Main Menu

உரைகள்

கொடிய கொரோனாவிலிருந்து பாதுகாப்பா? பெருநாள் கொண்டாட்டமா?

- அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி (MA)

கொரோனா வைரஸும் உலகப் பேரழிவும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தின் காரணமாக இன்றைய உலகு மிகப்பெரும் பேரவலத்தை சந்தித்து வருகின்றது. குறிப்பாக, கடந்த ஐந்து மாதங்களாக இந்த அவலத்திற்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் எனும் கொவிட் 19 தாக்கம் காரணமாக இன்றைய தினம் (12.05.2020) வரை சுமார் 4,330,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,575,558 பேர் இதன் தாக்கத்திலிருந்து மீண்டுள்ள அதே வேளை, சுமார் 291,911 பேர் மாண்டு போயுள்ளார் என கவலையான செய்தியை புள்ளிவிவரங்களூடாக நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இலங்கையில் கொரோனாவின் தாக்கம் உலகளவில் தாக்கம் செலுத்தி வரும் இந்த வைரஸ் தாக்கத்தினால் இலங்கைத்திரு நாடும் பாதிப்புள்ளாகி, கடந்த இரண்டு மாதங்களாக மிகப்பெரிய சோதனையைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதுவரை 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் மரணித்துள்ளார்கள்.

இன்றைய சூழலில் இலங்கை ஒரு அச்சுறுத்தலான கால கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. 863 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், முதல் 100 பேர் 57 நாட்களிலும், இராண்டாவது 100 பேர் 19 நாட்களிலும், மூன்றாவது 100 பேர் 9 நாட்களிலும், நான்காவது 100 பேர் 4 நாட்களிலும், ஐந்தாவது 100 பேர் 2 நாட்களிலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்நோய் பரவலாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகமே மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற இலங்கை, இந்நோயின் காரணமாக, மிகப்பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளது.

அதிகமானவர்கள் தொழில் இழந்துள்ளார்கள். உணவுக்குபபஞ்சம் ஏற்படுகின்ற அளவுக்கு நிலைமை மிக மோசமாகச் சென்று கொண்டிருக்கின்றது.

பெருநாள் கொண்டாட்டமும் ஏனைய சமூகங்களும் இக்கொடிய கொரோனா மிக வேகமாகப்பரவி பல இலட்சம் உயிர்களைப்பலி கொண்டு, பலரது தொழிலுக்கு வேட்டு வைத்துள்ள நிலையில், பொருளாதார ரீதியான நெருக்கடி ஏற்பட்டு, உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ள கால கட்டத்தில், அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான, மீள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லை. எல்லாவற்றையும் மறந்து, எமது பெருநாளை மிக விமர்சையாகக் கொண்டாடுவதா? என நாங்கள் ஒவ்வொருவரும் மிகவும் அவசியமாகச் சிந்திக்க வேண்டிய தருணத்திலே இருக்கின்றோம்.

கடந்த இரு வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக, இந்த நாட்டிலே வாழ்கின்ற எந்தவொரு சமூகமும் தமது பெருநாட்களை மிக விமர்சையாகக் கொண்டாடவில்லை என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக கிறிஸ்தவ சமூகம் மிகப்பெரியதொரு துயரத்திற்குள்ளாகி தமது உயிர்த்த ஞாயிறு தினக்கொண்டாட்டங்களை மிகவும் சோதனையோடு, வேதனையோடு, உயிர்ப்பலிகளோடு கழிக்கின்ற துரஸ்டமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

அதே போன்று, பெளத்த சமூகம் இந்த உயிர்ப்பலித்தாக்குதல் காரணமாக வெசாக் கொண்டாட்ங்களை நிறுத்தியது. அதே போன்று, இந்த வருடம் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக கிறிஸ்தவ சமூகம் உயிர்த்த ஞாயிறு தினக்கொண்டாட்டங்களையும் அவர்களது மிகப்பெரிய நிகழ்வுகளையெல்லாம் நிறுத்தி விட்டு, தங்களின் ஆலயங்களில் ஓரிரு மத போதகர்கள் கலந்து கொண்ட நிலையில், அந்த கொண்டாட்டங்களையும் விழாக்களையும் இடைநிறுத்தியிருக்கின்ற அல்லது விமர்சையாக கொண்டாடாமல் தவிர்த்திருக்கின்ற ஒரு நிலையைப் பார்க்கின்றோம்.

அத்துடன், இவ்வருட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு கூட கொண்டாடப்படாமல், மக்கள் வீதிகளுக்கோ, கடைதெருக்களுக்கோ வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில், ஊரடங்குச்சட்டங்களுக்கு கட்டுப்பட்டு தங்களது பெருநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்துக் கொண்டார்கள். சித்திரை புத்தாண்டு வந்ததா? சென்றதா? என்று தெரியாத நிலையில் கழிந்து சென்றது.

ஆன்மீகத்தலைவர்கள், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய பெளத்த சமூகத்தினுடைய மிகப்பெரிய வெசாக் கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டு, தங்களது நிகழ்வுகளை வீடுகளுக்குள்ளே நடாத்தி முடித்திருக்கின்ற இவ்வாறன நிலையில் தான் நாமும் எதிர்வருகின்ற நோன்புப்பெருநாளைச் சந்திக்கவுள்ளோம்.

