Main Menu

கலாசாரம்

மார்க்கத்திற்குள் புகுந்து விளையாடும் பப்ஜியின் புதிய அப்டேட் (New Update)

MFM.ஹாஜித் இவ்விளையாட்டுக்களின் விபரீதங்களைப்பற்றி நான் ஏற்கனவே விரிவாக விளக்கி கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றேன். இதனைச்சிலர் சரியாகப் புரிந்து கொண்டாலும், பல இணையத்தள விளையாட்டுப் பிரியர்கள் தவறாகப்புரிந்து கொண்டு நகைச்சுவையான பின்னூட்டங்களை இட்டிருந்தார்கள் என்பதே மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

இணையத்தள விளையாட்டுக்கள் எம் வாழ்வில் வலை விரித்து எம் வாழ்வைச் சிதைப்பதொன்றும் புதிதல்ல. இருந்தும், இவ்வளவு நாளும் எமது அறிவோடும் உயிரோடும் விளையாடிய இவ்விளையாட்டுக்கள் இன்று எமது உயிருக்கும் மேலான உத்தம மார்க்கத்தோடு விளையாட வந்து விட்டதென்பதே மனதை உருக்கி கண்ணீரை வரவழைக்கும் கசப்பான விடயமாகும்.

அதிலும், குறிப்பாக மிகக்கொடூரமான விளையாட்டாக "பப்ஜி" எனும் விளையாட்டை வட்டமிட்டு சுட்டிக் காட்டலாம். இவ்விளையாட்டுக்கள் அனைத்தும் நிச்சயமாக மனிதனின் வாழ்வில் தீய எண்ணங்களை மாத்திரமே தோற்றுவிக்கின்றது.

ஒருவரை அழிப்பதும் ஆயுதங்களை விலை கொடுத்து வாங்கி மற்றவர்களைத்தேடி மனித வேட்டையாடத் திரிவதுமே இவ்விளையாட்டுக்களின் அடிப்படை விதிமுறைகளாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் தன்னுடைய கோட்டிற்குள் வைத்திருக்கின்றது இவ்விளையாட்டுக்கள்.

இருந்தும், இது பெரியவர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை விட சிறுவர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கமே மிகவும் அதிகமானதும் அபாயகரமானதுமாகும். எது எவ்வாறு இருந்தாலும், இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு விடயமாகும். எமக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு விடயங்களையும் மார்க்கம் தடுத்திருக்கின்றது.

இது இவ்வாறிருந்தாலும், இது வெறுமனே ஒரு விளையாட்டு என்பதனை நாங்கள் நன்கறிவோம். அதனால் தான் நாங்கள் இதனை விளையாடுகின்றோம். நாங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அதிர்ச்சியடைவதில்லை என்று நாங்கள் சாக்குப்போக்குச் சாட்டுகளை சொல்லிக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், இப்போது எமக்கு இஸ்லாம் தடுத்த சிலை வணக்கத்தினை அவர்கள் அவ்விளையாட்டிற்குள் புதுப்பிப்பின் (Update) மூலமாக உள்ளே கொண்டு வந்து விட்டார்கள். இப்போது நாம் என்ன கூறப் போகின்றோம்?

சிலை வணக்கத்தினை விளையாட்டிற்குள் உட்புகுத்தி அச்சிலைக்கு அடிபணிந்தால் பலமான பல ஆயுதங்கள் கிடைக்கும். இதன் மூலம் அவ்வாயுதங்களைக்கொண்டு அவ்விளையாட்டின் அடுத்தடுத்த நிலைக்கு சென்று இறுதியில் வெற்றி பெற முடியும். இதன் மூலமாக அவர்கள் எம்மை மூளைச்சலவை செய்து சிலை வணக்கத்தினை எமது செயற்பாடுகளுக்குள் புகுத்தி சிலை வணக்கத்தினை கண்ணியப்படுத்துகின்றார்கள்.

இதனைப்புரியாத எம்மில் பலர் இவர்களினுடைய தந்திர வலையில் அகப்பட்டு தம்முடைய அறிவினையும் உயிரினையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது போக தற்போது தங்களுடைய இறையச்சத்தையும் பறி கொடுப்பதற்கும் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விளையாட்டினை நாம் முற்றாகப் புறக்கணிப்போம். இது பற்றி மார்க்கத்தீர்ப்பும் வெளியாகியிருக்கின்றது. அதனை நான் அதனுடைய அசல் வடிவிலேயே கீழே தருகின்றேன்.

🖲பப்ஜி விளையாட்டு சம்பந்தமான மார்க்கத்தீர்ப்பு: பப்ஜி என்ற பெயர் குறிப்பிடப்படும் விளையாட்டு ஆபத்தான, கேடு விளைவிக்கின்ற, ஹராமானதொரு விளையாட்டு. அதனை விளையாடுவது கூடாது. விஷேடமாக அதன் இறுதி அப்டேட். காரணம் அது தூய்மையான ஏகத்துவ அகீதாவுக்கெதிரான யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனமாக இருக்கின்றது. அது அதனை விளையாடுபவர்களின் உள்ளத்தில் சிலை வணக்கத்தையும் அவற்றை கண்ணியப்படுத்துவதையும் விதைக்கின்றது. வன்முறையையும் அனுமதியற்ற முறையில் யுத்தம் புரிவதையும் பயிற்றுவிக்கின்றது. மார்க்க வரையறைக்கு வெளியால் இருபாலாருக்குமிடையிலான தொடர்புகளுக்கு வழிவகுக்கின்றது. விளை நிலங்களையும் கால்நடைகளையும் அழித்திடும் வழிகெட்ட சிந்தனைகளை வாலிபர்களிடையே வளர்கின்றது. முஸ்லிம்கள், விஷேடமாக (பெற்றோர்), பாதுகாவலர்கள் இது விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பதோடு, மற்றவர்களையும் எச்சரிக்கை செய்வது கட்டாயக் கடமையாகும்.

{முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்} (அல்குர்ஆன் : 66:6) - கலாநிதி ஹமத் இப்னு முஹம்மத் அல்-ஹாஜிரி.

ஆகவே, இதனைக் கருத்திற்கொண்டு இவ்விளையாட்டுக்களிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொண்டு எம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம்.

குறிப்பு: இக்கட்டுரையின் மூலம் நான் மாற்றுமத சகோதரர்களின் சிலை வணக்கத்தினைக் கொச்சைப்படுத்த வரவில்லை. ஆனால், இது இக்காலகட்டத்தில் இணையத்தள விளையாட்டின் மூலமாக ஊடுருவி இருக்கின்றது. இஸ்லாமியர்களான எங்களுக்கு இவ்வணக்கத்திற்கு அனுமதியில்லை என்பதைத்தான் நான் இக்கட்டுரையின் மூலம் சுட்டிக்காட்ட விளைகின்றேன். அதனால் மாற்றுமத சகோதரர்கள் யாரும் இதனைத் தவறாக எண்ணி விட வேண்டாம். ஆனால், அனைவருக்கும் இவ்விளையாட்டுக்கள் உடலுக்குத் தீங்கானதே.