எழுத்துரு ஆய்வாளர் மௌலவி அஷ்ரப் ஹுசைன் இதனை மொழிபெயர்த்துள்ளார்.

வரி 1: நலம் பயக்கும் கருணையுள்ளம் கொண்ட அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின் பெயரால்.

வரி 2: தனக்கென எதையும் உரிமை கொள்ளாத விவேகன், பெரியவனின் பெயரால்... அவரது புகழாலும் அருளாலும் நிரம்பப்பெற்ற உலகின் அதி சிறந்தவரான முஹமது நபியின் பெயரால்... இந்த உலகம் செழிக்கத்தொடங்கிய காலத்திலிருந்து நாடோடித்துறவியான பாபரின் புகழ் கொண்டாடப்படுகிறது.

வரி 3: பேரரசரின் (பாபர்) ஆளுமை வானம் வசப்பட்ட ஏழு காலநிலைகளின் அளவுக்கு உயர்ந்தது. அவரது அவையின் மிர்-பாக்கி, ஆலோசகராகவும் இப்பகுதியின் இராஜாங்க நிர்வாகியாகவும் இருந்தார். மிர்-பாக்கி, கோட்டையை மீட்டுருவாக்கம் செய்து அங்கே மசூதியையும் எழுப்பினார். (kaz-in masjid va hisar hast-bani)

வரி 4: இறைவா! அவர் (பாபர்) தனது வளமும் வாழ்வும் இ ராஜாங்கமும் கிரீடமும் சூழ இந்த உலகில் நீடுழி வாழட்டும்.

இது எழுப்பப்பட்ட புனித காலம் 935/1528-29. அல்லாஹின் பெயராலும் நபியின் அருளாலும் அரசரின் அருளாலும் இது முடிக்கப்பட்டது. இதற்கு அல்லாஹின் திருவொளியே சாட்சி. இதை எழுதியவர் மாண்புமிகு ஃபத்துல்லாஹ் மொஹமத் கோரி.

மேற்குறிப்பிட்ட வரிகளில் சுருக்கமாக நாம் எடுகக்கூடிய முடிவு அதாவது, பாபர் பேரரசரின் காலத்தில் 1528ம் ஆண்டு அயோத்தி பகுதியின் ஆலோசகரும் நிர்வாக அதிகாரியுமான மிர்-பாக்கி குறித்த பள்ளிவாசலை புதுப்பித்துக் கட்டியுள்ளார்.

எனவே, இங்கு ஏற்கனவே ஓர் பள்ளிவாசல் (கட்டடம்) இருந்துள்ளமை உறுதியாகிறது. அக்கட்டடம் ஓர் பள்ளிவாசலா? அல்லது ராமர் கோவிலா? என ஆராய்ந்தால் அதுவும் ஓர் பள்ளிவாசல் என்பது உறுதியாகிறது. ஏனெனில், ஓர் கோவிலை இடித்துக் கட்டியிருந்தால் அதனை மீளுருவாக்கமென குறிப்பிட முடியாது.

பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்து விட்டு, அந்த இடத்தில் கோவிலைக்கட்டினார் என்றே கூறப்படுகிறது. இந்த வாதத்தில் உண்மையுள்ளதா? என்றால், அதிலும் உண்மையில்லை. இந்துக்களின் வாதப்படியும் அங்கு ஏற்கனவே ஓர் கட்டடம் இருந்துள்ளது. ஆனால், அது இராமர் கோவிலல்ல.

1524ம் ஆண்டு டில்லியை ஆட்சி செய்த இப்ராஹிம் லோடி என்பவரால் அயோத்தி முஸ்லிம்கள் தொழுவதற்காக ஓர் பள்ளிவாசலை அமைக்கிறார். இப்பள்ளிவாசல் கட்டட வேலை முடிவடைய முன்னர் 1526ம் ஆண்டு பாபர் மன்னருக்கும் இப்ராஹிம் லோடி ஆகிய இருவருக்குமிடையில் போர் நடைபெற்று, இப்ராஹிம் லோடி தோல்வியடைகிறார். இதனால் குறித்த பள்ளிவாசல் கட்டும் பணியும் தடைபடுகிறது. பின்னர், 1528 ஆண்டு தற்போதைய உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாபர் மஸ்ஜித் உள்ள பகுதியில் இடை நடுவில் கைவிடப்பட்ட கட்டடம் பற்றி பாபர் பேரரசரின் தளபதி மிர்-பாக்கி விசாரிக்கிறார்.