நாம் பெருநாளைக் கொண்டாடும் நிலையிலா உள்ளோம் ? எனவே, கொரோனா உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, நாட்டில் ஏற்படுத்தியுள்ள கொடூரம், சமூகங்களுக்கிடையில் ஏற்படுத்தியுள்ள மனக்கசப்புக்கள் என இன்றைய சூழலில் நாம் பெருநாளை விமர்சையாகக் கொண்டாடுவதென்பது, எந்தளவுக்கு நியாயமானது? பொருத்தமானதென்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கை அரசின் இக்கட்டான நிலை கொரோனாவின் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்து, நோய்த்தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்கின்றது. இது விடயத்தில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையிலுளோம். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். மிக நிதானமாகவும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடுள்ளது என உலக சுகாதார அமைப்பு, இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதாரத்துறையினர் எனப்பலர் அறிவுறுத்தியுள்ள நிலையிலும், இலங்கை அரசு எதிர்கொண்டுள்ள பல்வேறு நியாயங்கள் காரணமாக சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டிய நிர்ப்பந்தமான நிலைக்கு இலங்கை அரசு வந்துள்ளது. இலங்கை அரசின் போக்கு வித்தியாசமானது.

குறிப்பாக, இந்த கொரோனா காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மக்களுக்கான நிவாரணங்களை முடிந்தளவு வழங்கியுள்ளது. மீண்டும் மீண்டும் மக்களை அடைத்து வைத்து உணவளிக்க முடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் கஜானா காலியான இக்கட்டான நிலையில், அரச உத்தியோகத்தர்கள் மே மாத சம்பளத்தினை முழுவதுமாக அல்லது அரைவாசியை அதுவும் முடியாவிட்டால், ஒரு வார, ஒரு நாள் சம்பளத்தையேனும் விட்டுக் கொடுக்குமாறு இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் பொது அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். இந்தளவுக்கு அரசின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கின்றது.

எனவே, அடைத்து வைத்திருக்கும் நிலை தொடருமாக இருந்தால், நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் உணவுத்தட்டுப்பாட்டையும் பஞ்சத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்படும் என்ற காரணத்தினாலேயே தான் ஊரடங்குச்சட்டத்தை தளர்த்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

இதே நிலை பிரேசில் நாட்டிலும் நடந்து கொண்டிருக்கின்றது. கொரோனா தாக்கம் காரணமாக தினம் தினம் ஏராளமான உயிர்ப்பலிகளை பிரேசில் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில், இனியும் மக்களைப்பூட்டி வைக்க முடியாத நிலையில் திறந்து விட்டுள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டின் ஜனாதிபதி குறிப்பிடுகையில், இனி வேறு வழியில்லை. மக்களை அடைத்து வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. பொருளாதாரச் சிக்கல்களை எம்மால் எதிர்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மரணிக்கின்றவர்கள் மரணிக்கட்டும். உயிருடன் இருப்பவர்கள் இருக்கட்டுமென்ற தோரணையிலேயே அவர் கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைக்குள் தான் இலங்கை அரசும் தள்ளப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் இலங்கை அரசு அவரசமாக தேர்தலை நடாத்த வேண்டிய தேவையுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு மேல் தேர்தலொன்றை நடாத்தாமல் ஆட்சியைக் கொண்டு நடாத்த முடியாது. அதன் காரணமாக, மக்களை அடைத்து வைத்துக்கொண்டு தேர்தலுக்குச்செல்ல முடியாது. மிக அவசரமாக தேர்தலை நோக்கி நகர வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, தடைகள் அகற்றப்பட்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு நியாயமானதாக இருந்தாலும், பாதிக்கப்படப்போவது பொது மக்களாகும். குறிப்பாக, இந்நாட்டிலே வாழக்கூடிய முஸ்லிம் சமூகம் எதிர்வரக்கூடிய நாட்களில் எவ்வாறு நடந்து கொள்ளப்போகின்றதென்பதை அடிப்படையாக வைத்து, அதன் பாதிப்பின் விளைவை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

கொரோனாவும் இனத்துவேச சக்திகளும் கொரோனாவின் தாக்கம் இலங்கையில் முதன் முதலில் ஏற்பட்ட போது, இந்தக்கொரோனா வைரஸை பரப்புவதில் முஸ்லிம் சமூகத்தினர் காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என இலங்கையிலுள்ள இனத்துவேச சக்திகளும் இனத்துவேச மீடியாக்களும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியதைப் பார்க்கின்றோம். இருப்பினும், காலவோட்டத்தில் அவர்களது நிலைப்பாடு பொய்யானதென்பதை புள்ளிவிவரங்களும் தரவுகளும் நிரூபித்தன.

மீண்டும் இவ்வாறானதொரு சூழ்நிலைக்குள் இந்நாட்டு முஸ்லிம்களை மீண்டும் சிக்க வைத்து, அதனூடாக தங்களது அரசியல் இலாபங்களை அடைந்து கொள்வதற்காக இலங்கையின் இனத்துவேச சக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

நேற்றைக்குப்பின்னர் (11ம் திகதி) அமுலிலிருந்த ஊரடங்குச்சட்டம் சுமார் 23 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டுள்ளது.

