Main Menu

நிழல் பலகை

நிழல் பலகை – 5 – ஓட்டமாவடி வீ.ஏ.ஜுனைட் சேர்

எஸ்.எஜ்.எம்.ரபிதீன் எம்மை வழி நடத்த சிறந்த அனுவபங்களே தேவைப்படுகின்றன. அந்த அனுபவங்களின் மூலக்கருத்தாற்றல்கள் நம் முன்னோர்கள். அந்த முன்னோர்கள் வழியூடாக நம் கண் முன்னே வாழும் ஒரு ஜீவன் தான் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய 'ஜுனைட்' சேர் எனும் ஆளுமை.

ஜுனைட் சேர் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் மிகவும் ஹான்ட்சமான பையனாக இருந்துள்ளார் என்பதை எனது உறவினர் ஒருவர் மூலமாக நான் அறிந்துள்ளேன். இவருடைய இளமைக்காலத்தில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகும், அம்சமும் நிறைந்த வாலிபனாகவும் வலம் வந்ததாகச் சொல்கின்றார்கள்.

வெண்ணிற தலை முடியும், சிரித்தால் சிரிப்பேன் அழுதால் அழுவேன் எனும் முகக்கண்ணாடி பிம்பத்தின் பிரதிபலிப்பில் ஒளிரும் அகத்தின் நகல். பார்ப்பதற்கு ஒரு இராணுவ மேஜர் தோற்றத்தின் உயர்ந்த உடலமைப்பு. நேர்த்தியான உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதில் இவர் இன்றும் இளைஞர். முழங்கையில் மறையுமளவிற்கு சட்டையின் கை மடிப்பும், அதுக்கேற்றாற்போல் பேன்ட் அணியும் சிறப்பும் இவரோடு இளைஞர்கள் போட்டி போட வேண்டுமென்ற அளவிற்கு இவருடைய கரக்டர் அமைந்திருக்கும்.

சமகாலத்தில் வலைத்தளங்களில் எல்லோராலும் நோக்கப்படும் அதி முக்கியமான சிலரில் கல்குடாவில் முதன்மை பெறும் ஒருவராக இவர் திகழ்கின்றார்.

ஒரு ஆசான், பொதுவெளி விமர்சகர் என்பதைத்தாண்டி இவர் ஓர் கவிஞரும் கூட. இவருடைய கவிதைகளில் அநேகமாக விழிப்புணர்வுப் போக்குகளே புதைந்து கிடக்கின்றன. இன்னும் சொல்வதென்றால் சுத்தியும், கத்தியும் நன்றே நின்று சிகப்பு நிற குருதி வேட்டையாடுகின்றன அவருடைய கருத்துக்கள். கவிதை மற்றும் சொல்லாடல்களில் புரட்சிகள் தெறிக்கின்றன என்பதும் கூடுதல் அம்சமாகும்.

ஜுனைட் சேர் இன்று தனது கல்விப்பணியைத் தாண்டி மக்கள் முனைப்போடு செயலாற்றும் ஒரு தீர்க்கதரிசி விமர்சகர். எதையும் அலட்சியமாகக் கடந்து செல்ல முடியாத முன்னோடிகளில் இவர் முக்கியமானவொருவர்.

சதக்கா சேரைப்பற்றிய எனது நிழல் பலகையொன்றில் சில சாரம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த சாரம்சங்களில் ஆளுமைத்தன்மை, கருத்தாற்றல்கள் மற்றும் நிருவாகத் திறமைகள் என்பன சிலருடைய மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், அதுக்கேற்ற தகுதியான ஆளுமைகளில் ஒருவர் தான் ஜுனைட் சேர்.

ஜுனைட் சேரோடு தனிப்பட்ட அனுபவம் எனக்கு இருந்ததில்லை. ஆனாலும், சமகால நிகழ்வுகள் மற்றும் அவருடைய சொல்லாடல்கள் மூலமாக பல விடையங்களை அவர் எமக்கு கற்றுத்தந்து கொண்டிருக்கின்றார். நீதாமன சிந்தனைகளில் அவரைப்புரிந்து மூழ்கியிருப்பவர்களுக்கு அவரைப்பற்றிய எண்ணங்கள் நன்றே புரிந்திருக்கும்.

இணையத்தளங்களை பலர் பொழுதுபோக்கு என்ற ஒன்றுக்காகவே இன்று பயன்படுத்துவதை நாம் பார்க்கலாம். ஆனால், அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் முறையை கையாளும் ஒரு மூளைசாலி தான் ஜுனைட் சேர்.