அப்பிரதேச பல்வேறு இன மக்களும் இது இப்ராஹிம் லோடி அவர்களால் அடிக்கல் நடப்பட்ட பள்ளிவாசல் என்றும், தங்களிடையே இடம்பெற்ற போரில் அவர் இறந்தமையால் குறித்த பள்ளிவாசல் கட்டும் பணி தடைபட்டதெனத் தெரிவித்தனர். உடனே தளபதி மிர்-பாக்கி அப்பள்ளிவாசலைப் புதுப்பித்துக் கட்டுகிறார். பாரத ஜனதா கட்சியால் இந்து விரோதியாக பாபர் மன்னர் சித்தரிக்கப்பட்டாலும் பாபர் மன்னர் இந்து கோவில்களுக்கும் வயல் நிலங்களை அன்பளிப்புச்செய்து, சேவையாற்றிய மன்னன் என்பது வரலாற்று உண்மையாகும்.

மேலும், குறித்த அயோத்தியில் பாபர் மஸ்ஜித் வளாகத்தில் இராமர் கோவிலை விக்ரமாதித்த மன்னன் கட்டயாதக் குறிப்பிடுகின்றனர். ஆனால், இந்தியா வரலாற்று ஆய்வறிக்கைகளின்படி கி.பி 300 தொடக்கம் கி.பி 1100 (4ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு) வரை ஆட்சி செய்த விக்ரமாதித்தன் என அழைக்கப்படும். குப்த பேரரசர்களின் காலத்தில் அயோத்தி வனாந்தரமாக இருந்துள்ளதுடன், குறித்த பிரதேசத்தில் மனித சஞ்சாரமோ கட்டடங்களோ, கோவில்களோ இருந்ததில்லை.

இவ்வாறு குறித்த பாபர் மசூதியுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கட்டடக்கலை அமைப்பு,  கல்வெட்டுகள், கடிதங்கள் போன்ற வரலாற்று மூலதாரங்களை வைத்து ஆய்வு செய்தால் பாபர் மசூதியானது முஸ்லிம்களின் பூர்வீகப் பூமியென உறுதியாகிறது.

09.11.2019ம் திகதியன்று வெளியான உச்ச நீதிமன்றத்தீர்ப்பின்படி, 1992 ல் பாபர் மசூதி இடித்தது சட்ட விரோதமானது. என்றாலும், பாபர் மசூதி அமைந்துள்ள 2.77 ஏக்கர் விசாலமுள்ள குறித்த காணியானது ராம்லால்லா அமைப்பிற்கே சொந்தமானது. எனவே, எதிர்வரும் 3 மாதங்களுக்குள் குறித்த இடத்தில் இராமர் கோவிலை அமைக்க இந்தியா மத்திய அரசு டிரஸ்ட் அமைக்க வேண்டும். காணிக்கான உரிமை மத்திய அரசிடமே இருக்க வேண்டும். நிலத்தை பராமரிக்கும் திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு அயோத்தியில் பள்ளிவாசல் அமைப்பதற்கு 5 ஏக்கர் காணி வழங்க வேண்டுமெனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

வேடிக்கையும் புரியாத புதிர் இது தான் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அயோத்தியில் இன்று பாபர் மசூதி இடமல்லாது, அதன் சுற்று வட்டாரத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ராமருக்கான கோயில் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். பதினைந்து கோயில்களும் அவை இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்ததாகச் சொல்லுபவை. இவை தவிர, தசரதன், கோசலை, பரதன் ஆகியோருக்குத் தனித்தனியே கோயில்களும் இங்கே இருக்கின்றன.

என்றாலும், பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்தியாவில் சட்டமானது பேரினவாதத்திற்கு அடி பணிந்து முஸ்லிம்களின் பூர்வீக பூமியை கோவில் பூமியாக மாற்றி விட்டது. எமது அயல் நாடான இந்தியாவில் இத்தீர்ப்பு வழங்கினாலும் இலங்கை முஸ்லிம்களும் பல விடயங்களைக் கற்று சில சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளோம்.

இந்தியாவில் மாத்திரமல்ல, இலங்கையின் இறுதி 40 வருட வரலாற்றை அவதானித்தால், பௌத்த பேரினவாதத்தின் அச்சுறுத்தலுக்கு இலங்கை தமிழர்களும் முஸ்லிம்களும் உள்ளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக, சிறுபான்மையினரின் வரலாற்று மூலதாரங்களை அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சியாக யாழ் நூல் நிலைய தீ வைப்பு மற்றும் அநுராதபுர ஸியாரம் உடைப்பு போன்ற செயற்பாடுகளைக் குறிப்பிட முடியும். அதுமாத்திரமன்றி, இலங்கையின் பூர்வீக குடிமக்களான முஸ்லிம்கள், வந்தேறி குடிகள் என்று பேரினவாதிகள் கருத்துக்களைப் பரப்பிய வண்ணமுள்ளனர்.