இதன் பிற்பாடும் நோன்புப்பெருநாளைக் கொண்டாடுகின்ற விடயத்திலும் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ளப்போகின்றது? என்பதை கண்களிலே எண்ணை ஊற்றி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் இந்நாட்டிலே மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த சமூகத்திலே பெருநாள் கொண்டாடுவதற்கு வெளிக்கிட்ட இளைஞர், யுவதிகள், வர்த்தக நிலையங்கள், முஸ்லிம் வர்த்தகர்கள் முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை எம்மீது சுமத்த அவர்கள் இப்போது தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய விரல் நீட்டல்களுக்குள் இலங்கை, இந்திய முஸ்லிம்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இந்த கொரோனா பரவலுக்கு முஸ்லிம்கள் காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டைப்பரப்பிய நிலையில், அக்குற்றச்சாட்டில் உண்மையில்லையென்பதை உணர்ந்திருக்கின்ற வேளையில், மீண்டும் இலங்கை, இந்தியாவில் சிறுபான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் சமுதாயம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெருநாளைக் கொண்டாடுவதற்காக கடைத்தெருக்கள், வீதிகளில் ஏறி இறங்கிச் செல்கின்ற ஒரு துரதிஸ்டமான நிலை வருமாக இருந்தால், அது மிக இலகுவாக முஸ்லிம் சமூகத்தில் கொரோனா பரவுவதற்கான வாய்ப்பாக அமையும் என்பதுடன், இனவாத ஊடகங்களுக்கு தீனி போடக்கூடக் கூடியதாக அமையுமென்பதையும் முஸ்லிம் சமூகத்திலுள்ள அனைவரும் மிகவும் கரிசனையோடு சிந்திக்ககி கடமைப்பட்டுள்ளோம். முஸ்லிம் பிரதேசங்களிலே கொரோனா வைரஸ் பரவுமாக இருந்தால், அது மிக வேகமாகப்பரவுமென்பதை மிகவும் எச்சரிக்கையோடு புரிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

இனவாதிகளைப் பொறுத்தவரைக்கும் முஸ்லிம் சமூகத்திற்குள்ளே இத்தகைய நோய் வேகமாகப்பரவ வேண்டும். அதன் மூலமாக இந்தப்பழியை முஸ்லிம் சமுதாயத்தின் மேல் போட வேண்டுமென்பதில் மிகவும் அக்கறையோடு இருக்கிறார்கள்.

இந்நோயை முஸ்லிம் சமூகத்தின் மீது பரப்புவதற்கு ஒரு ஆடை விற்பனை நிலையம், ஆடைக்கொள்வனவில் ஈடுபடுகின்ற ஒரு குடும்பம் அல்லது ஒரு தனி நபர் போதுமானதாக இருக்கும். இச்செயற்பாடு முழு நாட்டிற்கும் குறித்த தொற்றினைப்பரப்ப சிறந்த வழியாக அமைந்து விடுமென்பதை நாம் ஒவ்வொருவரும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் இலங்கையின் சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் முஸ்லிம் சமூகம் செறிந்து, மிகவும் நெருக்கமாக வாழ்கின்றமையும் கொரோனா பரவலுக்கு ஏதுவான முக்கய காரணிகளில் ஒன்றாக தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். எனவே, இவைகளைப் புறந்தள்ளி விட்டு முஸ்லிம் சமுதாயம் தங்களின் பெருநாளைக் கொண்டாட முடியாதென்ற விடயத்தை தெளிவுபடுத்த வேண்டியுள்ளதென்பதை நாமனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா எம்மத்தியில் பரவினால்? குறித்த நோய் எமது பொறுப்பற்ற செயற்பாடுகளால், நடத்தைகளால் எமது பிரதேசங்களில் பரவுமாக இருந்தால், அதன் விளைவுகள் எவ்வாறு அமையுமென்பதை எமது முஸ்லிம் சகோதர, சகோதரிகள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள். நாம் இது விடயத்தில் அலட்சியமாக நடந்து கொண்டால், இன்று எமது புடவைக்கடைகள் நிரம்பி வழிவதைப் போன்று நாளை வைத்தியசாலைகளும் நிரம்பி வழியும் ஒரு நிர்ப்பந்தமான, துர்ப்பாக்கிய நிலை உருவாகும்.

பாதிக்கப்பட்டோர் வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும். இதனை நாம் இன்று ஊடங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இந்த தொற்றுள்ளவர்களை எவரும் சந்திக்க முடியாது. பார்க்க முடியாது. குடும்பத்தில் எவருக்காவது அதன் தாக்கம் ஏற்படுமாயின், முழுக்குடும்பமும் சுற்று வட்டாரத்திலுள்ளோரும் தனிமைப்படுத்தல் முகாம்களிலே சுமார் 14 அல்லது 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இவ்வாறான நிலையில், நாங்கள் பெருநாள் கொண்டாட வெளிக்கிட்டு குறித்த நோய்த்தொற்றுக்குள்ளாகி நாமம் வைத்தியசாலைகளில் குடும்பங்களை விட்டும் தனிமைப்படுத்தப்படுகின்ற சூழ்நிலையில், எமது சொந்த பந்தங்கள் தனிமைப்படுத்தல் முகாம்களிலே தனிமைப்படுத்தப்படுகின்ற நிலை இருப்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அத்துடன், தனிமைப்படுத்தல் முகாம்களிலுள்ளோருடன் நாம் எந்த உறவுகளையும் வைத்துக் கொள்ளவோ, அவர்களைச் சென்று பார்வையிடவோ முடியாத நிலை காணப்படுகின்றது. ஒரு கிராமத்திலோ பிரதேசத்திலோ இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால், அதனூடாக அவரும் அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்படுவதுடன், ஒட்டு மொத்த கிராமும் முடக்கப்படும் அபாயகரமான நிலை உருவாகும்.