கல்வி, நிருவாகம், அரசியல் என ஆரோக்கியமான விமர்சனங்களை மக்கள் மத்தியில் முன் வைக்கும் ஒருவர் இவர். மக்கள் மேம்பாட்டுக்காக தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு பொதுநலவாதியாகும்.

ஏதோவொரு துறையில் நிருவாகம் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவற்கு காரணம் கேள்வி கேட்பார்கள் இல்லையென்பதும் விமர்சனம் தொடுக்கப்படாமல் இருப்பதும் அறிவுரைகள் வழங்கப்படாமல் இருப்பதுமே எனக்கூற முடியும்.

ஜுனைட் சேர் அதில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தெளிவான கருத்துக்களை முன் வைக்கின்றார் என்பது முக்கியமாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இன்றைக்கு எந்தவொரு துறையை எடுத்துக்கொண்டாலும் நடவடிக்கைகள் அனைத்தும் வலைத்தளத்தின் மூலமாகவே அனைவரையும் சென்றடைகின்றன . அதில் நல்லது கெட்டது என்பதை யாரும் பிரித்துப் பார்க்க முயற்சிப்பதில்லை. ஆனால், சரியாக விமர்சனங்களையும் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்தோமென்றால், அது நம்மை வேறு திசைக்கு கொண்டு செல்ல வழிவகுக்குமென்பது நிதர்சனமான உண்மை.

ஜுனைட் சேருடைய போக்கும் சிந்தனையும் மக்கள் மீதே கொட்டிக்கிடக்கின்றன. கல்வி, மதம், அரசியல் என இவருடைய கருத்துக்கள் மூலமாக அடுத்த கட்ட நகர்வுக்கு வித்திட்டதை கடந்த காலத்தில் நாம் அவதானிக்க முடிந்தது.

நடுநிலையாகவும் பக்கச்சார்பற்ற இவருடைய வாதங்கள் கல்குடாவின் முக்கியமாக ஒவ்வொருத்தரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய இன்றைய காலகட்டத்தின் சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம்.

துணிவு, யாருக்கும் சோரம் போகாத ஆண்மை என்பன இவருடைய இன்னுமொரு விசேடங்களில் ஒன்று. மக்களுக்காக மக்களின் சார்பாக அறிந்த முகமோ அறியாத முகமோ என்று பாராமல் உடைத்தெறிந்து தயங்காமல் கருத்துக்களை கொண்டு செல்பவர் இன்றைய கல்குடாவின் விமர்சன பிதாமகன் இவராகும்.

சமூக சிந்தனை, தூரநோக்கு சிந்தனை என்பவற்றை முன் வைக்கும் இவரைப்போன்றோரை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் வாழும் போதே வாய்ப்புக்களை வழங்கும் போது தான் நிருவாகத்திறமைகள் வளர்ச்சி பெறும். "குறைந்தபட்சம் இவர்களுடைய எண்ணங்களையாவது உள்வாங்கிக் கொள்வதினூடாகவும் பயன்பெற வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து நடந்து கொண்டால் காலச்சிறந்ததாகும்.

ஜுனைட் சேர் எல்லோரிடமும் மதிப்பளித்து நடக்க முனையும் தன்மையுடையவர். சிறியவர்கள், பெரியவர்கள், படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி தனது நட்பின் வட்டத்தை உருவாக்கி கொண்டுள்ளவரும் கூட.

எனது நிழல் பலகையில் முக்கியமான கல்வியாளர்களில் இவரும் ஒருவர். இவர்களை போன்றோர் வாழும் போதே நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

பாசத்தோடு மாணவர்களை 'மகன்' என அழைக்கும் இவர், நம் எல்லோருக்கும் கிடைத்த ஆசான். பண்பாட்டையும் நாகரீகத்தையும் இவர் மூலமாக நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

பாசமிகு தந்தை, கல்வியூட்டும் ஆசான், தோழமை பேசும் தோழன், சமூக சிந்தனையோடு வாழும் சமூகவாதி என தனித்துவமான பன்முகப்பிரதிபலிப்பின் மனிதராக திகழ்கின்றார் இவர். இவ்வாறான மனிதர்கள் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு பணியாற்ற முன் வர வேண்டும்.

"இறைவன் இவருடைய கல்வி, செல்வம், ஆரோக்கியம் என்பவற்றை நிறைவாக வழங்க வேண்டும்" எனப்பிராத்திப்போமாக.

சுற்றியிருக்கும் நல்ல மனிதர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொள்.! கற்றுக்கொள்.! தீர்மானம் என்பது உன் சுயமாகத் தோன்றட்டும்.!