இந்நிலையில், தமது பூர்வீகம், இருப்பு என்பவற்றை நிருபிக்க நாம் நமது வரலாற்று மூலதாரங்களை பாதுகாக்க வேண்டியுள்ளோம். இஸ்லாமிய வரலாற்று மூலதாரங்களாக அல் குர்ஆன், ஹதீஸ்,  மௌலூத், ஸியாரம், பள்ளிவாசல் கட்டடக்கலை, தர்ஹாக்கள்; மீஸான் கற்கள், கல்லி (சிறுமிகளுக்கான நடனக்கலை, ராத்திப் (இசைக்கலை நிகழ்ச்சி), கிராமிய வரலாற்று நூற்கள், வாய் மொழிக்கதைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். அதிலும் குறிப்பாக, இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கான வரலாற்று பௌதீக மூலதாரங்களாக பள்ளிவாசல் கட்டடக்கலை, ஸியாரம், மீஸான் கற்களைக் குறிப்பிடலாம். ஆனால், நாம் நமது வரலாற்று மூலதாரங்களைப் பாதுகாக்கும் விடயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.

நமக்குள் உள்ள கருத்து முரண்பாடு காரணமாக ஓர் சாரார் எல்லை கடந்து செயற்படுவதாகக்கூறி மறுசாரார் நமது இருப்பின் அடையாளமான ஸியாரங்களை அழித்தனர். ஆனால், நாம் அழிப்பது நமது இருப்பின் அடையாளத்தை என்பதை மறந்து விட்டனர். நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல் அபிவிருத்தி என்ற பெயரில் பழைய பள்ளிகளை முழுமையாக அழித்து புதிய பள்ளிகளைக் கட்டிய வண்ணமுள்ளோம். சில இடங்களில் வரலாற்று மூலதாரங்களான ஸியாரம், தர்கா போன்ற பழைய கட்டடங்கள் பார்ப்பார் கேட்பாரற்று அநாதரவாகவுள்ளது. ஒரு புறம் இவ்வாறு முஸ்லிம்களே முஸ்லிம்களின் வரலாறுகளை அழித்துக் கொண்டிருக்குறோம். மறுபுறம் அரசியல் உள் நோக்க இனவாத கலவரங்களால் வரலாற்று மூலதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரலாற்று மூலதாரங்கள் அழிவடையும் சூழலில் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு முன்னாலுள்ளது. எனவே, ஸியாரம், மீஸான் கற்கள் போன்றவற்றை இஸ்லாமிய சரீஆ சட்டத்தை மீறாத வகையில் முஸ்லிம்கள் அனைவரும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

கிராமிய மட்டத்தில் நமது முன்னோர்கள் செய்த பணிகளையும், நமது வரலாற்றையும் எழுத்து, ஒலி,  ஒளி வடிவில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையெடுக்க வேண்டும். மாவட்ட ரீதியில் முஸ்லிம்களின் பாரம்பரிய ஆவணங்கள், பொருட்கள், அரபு எழுத்துக்கலை அலங்காரங்கள் என்பவற்றைச் சேகரித்து நூதனசாலை, நூலகங்கள் நிறுவ வேண்டும்.

வரலாற்று மூலதாரங்களை பாதுகாப்பதன் மூலம் மாத்திரம் எமது பணிகள் நிறைவடைவதில்லை. ஏனெனில், இந்தியாவில் 500 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்ட பாபர் மசூதி இன்று இந்துக்கள் வசமாகி விட்டது. அந்தத்தீர்ப்பில் வரலாற்று மூலதாரமாக பள்ளிவாசல் இருந்தாலும், தொல்லியல் ஆய்வு முடிவுகள் (12ம் நூற்றாண்டு தொடக்கம் 16ம் நூற்றாண்டு வரை) சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்கள், உச்ச நீதிமன்றக் குழுவின் தனிப்பட்ட நம்பிக்கைகள் என்பன இறதித்தீர்ப்பில் செல்வாக்கு செலுத்தியுள்ளது.

எனவே, தற்போது எமது மூலதாரங்களை அழிக்க பேரினவாதிகள் முயற்சிக்கும் போது களத்திலிருந்து பாதுகாக்க அரச பாதுகாப்புப் பிரிவான பொலிஸ், இராணுவம் போன்றவற்றில் முஸ்லிம்களையும்,  முஸ்லிம்களுக்கு ஆதரவான வீரர்களையும் உருவாக்க வேண்டும். சட்ட ரீதியாக எதிர்கொள்ள நீதிபதிகளையும், சட்டத்தரணிகளையும், வரலாற்று தொல்பொருள் ஆய்வாளர்களையும், எழுத்துரு ஆய்வாளர்களையும் உருவாக்க வேண்டும். இந்தியர்கள் தமது வரலாறுகளை அழித்து புது வரலாறு படைப்பது போல் இலங்கையர்கள் செயற்பட வேண்டாம்.