இவ்வாறனதொரு சூழல் பல முஸ்லிம் கிராமங்களிலும் இடம்பெற்று, முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், மேலும் வேறு பல பிரதேசங்களும் நகரங்களும் முடக்கப்பட்டமையை நாம் அறிவோம். இவ்வாறன நிலையிலிருந்து அவர்கள் தற்போது தான் மீண்டுள்ளார் என்பதும் நாமறிந்த விடயம். அவ்வாறு ஒரு நகரமோ கிராமமோ முடக்கல் எனும் நிலைக்குத் தள்ளப்ப்படுமாக இருந்தால், எத்தனை சோதனைகள், இன்னல்களை அவர்கள் சந்திக்கிறார்கள்? எவ்வாறான பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ளார்கள்? என்பதை சமூக வலைத்தளங்களூடாக தெரிந்து வைத்திருக்கின்றோம்.

இவ்வாறானதொரு நோய்த்தொற்றுள்ளவர் மரணித்தால், உறவினர்களால் கூட மரணித்தவரைப்பார்க்க முடியாத நிலை உருவாவதுடன், மரணித்த பின்னர் அந்த சடலத்தைக் கூடப் பார்க்க முடியாத சூழல் தான் இலங்கையில் காணப்படுகின்றது. எனவே, இத்தகைய நிலையில் ஒரு மரணத்தை நாம் சந்திப்போமாக இருந்தால், இஸ்லாத்தில் எந்தவொரு கடமைகளும் செய்யப்படாத நிலையில், அந்த ஜனாஷாக்கள் எரிக்கப்படும் நிலை நம் நாட்டில் காணப்படுகின்றது.

அந்த ஜானாஸா வுக்கு குளிப்பாட்டுகின்ற, கபணிடுகின்ற, தொழுகை நடாத்துகின்ற நிலையியோ கண்ணீரோடு கொண்டு அடக்கப்படுகின்ற நிலையோ இலங்கையில் தற்போது காணப்படவில்லை என்ற யதார்த்த நிலை எல்லோருக்கும் தெரியும்.

உலகெங்கிலும் சுகாதார நியதிகளுக்கு ஏற்ப அடக்கம் செய்யும் நடைமுறைகள், சர்வதேச அங்கீகாரங்கள் இருந்தும் கூட இலங்கையில் முஸ்லிமுடைய உடல் அவனது சமய நம்பிக்கைகள், விருப்பங்களுக்கு மாற்றமாக எரிக்கப்படுகின்ற ஒரு மோசமான நிலையை நாம் காண்கிறோம்.

குறித்த வைரஸ் தொற்றினால் கடந்த நாட்களில் ஒன்பது உயிர்களை இழந்துள்ளோம். அதில் மரணித்த நான்கு முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டிருக்கின்றது.இரண்டு முஸ்லிம்களின் சடலங்கள் கொரோனா என்பது உறுதிப்படுத்தப்படாமலே எரிக்கப்பட்டது மிக வேதனையான விடயமாகும்.

அதில் முஸ்லிம் பெண் ஒருவரின் ஜனாஸா கூட எரித்து சாம்பலாக்கப்பட்டது. ஆக, இத்தகைய விபரீதமான விளைவுகளை நோக்கித்தான் நகரவிருக்கின்றோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டு, இந்த பெருநாளைக் கொண்டாடுவதா? இல்லை, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து நமமையும் நம் குடும்பத்தையும் உறவுகளையும் இந்த ஊரையும் பாதுகாத்துக் கொள்வதா? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய தேவைப்பாட்டில் ஒவ்வொரு முஸ்லிமும் இருக்கிறான்.

இப்பெருநாளை விமர்சையாக கொண்டாடத்தான் வேண்டுமா? இவ்வாறான நிலையில், இந்தப்பெருநாளை நாம் விமர்சையாக கொண்டாட வேண்டுமா? இதனை ஒரு விமர்சையான பெருநாளாக நாம் கொண்டாடி இந்நாட்டுக்கும் இந்த உலகுக்கும் எம்மைக் காட்டிக்கொடுக்க வேண்டுமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திப்போமாக.

எனவே, உறவுகளைப் பிரிந்து, உயிர்களை இழந்து, தொழில், வருமானங்களை இழந்திருக்கின்ற நிலையில் ஜனாஸாக்களைக்கூட கையேற்று இஸ்லாமிய முறைப்படி அடக்க முடியாத எரித்து சாம்பலைக்கூட காண முடியாத நிலையில், கொரோனா பரவுவதற்கான வழியை ஏற்படுத்திக்கொண்டு நிச்சயமாக இந்த பெருநாளை கடந்த காலங்களில் கொண்டாடியது போன்று கொண்டாடத்தான் வேண்டுமா? என்பதை ஒவ்வொரு முஸ்லிம் சகோதர, சகோதரியும் மிகுந்த அக்கறையோடு, உணர்வுபூர்வமாக இதய சுத்தியோடு சிந்திக்க வேண்டும்.

பெருநாளை விமர்சையாகக்கொண்டாடும் நிலையிலா நாம் உள்ளோம்? இன்றைய சூழலில் விமர்சையாக இந்த பெருநாளைக் கொண்டாடுகின்ற நிலையிலா உலகில் வாழும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டிய தேவையில் உள்ளோம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கஃபதுல்லாஹ், மஸ்ஜிதுன் நபவி, நபி (ஸல்) அவர்களின் ரவ்ழா ஷரீப் மூடப்பட்டுக் கிடைக்கின்றன. அத்துடன், உலகிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளும் மூடப்பட்டுக் கிடைக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இலங்கையிலும் உலகிலுமுள்ள முஸ்லிம்கள் ஜமாஅத் தொழுகை இல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி, பள்ளிவாயகளுக்குச் சென்று கூட்டாகத் தொழுத மகிழ்ச்சி இல்லாமல் தவிக்கிறார்கள்.

இன்றைய நிலையில் இலங்கையில் எட்டு ஜும்ஆக்களை இழந்த நிலையில், ரமழான் வந்தால் முஸ்லிம் பிரதேசங்கள் ஆன்மீகச்சூழலில் பூத்துக் குலுங்கும். மகிழ்ச்சியாக இருக்கும், பள்ளிவாயல்கள் வணக்க வழிபாடுகளாலும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்ற ஈமானிய உள்ளங்களாலும் நிறைந்து வழியும்.

ஆனால், இன்று அவையெல்லாம் இழந்து ஒரே சோகமாக எல்லாப் பிரதேசங்களும் வீடுகளும் மையித்து வீடுகளாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே, நானும் என்னுடைய பிள்ளையும் குடும்பமும் அழகாக உடுத்து, சீவி, சிங்காரித்து, வீதிகளிலெல்லாம் ஏறியிறங்கி ஊரிலுள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று ஆடை தெரிவு செய்து, சந்தோசம் கொண்டாடக்கூடிய நிலையிலா? நாமிருக்கிறோம் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே முஸ்லிம் சகோதார, சகோதரிகளும் சிந்திக்க வேண்டுமென்று மிகவும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

பெருநாளுக்கு புத்தாடை அவசியமா? இன்றைய சூழ்நிலையில், பெருநாளைக் கொண்டாடும் மனோநிலையில் நாமில்லை. அப்படித்தான் கொண்டாட வேண்டுமென்ற நிலை இருக்குமானால், புத்தாடை அணிந்து தான் பெருநாள் கொண்டாட வேண்டுமென்ற எந்தக்கடப்பாடும் கட்டாயமும் மார்க்கத்தில் இல்லையென்பதை நாம் எல்லோரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி ஸல் அவர்களின் போதனைகளின் பிரகாரம் இருக்கின்ற நல்ல ஆடைளை உடுத்திக்கொண்டு பெருநாள் தொழுகைக்குச் செல்ல வேண்டுமேன்பதேயோழிய புத்தாடை தான் வாங்கி உடுக்க வேண்டுமென்ற எந்தக்கடப்பாடும் நமக்கு கிடையாது என்பதையும் புரிந்து கொண்டு நாம் செயற்பட வேண்டும்.

ஆடைகளுக்கு செலவு செய்யும் பணத்தை ஏழைகளுக்கு உணவளிக்க பயன்படுத்துங்கள் நாம் பெருநாள் தொழுகைக்கே வெளியே போக முடியாது என்ற நிலையுள்ள போது, இந்தப் பெருநாளுக்கு புத்தாடை தேவை தானா? என நாம் சிந்திக்க வேண்டிய தருணத்திலிருக்கிறோம். எனவே, இந்தக்கால கட்டத்தில் ஆடைகளுக்காகச் செலவு செய்யும் பணத்தைச் சேமித்து, உணவில்லாமல் தவிக்கும் ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். நிச்சயமாக ஒரு முஸ்லிம் செய்கின்ற காரியங்களிலே மிகச்சிறந்த காரியமாக அது இருக்குமென்பதைப் புரிந்து, இந்த பெருநாளை நாம் மிகவும் அடக்கமான நிலையில் கழிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் விளங்கிக்கொள்வோமாக.

கவலையளிக்கும் எமது சகோதரிகளின் அலட்சியம் மார்க்க அறிஞர்கள், மருத்துவர்கள், சுகாதரத்துறையினர் என்னதான் ஆலோசனைகளைச் சொன்னாலும், இந்நாட்டிலே மிகப்பயன்காரமான சூழ்நிலையேற்பட்டுள்ளதை நாம் விளக்கிச்சொன்னாலும், உலகம் மிகப்பெரிய அவலத்துக்கும் ஆபத்துக்கும் உள்ளாகியுள்ளதென்று சொன்னாலும் சிலர் கேட்கப் போவதில்லை.

குறிப்பாக, எங்கள் சகோதரிகளைப் பொறுத்த வரைக்கும் எதுவுமே நடக்கதாவர்கள் போல இந்த உலகில் எதையும் காணாதவர்கள் போல எந்தக்கணக்கும் இல்லாமல், இந்த நோயுடைய விபரீதத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் வீதிகளிலே அலட்சியமாக நடமாடித் திரிகின்ற காட்சி, கடைகளிலே ஏறியிறங்கித் திரிகின்ற காட்சி மிகவும் கவலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.

உண்மையில், எமது சகோதரிகள் கொரோனா நோயின் தாக்கத்தைப்புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்களா? அல்லது அதனை விளங்க முடியாதவர்களாக இருக்கிறார்களா? அது பற்றிய அறிவு அவர்களிடத்தில் இல்லாமல் இருக்கிறதா? எனக் கேட்கத் தோன்கின்றது.

எல்லா தெளிவும், விளக்கமும் கொண்டவர்காளாக இருக்கும் இவர்கள், பெருநாளைக் கொண்டாடத்தான் வேண்டும். அதற்கு தேவையான ஆடைகள் வாங்கத்தான் வேண்டும். அதற்கு எத்தனை ஆயிரங்கள் செலவானாலும் பரவாயில்லை என்ற மனோநிலையில் தான் எங்களது சகோதர, சகோதரிகள் கூட்டம் கூட்டமாக வாகனங்களிலும் நடையாகவும் ஏறி இறங்கித் திரிகின்றார்கள்.

11ம் திகதிக்குப்பின் ஊரடங்குகிச்சட்டம் முழுமையாகத் தளர்த்தப்படுகின்ற போது, வீதிகளிலே இறங்கி பல கடைகளுக்கும் அலைந்து திரிந்து, ஆடைகளைத் தொட்டுப்பார்த்து இந்த வைரஸை வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்த்து, வீட்டிலுள்ள வயோதிபர்கள், நோயாளிகள், பிள்ளைகளுக்கும் இந்த நோயை தானமாக வழங்கி விடுவார்களோ? என்ற அச்சம் மேலிடுகிறது.

ஆகவே, சகோதர, சகோதரிகளே மிகவும் விழிப்பாக இருங்கள். இந்த கொரோனா தொற்றுக்கு மிகவும் லாவகமான வழிகள் இந்த புடவைக்கடைகள். அதே நேரம், இன்றைய சூழலில் ஏற்படுகின்ற சன நெரிசல்கள இந்த நோய் தொற்றிக் கொள்ள எதுவாக அமையும்.

நிச்சயமாக, சுகாதாரத்துறை மாஸ்க் அணிந்து கொண்டு போகச்சொன்னாலும், கைகழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுங்கள் என்று சொன்னாலும், இவைகள் எந்தக்கடைகளிலும் நடக்கப்போவதில்லை. அவ்வாறு எந்தக்கடைக்காரர்களும் செய்யப்போவதுமில்லை. அவ்வாறு செய்யப்போனால், அவர்கள் நினைத்த வியாபாரம் நடக்கப் போவதுமில்லை.

எனவே, ஆடை கொள்வனவுக்கான எமது பயனம் எமது உயிருக்கான அழிவை நாங்கள் தேடிச்செல்கின்ற நிலையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். "உங்கள் கரங்களை நீங்களாகவே அழிவில் போட்டுக் கொள்ளாதீர்கள் "என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

ஒரு ஆடைத்தெரிவுக்காக நீங்கள் கடைகளுக்குச்சென்று முட்டி மோதி அவர்களின் வியர்வை, மூச்சுக்காற்று உங்களில் பட்டு, அவர்களுடைய கிருமிகள் உங்களில் தொற்றி, அவைகளை நீங்கள் காவி வந்து நோயுற்றுள்ள உங்கள் தாய், தந்தையருக்கு பரப்புகின்ற அதே வேளை, போதாக்குறைக்கு நீங்கள் கடைகளுக்குச் செல்கின்ற போது, உங்கள் சிறு குழந்தைகளையும் அழைத்துச் செல்வது அவர்களையும் கொலைக்களத்திற்கு அழைத்துச்செல்வதற்கு காரணமாக அமைந்து விடுமென்பதில் எச்சரிக்கையாக இருங்கள்.

கொரோனா உங்களைத்தானே தொற்றிக் கொள்ளும். மற்றவர்களுக்கு என்ன கவலை? என்று இது விடயத்தில் அக்கறை செலுத்தாமல் இருந்து விட முடியாது. வருகின்ற வினை உங்களை மட்டும் தாக்காது, உங்கள் குடும்பம், அயலவர்கள், கிராமத்திலுள்ளோரையும் தாக்கும். அப்போது உங்கள் வீடுகள் மட்டுமல்ல, கிராமம், பிரதேசம் என அனைத்தும் முடக்கப்படுமென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறான இக்கட்டான நிலைக்கு உங்களையோ உங்கள் குடும்பங்களையோ இட்டுச்செல்ல வேண்டாமென அன்பாய்க் கேட்டுக்கொள்கிறேன். ஒரு மூஃமின் "தனக்கு தானே தீங்கிழைத்துக் கொள்ளவும் கூடாது, மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் கூடாது" என்பது நபியவர்களின் அறிவுரையாகும்.

எனவே, நமக்கு நாம் தீங்கிழைத்துக்கொள்வதும், பிறருக்கு நாம் தீங்கிழைப்பதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ள பாவச்செயல் என்பதை உணர்ந்து, நாம் ஒவ்வொருவரும் இந்தப் பெருநாளை மிகவும் அடக்கமாக புத்தாடை, குடும்ப தரிசனங்களை தவிர்த்து அனுஷ்டிக்க முயற்சி செய்வோம்.

இதையும் மீறி எமது சகோதர, சகோதரிகள் உதாசீன செய்யும் நிலை வருமாக இருந்தால், இந்நாட்டிலுள்ள இனத்துவேச மீடியாக்களுக்கு விருந்தாவீர்கள். கும்பலாக நீங்கள் கடைத்தெருக்களில் எறித்திரிகின்ற காட்சிகளை ஊடக மயப்படுத்தி, உலகத்திற்கே காட்டி, இவர்கள் தான் இந்த கொரோனா நோய் பரவக்காரணமாக இருந்தார்கள் என்ற பழி நம்மீது விழும்.

உண்மையில் அப்படியானதொரு நிலை வந்து யாரோ ஒருவர் கடைக்குச் சென்ற வேளை, நோய்த்தொற்றுக்குள்ளாகி, குறித்த கடைக்குச் சென்றவர்களை வீடு வீடாகத்தேடி வந்து கொத்துக் கொத்தாக ஜீப் வண்டிகளில் ஏற்றுகின்ற போது, அதனைப் பார்க்கின்ற சக்தி எமக்கில்லை என்பதை இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தலைவர்களின் பொறுப்பு எனவே, குடுமபத்தலைவர்களே, இந்த விடயத்தில் நீங்கள் பொறுப்புள்ளவர்களாக இருங்கள். பெருநாளைக் காரணங்காட்டி புத்தாடைகள் வாங்க கடைகளுக்குச் செல்லும் பெண்களைக் கட்டுப்படுத்துங்கள். இம்முறை பெருநாட்களை வீட்டிலேயே கொண்டாட கட்டுப்பாடுகளை விதியுங்கள்.

அவ்வாறில்லையென்றால், இவ்வாறான நோய்த்தாக்கத்திற்கு காரணமான அந்த உறவுகளுக்கு பொறுப்புதாரி என்ற வகையில் இறைவனிடத்தில் நீங்களும் பொறுப்புச் சொல்லியாக வேண்டும்.

முஸ்லிம் சமுதாயம் பெருநாளின் காரணமாக இந்நோய் பரவ காரணமாக நடந்து கொண்டதென்ற குற்றத்துக்கும் விமர்சனத்துக்கும் நீங்களும் ஆளாகி விடக்கூடாது என இப்பிரதேசத்திலும் இந்நாட்டிலும் வாழும் முஸ்லிம் குடும்பத்தலைவர்களைக் கேட்டுக் கொள்பவனாக இருக்கின்றேன்.

வெளியில் போக வேண்டிய அத்தியாவசிய சூழல் ஏற்படுகின்ற போது, குடும்பத் தலைவர்களாகிய நீங்கள் சுகாதார நடைமுறைகளுடன் சென்று அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொடுத்து, ஒன்று கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வர்த்தக சமூகத்தின் பொறுப்பு அதே நேரம், வர்த்த சமூகமும் இந்த வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமது தொழிலை இழந்திருக்கிறார்கள். தமது வர்த்தக நிலையங்களை மூடி பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமக்கு கீழ் பணிபுரிகின்றவர்களின் வேதனங்களைக்கூட வழங்க முடியாமல் திண்டாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான உண்மை. அதனை யாரும் மறுக்க முடியாது.

இதே போன்று, இந்த சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்காக தமது பொருளாதாரங்களை அள்ளி அள்ளிக் கொடுக்கின்ற சமுதாயமும் வர்த்தக சமுதாயமே. அதையும் கூட செய்ய முடியாத பொருளாதார நெருக்கடி நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்,

உண்மையில் இந்த காலம் அவர்களின் பருவ காலம். தமது பொருளாதார தேடலைப் பெற்றுக் கொள்வாதற்கான காலம். இதையெல்லாம் மறந்து, வர்த்தக சமுதாயம் தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சுமையோடு சுமையாக எதிர்வரக்கூடிய நாட்களில் மிகவும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டுமென்பதுடன், இந்த சமூகத்துக்கு ஒரு அவப்பெயரை ஈட்டிக் கொடுக்கும் நிலைக்கு அவர்களும் சென்று விடக்கூடாது.

எங்களுக்கென்ன? வியாபாரத்துக்கு ஆட்கள் வந்தால் நாங்கள் திறந்து வியாபாரம் பண்ணுவோம் என்று இருக்க முடியாது. எமது சமூகத்தில் யார் சொல்லும் கேட்காத, பொறுப்புதாரிகளுக்கு அடங்காது வெளியிலே நடமாடக்கூடிய ஒரு சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவ்வாறு அவர்கள் வருகிறார்கள் என்பதற்காக உங்கள் கடைகளிலே கூட்டி வைத்துக்கொண்டு கொரோனாவை உங்களுக்கும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பரிசாகக் கொடுத்து விடாதீர்கள் என வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

நிச்சயமாக, நீங்கள் சந்தித்த இழப்போடு ஒரு இழப்பாக இதனையும் ஆக்கிக்கொண்டு பொறுமையுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக இந்த நிலை எக்காலமும் நீடிக்கமாட்டாது.

அது மாறும். உலக நியதி அது தான், இந்நிலைமை மாறி சந்தோசமான ஒரு சூழல் வருகின்ற போது ஹஜ்ஜுப் பெருநாளைக்கூட சந்தோசமாகக் கொண்டாடலாம். அந்த வாய்ப்பை இறைவன் நம் எல்லோருக்கும் தருவான் என்ற நம்பிக்கையோடு இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையில் அரசின் கட்டுப்பாடுகள், சுகாதாரத்துறையினரின் அறிவுரைகளையும், வைத்தியர்களின் ஆலோசனைகளையும் மீறித்தான் பொருளாதாரத்தை சம்பாதிக்க வேண்டுமா? என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

சுகாதார நடைமுறைகளை பேணுங்கள் இதையெல்லாம் தாண்டி, இந்த சமுதாயத்தில் பெருநாளைக் கொண்டாடுகின்ற ஒரு நிலை வருகின்ற போது உலக சுகாதார அமைப்பு, அரச வைத்தியர் சங்கம், இலங்கையின் சுகாதரப்பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கேற்ப முஸ்லிம் சமுதாயம் நடந்து கொள்ள வேண்டும்.

இதுவொரு நெருக்கடி நிறைந்த காலகட்டம். வீதிகள், கடைத்தெருக்களிலும் சரி கட்டாயமாக கிருமித்தொற்று பிறரிலிருந்து நமக்கு வருவதைத் தடுப்பதற்காக நம்மிலிருந்து பிறருக்கு செல்வதைத் தடுப்பதற்காகவும், மாஸ்க் அணிகின்ற முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென்பதுடன், சகல இடங்களிலும் கை கழுவுகின்ற முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீடுகளுக்குச் செல்கின்ற போது கைகளைக் கழுவிக்கொண்டு செல்கின்ற நிலையை உருவாகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், யாருக்கு நோயுள்ளது? யார் எம்மிடம் வந்து போகிறார்கள் என்பது எமக்குத்தெரியாது. எனவே, இந்த விடயங்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால், கட்டாயமாக நாங்கள் கைகளைக் கழுவிக்கொள்தல் அல்லது கைகளுக்கு உரைகளை அணிந்து கொள்ளும் நடைமுறையை பேணுவதுடன், மிக முக்கியமாக சமூக இடைவெளிகளைப் பேணிக்கொள்ளல் அவசியமாகும்.

சாதரணமாக ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படுகின்ற போதே, சமூக இடைவெளிகள் கேள்விக் குறியாக்கப்படுகின்ற நிலையைப் பார்க்கின்றோம். பெருநாள் காலங்களில் எவ்வாறு இவைகளைக் கடைப்பிடித்து இந்த நோயிலிருந்து சமுதாயம் விடுபடுமென்று தெரியவில்லை. இறைவன் தான் நம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்.

அதிகாரிகளின் பொறுப்பு குறிப்பாக, இந்த சமூகத்திலும் பிரதேசத்திலும், நாட்டிலும் இருக்கின்ற அதிகாரிகளுக்கும் பொறுப்பிருக்கின்றது. பிரதேச செயலாளர்கள், பிரதேச சபையின் தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உலமாக்கள், சமூகத் தலைவர்கள் என எல்லோரும் இதனைக்கட்டுப்படுத்த வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தத்திலே இருக்கிறார்கள்.

நாம் சொல்லி விட்டோம். இனி எவர் எப்படிப்போனால் என்னவென்று? எவரும் இருந்து விட முடியாது. அப்படி இருந்தால், அதன் விளைவுகளை நாம் எல்லோரும் சேர்ந்து தான் சுமக்க வேண்டுமென்ற யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு நாமனைவரும் செயற்பட வேண்டும்.

இறுதியாக, நபி (ஸல் )நீங்கள் எல்லோரும் பொறுப்புதாரிகள். உங்கள் மீது சுமத்தப்பட்ட பொறுபுக்கள் தொடர்பில் நீங்கள் எல்லோரும் விசாரிக்கப்படுவீர்கள் என கூறியுள்ளார்கள் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

எனவே, எல்லோரும் நமது பொறுப்பு தொடர்பில் அல்லாஹ்வுக்கு பொறுப்புச்சொல்ல வேண்டுமெனும் அடிப்படையில், அனைத்து அதிகாரிகளும் சமூகத்தலைவர்களும் செயற்படுமாறு அன்பாகக் கேட்டுக் கொண்டு, எமது சகோதரிகள், இளைஞர், யுவதிகள் எங்கள் கிராமத்திலும் ஊரிலும் கொரோனா காரணமாக ஒரு உயிரை இழந்ததன் பிறகு தான், அந்த சடலம் எரிக்கப்பட்ட பின்னர் தான் நாங்கள் சிந்திப்போம் விழிப்புணர்வு பெறுவோம் என்றவொரு நிலையிருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது.

"நீ நினைவூட்டு, நிச்சயமாக நினைவூட்டல் என்பது மூஃமின்களுக்குபயனளிக்கும்" - அல் குர்ஆன்.

உரை : அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி (MA)

எழுத்தாக்கம் : எம்.ஐ.லெப்பைத்தம்பி